சகுந்தலையும் நற்றிணைத் தலைவியும்!

மகாகவி காளிதாசர் எழுதிய சாகுந்தலத்தின் பிரகடனம் இது: செடிகள் கொடிகள் மரங்கள் எல்லாரும் நம் தேசத்தின் குடிகள்.
சகுந்தலையும் நற்றிணைத் தலைவியும்!

மகாகவி காளிதாசர் எழுதிய சாகுந்தலத்தின் பிரகடனம் இது: செடிகள் கொடிகள் மரங்கள் எல்லாரும் நம் தேசத்தின் குடிகள். இந்த நாட்டின் குடிமக்கள் என்பதால், செடிகளும் கொடிகளும் மரங்களும் நமது சகோதர சகோதரிகள். இது சாகுந்தலத்தின் காவியப் பிரகடனம்; நம் தேசத்திற்கான சாத்திரப் பிரகடனம்; சாத்தியப் பிரகடனம். 
கானகத்தின் வளர்ந்த பூங்கொடிகளுக்கு நடுவில், நடந்து கொண்டிருக்கும் பூங்கொடிகளாய் சகுந்தலையும் அவளது தோழியரும். அது தவக் காடு; முனிவர்களின் தவக்கூடு; மோனப் பூக்களை வார்த்தை வண்டுகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. நந்தவனத்தின் கொடிகள் வேரைப் பெயர்த்துவிட்டு, நடந்து வருவதைப் போல, அசைந்து இசைந்து நடந்து செல்லும் காட்சி. சகுந்தலை தம் தோழியருடன் சேர்ந்து அங்கே செடி கொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறாள். 
இலைகளின் சலசலப்பும், துளிர்களின் தலையசைப்பும், கை நீட்டி நம்மோடு பேசும் மெüன மொழி; அந்த மெüன ரீங்காரத்தில், நம் ஆன்ம லயம் பேசும் ! அந்த சகுந்தலை, மாமரத்துடன் ஒன்றி நிற்பது, காதலனை அண்டி நின்றதைப் போல இருக்கிறது. அப்போது, சகுந்தலை, "நம் தோட்டத்தின் செடி கொடிகள், வெறும் செடிகொடிகள் அல்ல, எல்லாரும் எனது சகோதரிகள்' என்கிறாள். இந்தச் சொற்கள் சகுந்தலையின் சொற்களாய் காளிதாசன் நமக்குச் 
சொல்வது.
தன்னழகால் தன்னைச் சேர்ந்ததையெல்லாம் அழகு செய்த சகுந்தலை, இந்தச் சொற்களைச் சொல்கிறபோது, எல்லாவற்றையும் விட மேம்பட்டதாய், அவளது உள்ளத்தின் அழகு, எண்ணத்தின் அழகு, சிந்தை செயலின் அழகு, எல்லாமாய் சகுந்தலை ஒரு பேரழகியாகி விடுகிறாள்.
இயற்கையுடன் இயைந்த (உறவு) வாழ்க்கை வாழ்பவளாய் சகுந்தலையைக் காளிதாசன் நம் கண்முன் உலவ விடுகிறான்; வீசும் காற்றினை, மூச்சுக்குள் உயிராய் சேர்க்கும்பொழுது, அதை நேசக்காற்றாய் உணர்வுக்குள் கலந்து மூச்சிழுக்கும் அற்புதத் தவ வாழ்க்கை!
இப்படி, சகுந்தலையின் சகோதரிகளாய் அந்தத் தவக்காட்டு வனச்செடி கொடிகளைக் காளிதாசன் நம் மனத்தில் இசைக்கும்பொழுது, சங்கத் தமிழின் நற்றிணைப் பாடல் காட்சி ஒன்று இதற்கு மேலும் மெருகூட்டுகிறது.

நற்றிணைக் காட்சி:

இந்த நற்றிணைக் காட்சி (விளையாடு ஆயமொடு வெண்மணல்-172) பலரும் படித்து ரசித்ததுதான். இது தோழி கூற்றாய் ஒலிக்கிறது. அதாவது, தலைவியைக் காண்பதற்குப் பகற்குறி வந்து செல்லும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது (விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு குறிப்பால் உணர்த்துவது).
"நாங்கள் விளையாடுகின்ற தோழியர் கூட்டத்தோடு கடற்கரையில் வெண்மையான மணலில் புன்னை விதையை வைத்து மணலில் அழுத்தி, விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது மழை வந்தது. விளையாட்டை முடித்து வீட்டிற்குச் சென்றுவிட்டோம். நான்கு நாள்கள் தொடர்ந்து மழை பெய்தது. ஐந்தாம் நாள் அதே இடத்திற்கு விளையாடச் சென்றபோது, அங்கு ஒரு செடி முளைத்திருந்தது. நாங்கள் மணலில் அழுத்தி விளையாடிய புன்னை விதை, புன்னைச் செடியாகிவிட்டது. அதனை எடுத்துக் கொணர்ந்து என் தாய் இனிதாக வளர்த்தாள். அது வளர்ந்து பெரிய மரமானது. என் தாய் அப்புன்னை மரத்தைத் தன் முதல் மகளாகக் கருதினாள். என்னிடமும் புன்னை மரம் உன் தமக்கை என்று கூறினாள். என்னுடைய காதலன் அப்புன்னை மரத்தின் அடியில் காதல் செய்ய முயன்றபோது, நான் "வேறு மரநிழலுக்குச் செல்வோம், இங்கு என் தமக்கை நிற்கின்றாள், அதனால் உம்மோடு பேசுவதற்கு எனக்கு வெட்கமாக இருக்கிறது' என்று தலைவி கூறுவதாகக் கூறி, பகற்குறி வருவதைத் தடுத்து வரைவு கடாவுகிறாள் தோழி.
உன்னிலும் சிறந்த தங்கை இவள் (நுன்னினும் சிறந்த நுவ்வை) என்று அன்னை அந்தப் புன்னை மரத்தைச் சொல்கிறாள். செடி கொடிகளை சகோதர சகோதரியாய் வாழ்வாதாரப் பிரகடனம் செய்யும் இந்தச் சொற்கள், காளிதாசரின் கற்பனை அல்ல; வாழ்க்கை வழி; வாழும் நெறி. வழிவழியாய் வரும் நம் தேசக் காவியத்தின் நேச நெறி.
பகவான் அரவிந்தர், "இந்தப் பாரத தேசம் என்பது, வெறும் இடம், மண், வெறும் நீள் அகலம் இல்லை. இந்த மரங்களையும் ஆறுகளையும் வனங்களையும் உள்ளடக்கிய உயிரோட்டம்' என்கிறார்.
மகாகவி பாரதி சொன்ன, "நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்' எனக் காலங்காலமாய்த் தொடரும் பிரகடனம்! அது நம் தமிழ் இலக்கியத்தின் சொல், செயல், வாக்கு சங்கமித்த சத்தியப் பிரகடனம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com