இலக்கியத்தில் பொருளியல் சமூகம்

சங்க காலம் கட்டமைக்கப்பட்ட அமைப்பின் முதல் பொருளே நிலமும், பொழுதும்தான். சொத்து என்பதை உருவாக்கும் முனைப்பில் மனித சமூகம் வேகமாக நடைபோட்டுக் கொண்டிருந்த ஆரம்ப
இலக்கியத்தில் பொருளியல் சமூகம்

அகமும் அறமும்:

சங்க காலம் கட்டமைக்கப்பட்ட அமைப்பின் முதல் பொருளே நிலமும், பொழுதும்தான். சொத்து என்பதை உருவாக்கும் முனைப்பில் மனித சமூகம் வேகமாக நடைபோட்டுக் கொண்டிருந்த ஆரம்ப காலகட்டத்தில் சங்க காலம் என்பதால் நிலப் பாகுபாடும் அதன் கூறாக அமைந்த முதல், கரு, உரிப்பொருள்களும் கட்டமைக்கப்பட்டன எனலாம். இது அந்தந்த நிலத்தின் உரிமையையும், உரிமை சார்ந்த ஆளுமையைத் தக்கவைக்கவும் உலகுக்குப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டது. அதன்படியே இலக்கியங்களும் படைக்கப்பட்டன. இது அக்காலகட்ட அடையாளத் தேவையாகக்கூட அமைந்தது. அதற்குச் சான்றாக "பிறைகிழான்நல்வேட்டனார்' இயற்றிய நற்றிணைப் பாடல் (நற்.மருதம்.210) அமைகிறது.
தோழி தலைவனிடம் தன் உள்ளக் கருத்தைக் கூற முற்படும்போது முதலில் தலைவனின் நிலம் அவன் நாட்டின் செல்வவளம் இவற்றையே கூறுகிறாள். பின்னரே, தன் அடிமனக் கருத்தைக் கூறுகிறாள். இங்கே தலைவனின் நாட்டுவளம், செல்வச்செழிப்பின் தன்மையைப் படமாக்கிக் காட்ட வேண்டிய தேவை புலவருக்கு ஏன்? வெறும் அழகூட்டுவதுதான் அதன் நோக்கமா? இல்லை. இது பொருளியல் கட்டமைப்பு. ஆனால், அதில் ஒரு நுட்பமானஅறம் சுட்டப்படுகிறது. இன்றைய தனியுடைமைப் பொருளியல் சமூகம் தவறவிட்ட அறம், சங்க இலக்கியத்தில் பேணப்படுகிறது. தனியுடைமை ஏற்படும்போது நிகழும் சமூக மாற்றம், செல்வ வளங்கள் ஓர் இடத்தில் குவிக்கப்படும்போது, அது ஒருவேளை அறவாழ்வைசிதைக்கக்கூடும் என்ற சிந்தனையின் வெளிப்பாடு.

புறமும் அறமும்:

சொத்தை உருவாக்கவும், தக்க வைக்கவும் பெருக்கவும் முற்பட்ட சங்க காலம், அகத்தில் அறம் வைத்தது போலவே புறத்திலும் அறம் வைக்கத் தவறவில்லை. புறப் பொருளுக்கான திணைகள்அதை நமக்கு நன்கு விளக்குகின்றன. அதிலும் குறிப்பாக, பாடாண் திணையைச் சுட்டலாம். தக்கவைத்த, பெருக்கிய செல்வத்துப் பயனே ஈதல் என்பதைத் தன் ஒரு கூற்றாகக் கொண்டிலங்குவது இத்திணை. மற்ற அனைத்துத் திணையின் பயன்படுபொருள் பாடாண்திணை.
இருபத்து நான்கு வரிகளைக்கொண்ட புறநானூற்றுப் (பா.158) பாடல் ஒன்றில், பெருஞ்சித்தனார் குமணனிடம் கடை ஏழு வள்ளல்களின் கொடைச் சிறப்பைக் கூறி, "தீ ஏந்திய வேல், புகழ் மேம்பட கொடையுடனே பகைவரிடத்து உயர்வதாக' என்கிறார். இது வெறும் வாழ்த்தியல், பரிசில் கடாநிலைத்துறை என்று மட்டும் உணர்ந்து கொள்வது அல்ல. இருப்பவன் இல்லாதவனிடம் கொடுத்தல், பெற்றவன் பெற வருபவனுக்கு வழங்குதல். ஓர் இடத்தில் குவிந்த செல்வம் பரவலாக்கப்படல். தனியுடைமை பொதுவுடைமை ஆக்கும் முயற்சி. பெற்றவன் வாழ்த்துவது கொடுத்தவனுக்கு மட்டுமல்ல, கொடுக்கத் தூண்டும் சமிக்ஞை. ஆனாலும், அந்தப் பங்கீட்டை மன்னர்கள் அங்கீகரித்தே வந்தனர். இது பொருளியல் அறம். அகம் மட்டுமல்லாது புறத்திலும் கடைப்பிடிக்கப்பட்ட பொருளியல் அறம்.

