"மாலை மாற்றும்' மரபு!

திருமண நிகழ்வில் தம்பதியர் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொள்ளுதல் தமிழர்தம் மரபாகும். இவ்வாறு செய்வது, அவ்விருவரின் அன்புப் பிணைப்பை உறுதிப்படுத்தவே ஆகும்.
"மாலை மாற்றும்' மரபு!

திருமண நிகழ்வில் தம்பதியர் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொள்ளுதல் தமிழர்தம் மரபாகும். இவ்வாறு செய்வது, அவ்விருவரின் அன்புப் பிணைப்பை உறுதிப்படுத்தவே ஆகும். ஆனால், இல்லற வாழ்வின்பொழுது தன் அன்பு மனைவியிடம் மாலை மாற்றிக்கொண்ட கணவனொருவன், பின்பு தன் வேந்தனாலும் மாலை மாற்றிக் கொள்ளப்பட்டான் என்பது சுவையானதொரு சங்கப்பாடற் செய்தியாகும்.
ஒருமுறை படைத்தலைவன் ஒருவன் பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்டுவரும் பொருட்டு, கரந்தைப் பூச்சூடிப் போருக்குப் புறப்பட்டான். அப்பொழுது, மறக்குடி மகளாகிய அவன் மனைவி, தன் கணவனிடம் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பினால், தான் கழுத்தில் அணிந்திருந்த மாலையைக் கழற்றி அவனுக்குச் சூட்டி, அவன் மார்பில் தொங்கிய மாலையைத் தான் அணிந்துகொண்டு அவனுக்கு விடைகொடுத்து அனுப்பினாள்.
தூய உடையணிந்து போருக்குப் புறப்பட்ட அவன், நேரே சென்று, தன் தலைவனான வேந்தனைக் கண்டான். இவ்வீரனிடம் மிகுந்த அன்பும் மதிப்புமுடைய அவ்வேந்தன், தான் அணிந்திருந்த மணிமாலையைக் கழற்றி வீரனின் கழுத்தில் அணிவித்து, அவ்வீரன் அணிந்திருந்த ஒற்றைவட மாலையைத் தான் அணிந்து மகிழ்ந்தான். மறவன் வேந்தனிடமிருந்து விடைபெற்றான். இந்நிகழ்வினைக் கண்டு மகிழ்ந்த சிலர், அவ்வீரனின் மனைவியிடம் சென்று அதனை உரைத்து, அவளை மகிழ்வித்தனர். 
போருக்குச் சென்றவன் கடும்போர் புரிகிறான். ஆநிரைகள் பகைவரிடமிருந்து மீட்கப்பட்டு, அவை ஊர் நோக்கி ஓட்டிவரப்படுகின்றன. எதிர்பாராத விதமாகப் பகைவர் எறிந்த வேலொன்று இவனது மார்பில் தைக்க, குருதி பெருகிக் கீழே வீழ்ந்து மாண்டு போகிறான் மறவன். அது காட்டுப்பகுதி. பிணங்களோடு பிணமாகிக் கிடக்கும் இவனைச் சுற்றிப் பருந்து முதலிய பறவைகள் ஒலியெழுப்பி வட்டமிடுகின்றன. போரில் கணவன் மாண்ட செய்தியறிந்து துடிதுடித்துப்போன மனைவியும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டாள். துடியரும் பாணரும் அங்கிருந்தனர். நரிகளோ ஊளையிட்டுக் கொண்டிருந்தன. அந்த நரிகளை வெருட்டி அனுப்பிவிட்டுத் தன் கணவன் பிணத்தருகே அவள் வந்தாள். 
வேலால் புண்பட்டிருந்த அவனது மார்பில், தான் ஏற்கெனவே கேள்விப்பட்டவாறே, பன்மணி விரவித் தொடுக்கப்பட்ட வேந்தனின் வடமாலை கிடப்பதைக் கண்டாள். "வேந்தன் சிறப்பு செய்தாலும் செய்யாவிட்டாலும், பயன் கருதாமல் போரிட்டு வீரமரணம் எய்த விரும்புபவன் என் கணவன். அத்தகைய மறவனுக்குத்தான் அன்பு மிகுதியால் வேந்தன் தனது மாலையை அணிந்து, இவனது மாலையைத் தனது கழுத்தில் அணிந்து கொண்டான்; என்னைப் போலவே வேந்தனும், என் கணவனாகிய இவ்வீரன் மீது பேரன்புடையவன். ஆதலால், இவனது இறப்புச் செய்தி கேட்ட வேந்தனும், என்னைப் போலவே மிகவும் துன்புறத்தான் போகிறான்' என்று வாய்விட்டு அரற்றினாள் அவ்வன்பு மனைவி. அச்செய்தியினைக் கூறும் நெடுங்களத்துப் பரணர் என்ற புலவரின் பாடல் இது:

"சிறாஅஅர் துடியர் பாடுவன் மகாஅஅர்
தூவெள் ளறுவை மாயோற் குறுகி 
இரும்புட் பூச லோம்புமின் யானும் 
விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென்
என்போற் பெருவிதுப் புறுக வேந்தே
கொன்னுஞ் சாதல் வெய்யோற்குத் தன்றலை 
மணிமருண் மாலை சூட்டி யவன்றலை
ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே' (புறநா: 291)


இத்தகைய குறிப்புகளுள், வேப்பிலை செருகுதல், காஞ்சிப்பண் இசைத்தல், ஐயவி புகைத்தல் என்னும் குறிப்புகளைப் புறநானூறு இலக்கியத்தின் மற்றொரு பாடலிலும் (296) காணமுடிகிறது. 
மதிப்பு மற்றும் அன்பின் ஆழத்தை வெளிப்படுத்த ஒருவருக்கொருவர் மாலைமாற்றிக் கொள்ளும் சங்ககால மாந்தரின் மாண்பு படித்துச் சுவைத்து மகிழத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com