கவி பாடலாம் வாங்க - 16

தமிழில் உள்ள பாக்கள் நான்கு வகை. ஆதலின் புலவர்கள் நாற்கவிராசர் என்று பாராட்டுவார்கள்.
கவி பாடலாம் வாங்க - 16

வெண்பா வகை-1

தமிழில் உள்ள பாக்கள் நான்கு வகை. ஆதலின் புலவர்கள் நாற்கவிராசர் என்று பாராட்டுவார்கள். நாற்கவிராச நம்பி என்ற புலவர் ஒருவர் அகப்பொருள் விளக்கம் என்ற நூலை இயற்றியிருக்கிறார். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நான்கு பாக்களிலும் முதலில் நிற்பது வெண்பா. அதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது வெண்டளை.
பன்னிரண்டாவது கட்டுரையில் ("கவி பாடலாம்' மூல நூலில் 12ஆவது கட்டுரை. அது, இத்தொடரில் 13ஆவது கட்டுரை) நேரிசை வெண்பாவின் இலக்கணத்தைப் பார்த்தோம். இப்போது அதன் வகைகளையும் மற்ற வெண்பாக்களையும் கவனிப்போம்.

குறள் வெண்பா

இரண்டு அடிகளை உடையதாக வருவது குறள் வெண்பா. வெண்பாக்களுக்குரிய பொது இலக்கணங்களாகிய 1. வெண்டளை அமைதல், 2. ஈற்றடி முச்சீராக இருத்தல், 3. மற்ற அடிகள் நாற்சீராய் வருதல், 4. ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளில் ஒன்றைப் பெற்று வருதல் என்பவை எல்லா வெண்பாக்களிலும் இருக்க வேண்டும். ஆகவே, குறள் வெண்பாக்களில் முதலடி நாற்சீராகவும் இரண்டாம் அடி முச்சீராகவும் வரும்.
இவ்வாறு வரும் குறட்பாக்களை எதுகையை நோக்கி இரண்டு வகையாகப் பிரிப்பார்கள். இரண்டு அடிகளும் ஓரெதுகையாக வரலாம்; அப்படி இல்லாமலும் வரலாம். எதுகை வேறுபாட்டை விகற்பம் என்று குறிப்பது மரபு. ஒரே எதுகையாக அமைந்தால் அது ஒரு விகற்பம் என்றும், ஒவ்வோரடியும் வெவ்வேறு வகையில் இருந்தால் இரு விகற்பம் என்றும் கூறுவர்.

"அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு'

என்ற குறளில் இரண்டடியும் ஒரே எதுகையாக வந்தன. அகர-பகவன் என்ற முதற் சீர்கள் ஓரெதுகையாக நிற்பதைக் காண்க. இது ஒரு விகற்பக் குறள் வெண்பா.

"உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்
பெருந்தேர்க்கச்சாணி யன்னா ருடைத்து'

இந்தப் பாட்டின் இரண்டடியிலும் ஒரே எதுகை அமையவில்லை. இரண்டும் வேறு வேறாக உள்ளன. இது இருவிகற்பக் குறள் வெண்பா.
திருக்குறளில் இந்த இருவகைப் பாடல்களும் வருவதைக் காணலாம். குறள் வெண்பாவினால் அமைந்த நூல்களில் சிறந்ததாதலின் வேறு பெயர் அமையாமல் திருக்குறள் என்ற பெயரே, திருவள்ளுவர் இயற்றிய நூலுக்கு அமைந்தது. ஒüவையார் பாடிய ஒüவை குறள் என்ற நூலும், திருவருட் பயன் என்ற நூலும், வேறு சில நூல்களும் முழுவதும் குறட்பாக்களால் அமைந்தவையே. பொருள் செறிவு நிரம்பியதாக இருந்தால்தான் குறளுக்கு அழகு. இரண்டடி வெண்பாவாகக் கணக்குப் பார்த்து எழுதி விட்டால், இலக்கணப்படி அது குறளாக இருக்கலாம்; ஆனாலும் சிறந்த குறள் என்று சொல்ல இயலாது. எல்லா வகையாலும் சிறப்புடைய திருக்குறளைப் போலக் குறட்பாவிலும் நூல் அமைவது மிகவும் அரிது.

நேரிசை வெண்பா

நேரிசை வெண்பாவின் இலக்கணத்தை முன்பு கவனித்தோம். அந்தப் பாவில் எதுகையை நோக்கி இரண்டு வகை உண்டு. முதல் இரண்டடியும் தனிச் சொல்லும் பின் இரண்டடியும் யாவும் ஒரே எதுகையாக அமைந்தால் ஒரு விகற்ப நேரிசை வெண்பா என்று பெயர் பெறும்.

"முந்தையோர் பாடிவைத்த முத்தமிழ்நூல் தம்மையெல்லாம்
அந்துமுதற் பூச்சி அழிக்காமல் - வந்தெடுத்துத்
தந்தபெரு வள்ளல் தமிழ்ச்சாமி நாதகுரு
செந்தமிழ்த்தாய் பெற்றமணிச் சேய்'.

இந்தப் பாட்டில் எல்லாம் ஓரெதுகையாக அமைந்திருப்பதால் இது ஒரு விகற்ப நேரிசை வெண்பா ஆகும். முதல் இரண்டடியும் தனிச் சொல்லும் ஓரெதுகையாகவும், பின் இரண்டடிகள் ஓரெதுகையாகவும் வந்தால் அது இருவிகற்ப நேரிசை வெண்பா என்று பெயர் பெறும்.

"காமர் கயல்புரளக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் தளையவிழப் - பூமடந்தை
தன்னாட்டம் போலுந் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு'

இந்த நளவெண்பாப் பாட்டு இருவிகற்ப நேரிசை வெண்பா. இவ்வாறன்றி வேறு எப்படி எதுகை மாறி வந்தாலும் அது நேரிசை வெண்பா ஆகாது; இன்னிசை வெண்பா என்னும் பெயர் பெறும்.

(தொடர்ந்து பாடுவோம்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com