பொருள்களும் பொருளியலும்:

அகத்திணையில் முதல் மற்றும் உரிப்பொருள்களை உற்று நோக்குங்கால் எளிமையானதொரு புரிதல் ஏற்படும். நிலமும் நிலம்சார்ந்த பொருளும் என்பது பொருளியலின் குறியீடு. பொருளாதார நிறைவைப் பொருத்து சமூகத்தின் கட்டமைவு உருவாகிறது. அவ்வளவும் முறையாகப் பங்கிடப்படும்போது சமத்துவ சமுதாயம் உருவாகிறது. மறுக்கப்படும்போது அறம் பிறழ்ந்த சமூகம் உருவாகிறது. இதற்குப் பாலை நிலத்தின் கருப்பொருளில் ஒன்றான தொழிலைக் கூறலாம். அது வழிப்பறியைத் தொழிலாகக் காட்டுகிறது.

மாண்பும் மகத்துவமும் நிறைந்த காலம்:

அன்றைய காலகட்டத்தில் "தேவை' என்பது தவிர்க்க முடியாததாக அமைந்தது. பொருளீட்டுவதும் பாதுகாப்பதும் பெருக்குவதும் புறம் என்று கூறப்படினும் அது இன்றைய தாராளமய, உலகமய, பொருளாதார உலகிற்கு விட்டுச்சென்ற பாடம் ஏராளம். அது பொருளீட்டலின் நோக்கமே கொடுத்துதவுதல் என்றது. தன் எல்லையை விரிவுபடுத்துவது அதிகாரத்தைச் செலுத்த மட்டுமல்ல. அறத்தின் வழி நிற்கவும் என்றது.

தனியுடைமைச் சமூகத்தில் வர்க்க முரண்பாடுகள் தவிர்க்க முடியாது என்றாலும், குறைந்தபட்ச பொருளியல் அறத்தைப் பேண வேண்டிய தேவையை 12 திணைகளும் உணர்த்தின. அவை தவறும் பட்சத்தில் அற இலக்கியங்கள் நம் சமூகத்தின் தேவையாக உணரப்பட்டன. அற வாழ்விற்கான அச்சுறுத்தல், காப்புப்பொருள் ஒன்று தேவையானபோது பக்தி இலக்கியங்கள் உயர்வு பெற்றன. அதில் ஏற்பட்ட சமூக முரண்பாடுகளையும் சமூக நீதிக் கொந்தளிப்புகளையும் எதிர்கொள்ள மறுமலர்ச்சி இயக்கங்கள் அவசியப்பட்டது. மீண்டும் சமத்துவ சமூகம் நோக்கிய ஒரு பயணம் தேவைப்பட்டது. அதற்கு இலக்கியம் கை திருப்பிக் காட்டியது சங்க காலம். வாழ்வியல் கோட்பாடுகளை உள்ளது உள்ளபடியே வழங்குவதாக அவை அமைந்தன.

நமது மகத்தான காலகட்டம் அநேகமாக சங்க காலமாகவே அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com