இந்த வார கலாரசிகன்

எழுத்தாளர் பாலகுமாரனின் மறைவு எனக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியை எழுத்தில் வடிக்க முடியாது. எண்பதுகளின் தொடக்கத்தில் "சாவி' வார இதழில் நான் உதவி ஆசிரியராகச் சேர்ந்த நேரத்தில்தான், பாலகுமாரன் அதில்
இந்த வார கலாரசிகன்

எழுத்தாளர் பாலகுமாரனின் மறைவு எனக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியை எழுத்தில் வடிக்க முடியாது. எண்பதுகளின் தொடக்கத்தில் "சாவி' வார இதழில் நான் உதவி ஆசிரியராகச் சேர்ந்த நேரத்தில்தான், பாலகுமாரன் அதில் "மெர்க்குரிப் பூக்கள்' என்கிற தனது முதல் தொடர்கதையை எழுதத் தொடங்கி இருந்தார். அச்சுக்குப் போவதற்கு முன்பு அதை நான் உட்பட ஆசிரியர் குழுவினர் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் ஆர்வத்துடன் படித்தபோதே தெரியும், மிகப்பெரிய "கதை சொல்லி' ஒருவர் உருவாகிறார் என்பது.
அப்போது அவர் "டாஃபே' நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஸ்கூட்டரில் அவர் வந்து இறங்கியது, ஸ்டைலாக "சிகரெட்' பற்ற வைத்துப் புகையை விடுவது, இதையெல்லாம் கூட நாங்கள் ரசித்ததுண்டு. வானத்துக்கும் பூமிக்கும் இடையேயுள்ள எதைப் பற்றி வேண்டுமானாலும், எத்தனை நேரம் வேண்டுமானாலும் அவரால் விமர்சிக்கவும், விவரிக்கவும் முடியும் என்பது அந்த ஆளுமை ஏற்படுத்திய பிரமிப்பு.

எல்லோருக்கும் அவர் "எழுத்துச் சித்தர்' எழுத்தாளர் பாலகுமாரன். ஆனால், அவரது ஆரம்பகால நண்பர்களுக்கு அவர் எப்போதுமே "பாலா'தான். "சாவி' அலுவலகத்தில் மாலன், சுப்பிரமணிய ராஜூ, பாலகுமாரன் ஆகிய மூவரும் மும்மூர்த்திகளாகவே வலம் வந்தனர். அவர்களுடைய எழுத்தைப் படிப்பதற்காகவே "சாவி'க்கு நிறைய வாசகர்கள் உருவானார்கள். பாலகுமாரனின் "மெர்க்குரிப் பூக்கள்', "அகல்யா', "இரும்புக் குதிரைகள்' தொடர்களுக்கு வந்த வாசகர்கள் கடிதங்களைப் பத்திரப்படுத்தாமல் போனது நான் செய்த தவறு. அவை ஓர் அற்புதமான தொகுப்பாக மட்டுமல்ல, வாசகனின் பார்வையில் அந்த எழுத்து ஆளுமை குறித்த பதிவாகவும் இருந்திருக்கும்.

ஏறத்தாழ 35 ஆண்டுகள் எங்களுக்குள் பரிச்சயம் என்றாலும் அதை நெருக்கம் என்று சொல்லிவிட முடியாது. நாங்கள் அடிக்கடி சந்திப்பதில்லை, தொலைபேசி உரையாடலும் குறைவு. ஆனால், என் மீது அவரும், அவர் மீது நானும் வைத்திருந்த அன்பு அளப்பரியது. "தினமணி' சென்னையில் நடத்தும் எந்த நிகழ்ச்சியானாலும், தவறாமல் வந்து முதல் வரிசையில் அமர்ந்துவிடுவார். அழைப்புக்காகக் கூட அவர் காத்திருப்பதில்லை என்றால், என் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருந்தார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஜெயகாந்தனுக்குப் பிறகு தமிழ் எழுத்துலகத்தில் மிகப்பெரிய ஆளுமையாக வலம் வந்தவர் பாலகுமாரன் மட்டுமே. கல்கி, ஜெயகாந்தன், சுஜாதா ஆகியோர் தன்னிகரில்லாத எழுத்தாளர்களாக வலம் வந்தாலும், பாலாவுக்கு இருந்த அளவுக்கு அவர்களது எழுத்துக்குப் பன்முகத்தன்மை இருக்கவில்லை என்பது எனது கணிப்பு. சரித்திர நாவல்களைக்கூட விட்டு வைக்கவில்லை என்பதல்ல, அதிலும்கூட வெற்றிக்கொடி நாட்ட அவரால் முடிந்தது என்பதுதான் பாலாவின் தனிச்சிறப்பு.

