கவி பாடலாம் வாங்க - 25: தரவு கொச்சகக் கலிப்பா

கம்பராமாயணம் முதலிய காப்பியங்களில் வரும் நான்கடிச் செய்யுள் ஒன்று உண்டு. அது தரவு கொச்சகக் கலிப்பா என்று பேர் பெறும். கலிப்பாவின் இலக்கணத்தை இன்னும் நாம் பார்க்கவில்லை.
கவி பாடலாம் வாங்க - 25: தரவு கொச்சகக் கலிப்பா

கம்பராமாயணம் முதலிய காப்பியங்களில் வரும் நான்கடிச் செய்யுள் ஒன்று உண்டு. அது தரவு கொச்சகக் கலிப்பா என்று பேர் பெறும். கலிப்பாவின் இலக்கணத்தை இன்னும் நாம் பார்க்கவில்லை. இலக்கியங்களில் பெருக வழங்கும் செய்யுட்களையே ஒன்றன் பின் ஒன்றாகப் பார்த்து வருகிறோம். யாப்பிலக்கணத்தில் உள்ள முறைப்படி எழுத்து, அசை, சீர், தளை, தொடை, அடி, பா, பாவினம் என்று நாம் இப்போது பார்க்கவில்லை. ஆகவே, கலிப்பா வகை எல்லாவற்றின் இலக்கணத்தையும் தெரிந்து கொள்வதற்கு முன் தரவு கொச்சகக் கலிப்பாவைப் பற்றி மட்டும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கலிப்பாவுக்குப் பல உறுப்புக்கள் உண்டு. அதன் முதல் உறுப்புத் தரவு; கடைசி உறுப்பு, சுரிதகம். ஒரு தரவு மாத்திரம் தனியே வருவது தரவு கொச்சகக் கலிப்பாவில் ஒரு வகை. அதுவே விருத்தம் பயின்று வரும் நூல்களில் வரும்.
இந்தத் தரவு கொச்சகக் கலிப்பா நான்கு அடிகளால் ஆனது. ஈரசைச் சீர்களாகிய மாச்சீரும் விளச்சீரும் மூவகைச் சீர்களுள் காய்ச்சீரும் உடையதாகி வரும். முழுதும் காய்ச்சீர்களால் வருவதும் உண்டு. ஈரசைச் சீர் வரும்போது மாச்சீருக்கு முன் நிரை வரும். மற்றவை எப்படி வேண்டுமானாலும் வரும்.

"எந்நாளும் மங்காத இளமையெழில் உறுகுமரன்
மின்னாளும் வடிவேற்கை வித்தகன்சே வற்கொடியோன்
முந்நான்கு திருக்கரத்தோன் மோகைநகர்க் காந்தமலை
மன்னாவான் தனைமறவா மாண்பினர்துன் படையாரே'

இந்தப் பாடலில் எல்லாம் வெண்சீராக - காய்ச்சீராக வந்திருப்பதைக் காண்க. காய்முன் நேரும், காய்முன் நிரையும் இதில் விரவி வந்துள்ளன.

"கண்ணன் திருவடியே கைதொழுது பூப்புனைந்து
நண்ணும் அவன்புகழை நாடொறும் கேட்டுவந்தோர்
திண்ண முடையநெஞ்சம் சீரும் சிறப்புமடைந்
தெண்ணில் பெருமைக் கிருப்பிடமா யிலகுவரே'

இந்தப் பாடலில் காய்ச்சீரும் மாச்சீரும் விளச்சீரும் விரவி வந்துள்ளன. காய்முன் நேரும், காய்முன் நிரையும் வந்துள்ளன. இருப்பிடமா - யிலகுவரே; இங்கே காய்முன் நிரை வந்தது காண்க. நாடொறும் என்னும் விளச்சீர் முன் நேர் வந்தது. விளமுன் நிரை வருவதும் உண்டு. ஆனால், இதில் உள்ள மாச்சீர்கள் எல்லாவற்றுக்கும் முன் நிரை வந்திருப்பது காண்க. கண்ணன் திருவடியே - நண்ணும் அவன் புகழை - திண்ண முடையநெஞ்சம் - சீரும் சிறப்பு மடைந் தெண்ணில் பெருமைக் கிருப்பிடமா என்பவற்றைக் காண்க.

"தோலுந் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ'

என்னும் திருவாசகப் பாடலும் தரவு கொச்சகக் கலிப்பாவே. இதில் காய்ச்சீரும் மாச்சீரும் விளச்சீரும் வந்தன. மாச்சீர் வந்த இடங்களிலெல்லாம் அதன் முன் நிரையே வந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். தோலுந் துகிலும் குழையும் சுருள்தோடும் - நீறும் பசுஞ்சாந்தும் - தொக்க வளையு முடைத் தொன்மை - நோக்கிக் குளிர்ந்தூதாய் என்பவற்றைக் காண்க.

தரவு கொச்சகக் கலிப்பா நான்கு அடிகளுக்கு அதிகமாக வருவதையும், வேறு வகையில் வருவதையும் பின்பு பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு நாலடியால் வரும் தரவு கொச்சகக் கலிப்பாவைப் பற்றி மாத்திரம் தெரிந்து கொண்டால் போதும். இது பா வகையில் ஒன்றாக இருந்தாலும் விருத்தங்களால் ஆன காப்பியங்களிடையே மிகுதியாக வருகிறது.

(தொடர்ந்து பாடுவோம்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com