உளன் கண்டாய் நல்நெஞ்சே!

உலகத்தைக் காக்கும் திருநாராயணன் மீது, ஆரா அன்பினில் ஆடி ஆடி அகம் கரைந்து, இசைப் பாடி பாடிக் கண்ணீர் மல்கி நாலாயிரத்தை மங்களா சாசனம் செய்து, அன்பில் ஆழங்கால்பட்டவர்களே ஆழ்வார்கள்.
உளன் கண்டாய் நல்நெஞ்சே!

உலகத்தைக் காக்கும் திருநாராயணன் மீது, ஆரா அன்பினில் ஆடி ஆடி அகம் கரைந்து, இசைப் பாடி பாடிக் கண்ணீர் மல்கி நாலாயிரத்தை மங்களா சாசனம் செய்து, அன்பில் ஆழங்கால்பட்டவர்களே ஆழ்வார்கள். திருமால் வைகுந்தம், பாற்கடல், இராம, கிருஷ்ண அவதாரங்கள் எடுத்தாலும், நம் மனத்தில் கோயிலாய் குடிகொள்வதைத்தான் பெரிதும் விரும்புகிறார்.
நம் மனமே குடியிருக்கும் கோயில்! மாசற்ற மனமே அறம்; மனசாட்சியே கடவுளின் சாடி; அதன் வழிப்படி நடப்பதே மாட்சி; மனத்தை அவித்து வாழ்வாங்கு வாழ்வதே வீடு; நல் மனமே வல்வினையைப் போக்கி, அறம், பொருள், இன்பத்தை அடைவிக்கும் வரம்.
வையம் தகளியாய் விளக்கேற்றிய பொய்கையாழ்வார், 

"உளன் கண்டாய் நல்நெஞ்சே! உத்தமன் என்றும் உளன் கண்டாய்;
உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்; வெள்ளத்து உள்ளானும்,
வேங்கடத்து மேயானும், உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்'

நெஞ்சமே! இதை நீ அறிவாய். நம் உள்ளத்தில் உறைவதற்காகவே கடவுள் திருப்பாற்கடலிலும், திருவேங்கடத்திலும் உளன். தன்னை நினைப்பவர் உள்ளத்தில் அவன் உளன். ஆதலால் நெஞ்சமே அவனை நினை. அவனைக் காண்பது எளிது. அரிய புலன் ஐந்தடக்கி, ஆய்மலர் கொண்டு அன்பால் தொழு என்கிறார்!
அதேபோல் இறைவன் இணையடிகட்கு இருந்தமிழ் மாலை சூட்டிய பெருந் தமிழனாகிய பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில்,

"மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் - மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கத்துள்ளான்' 

என்று நம் மனத்தையே முதன்மைப்படுத்தி, மாதவனை அன்பினில் வழிபட்டு, மனத்தை நல்நெறியில் நிறுத்தி, மலர்த் திருவடிகளைக் கடல்போல் பீடுடைய மனமே! உவந்து போற்று என்கிறார்.

மயிலைப் பேயாழ்வாரும் ஒளிவெள்ளத்தில் மூழ்கி திருமகள் உடனாய திருக்கோவிலூர் பெருமானை "திருக்கண்டேன்' என்று கண்டு களித்து, 

"உளன் கண்டாய் நல் நெஞ்சே! உத்தமன்; என்றும் உளன் கண்டாய்' என்று திருவேங்கடத்தான், உலகளந்த திரிவிக்ரமன், வைகுந்தம், பாற்கடலை விட்டு, பக்தர்கள் உள்ளத்தில் குடிகொள்ள மகிழ்ச்சியுடன் காப்பதற்காக வந்தான் என்கிறார். 

திருமழிசைப்பிரான், "தேருங்கால் தேவன் ஒருவனே; அவனை அன்பிலன்றி ஆழியானை யாவர் காண வல்லரே?' என்று அன்பே திருமால் என்று போற்றி, உளன் கண்டாய் என்ற முதலாழ்வார்கள் கருத்தையே வலியுறுத்துகின்றார். அன்று நான் பிறந்திலேன்; பிறந்த பின் மறந்திலேன் என்று நான் பிறப்பதற்கு முன்பு காஞ்சியில் திருவூரகத்தில் நின்றும் திருப்பாடகத்தில் வீற்றிருந்தும், திருவெஃகாவில் அறிதுயில் கொண்டனை. ஆனால் நான் பிறந்த பின்பு, நின்றதும், இருந்ததும், கிடந்ததும் என் நெஞ்சுளே என்கிறார். 

அவர் நெஞ்சே திருமலை, பரமபதம், பாற்கடல்! "அகம்படி வந்து புகுந்தது'! ஈசன், எனக்கு அத்தனாகி, அன்னையாகி, ஆளும் எம்பிரானுமாய் அருளி, முத்தனார், முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார். எத்தினால் இடர் கடற் கிடத்தி ஏழை நெஞ்சமே! என்று நெஞ்சுக்கு உபதேசம் செய்கின்றார்.

செந்தமிழில் நான்மறையை அருளிய நம்மாழ்வாரும், "பெருமான் என் நெஞ்சில் உறைகின்றான் ஆனால் நான் காணாமல் ஒளித்திருக்கின்றான்' என்று வேதனை, சோரனைப்பட்டு பத்துடையார்க்கு (பக்தி) எளியவன் என்று கண்டேன் கமல மலர்ப்பாதம் என்று மனத்தூய்மை போற்றுகின்றார்.

பெரியாழ்வாரும், "பனிக்கடலில் பள்ளிகோளை விடுத்து என் மனக்கடலில் வாழவல்ல மாயா! உனக்கு இடமாய் இருக்க என்னை ஆக்கினையே' என்று உள்ளத்தைக் கோயிலாக்கி மாதவன் என்ற தெய்வத்தை நாட்டி, ஆர்வ மலரால் துதித்தால் எம பயம் நீங்கி, தண்டனைகளிலிருந்து உய்யலாம் என்று வழியையும் காட்டுகிறார். நம்முடைய ஆன்மாவை - மெய்ப்பொருளை அறிவதே முக்தியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com