எழுதிக் குவித்திருக்கிறார். எழுதி எழுதிக் கையில் தழும்பு விழுந்துவிட்ட அளவுக்கு எழுதிக் குவித்திருக்கிறார் பாலகுமாரன். அதற்காக அவர் தன்னையறியாமல் உடலை வருத்திக் கொண்டதும், மூளையைக் கசக்கிக் கொண்டதும்தான் அவரது ஆயுளைப் பறித்துக்கொண்டது போலும். 71 எல்லாம் ஒரு வயதா, மனிதன் மண்ணைவிட்டு மறைவதற்கு?

கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே, "நான் தினமணிக்கு எழுதப் போகிறேன். இதுவரை வெளிவராத ஒன்றை எழுதப் போகிறேன்' என்று பல முறை என்னிடம் "பாலா' தெரிவித்திருக்கிறார். நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் இதைத் திரும்பத் திரும்பச் சொன்னார். நான் மட்டும் சற்று அழுத்தம் கொடுத்து, எழுதச் சொல்லியிருந்தால், வித்தியாசமான பாலகுமாரனின் வித்தியாசமான படைப்பு கிடைத்திருக்கக்கூடும். தவற விட்டுவிட்டேன். இனி அதைச் சொல்லி என்ன பயன்? அழுதென்ன பயன்? "பாலா' திரும்ப வரமாட்டார். ஆனால், இந்தக் குற்ற உணர்வு எனது வாழ்நாள் எல்லாம் என்னைத் துரத்தும்... தூங்கவிடாது!

நமது "தினமணி' இணைப்பான "இளைஞர்மணி'யில் தொடராக வந்தது சிபி குமரன் எழுதிய "நாளை நான் ஐஏஎஸ்' என்கிற கட்டுரைத் தொடர். அது தொடராக வந்தபோது படித்திருந்தாலும்கூட, இப்போது அதுவே புத்தகமாக வெளிவந்து படிக்கும்போதுதான் புரிகிறது, சிபி குமரன் எத்தகைய அரிய பதிவைச் செய்திருக்கிறார் என்பது.

மாணவர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான பெற்றோரும் தன்னுடைய மகனோ மகளோ, மாவட்ட ஆட்சியராக, அரசுத்துறை அதிகாரியாகப் பதவி வகிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்குத் தயாராவது எப்படி என்பது அவர்களுக்குத் தெரியாததால்தான், பலரும் பொறியியல் படிப்பை நாடுகின்றனர். அப்படிப்பட்ட இளைஞர்களுக்கும், பெற்றோருக்கும் என்ன செய்தால், எப்படிப் படித்தால் இந்தியக் குடிமைப்பணி தேர்வுக்குத் தயாராக முடியும், வெற்றிபெற முடியும், தமிழ் பள்ளியில் படிக்கும் மாணவர்களையும் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு ஆற்றுப்படுத்துவது எப்படி என்பதையெல்லாம் உணர்த்த முற்பட்டிருப்பதுதான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு.

மு.சிபி குமரனின் "நாளை நான் ஐ.ஏ.எஸ்' என்கிற இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபோது, எனக்கு ஒரு சிறிய வருத்தம் உண்டாயிற்று. இந்தப் புத்தகம் 40 ஆண்டுகளுக்கு முன்பு சிபி குமரனால் எழுதப்பட்டு, அதை நான் படித்திருந்தால், ஒருவேளை நானும் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி, இப்போது ஓய்வு பெற்றிருப்பேனோ என்னவோ?

கவிஞர் அறிவுமதியை ஆசிரியராகவும், கவிஞர் பழநி பாரதியைப் பொறுப்பாசிரியராகவும் கொண்டு வெளிவரும்
"தை' கவிதை இதழ் குறித்து இதற்கு முன்பு ஒரு முறை எழுதி இருக்கிறேன். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் அனைவரின் படைப்புகளும் "தை' கவிதை இதழில் வெளிவருகின்றன. எனக்கு அனுப்பித் தரப்பட்டிருந்த, இந்த அற்புதமான முயற்சியின் சமீபத்திய இதழில் வெளிவந்திருந்தது கவிஞர் நை.மு.இக்பாலின் "கடைசிக் கேள்வி' என்கிற கவிதை.

பல்லாக்கை அலங்கரித்துப் 
பச்சை போர்த்தி
மல்லிகைச் சரமிட்டுத்
தோள் வலிக்கக்
குழி நோக்கிச் சுமந்து செல்லும்
தோழர்களே சொல்லுங்கள்
நான் 
மட்கும் குப்பையா?
மட்காக் குப்பையா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com