திருவோடு

முனிவர்கள், துறவிகளின் கரங்களில் "திருவோடு' காணப்படும். திருவோட்டின் மூலம் தன் பசித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள பிச்சை எடுப்பர்.
திருவோடு

முனிவர்கள், துறவிகளின் கரங்களில் "திருவோடு' காணப்படும். திருவோட்டின் மூலம் தன் பசித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள பிச்சை எடுப்பர். பரதேசிகளின் திருவோட்டிற்குப் "பிச்சைப் பாத்திரம்' என்ற பெயருண்டு. மேலும் கபாலம், அட்சய பாத்திரம் (மணிமேகலை)போன்ற பெயர்களாலும் வழங்குவர்.
சிவபெருமான் கரத்தில் திருவோடு (பிட்சாடனர்) இருந்ததையும், திருநீலகண்ட நாயனார் அடியார்களுக்குத் திருவோடு செய்து கொடுத்ததையும் புராணங்கள் கூறும்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள "சீசெல்ஸ்' தீவுகளில் வளரும் ஒருவகைப் பனை மரத்திலிருந்து இது உற்பத்தியாகிறது. இம்மரத்தில் "திருவோடு' என்பது ஒரு பெரிய விதையாகவே காணப்படுகிறது. இதற்குக் கடல் தேங்காய் என்றும், "கோக்கோ-டி-மெர்' என்றும் பெயர்கள் உண்டு. இதுவே உலகின் பெரிய விதையாகும். இது ஒரு மரத்தின் காய். இவ்விதைகள் கொண்ட மரத்திற்கு "மெக்கிகன் காலாபேடி' என்று பெயர். இவ்வகை மரவிதைகள் மாலத்தீவு என்ற இடத்தில் கரை ஒதுங்கும். இவ்விதையைப் பயன்படுத்தி எவரும் சுலபமாகப் பயிர்செய்ய இயலாது. இது அரிதான மரமாகவும், 
மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்டதாகவும் விளங்குகிறது.
திருவோடு பிச்சைப் பாத்திரம் மட்டுமல்ல சிறந்த மூலிகை விருட்சத்திலிருந்து பெறப்படுவதால் ஒப்பற்ற வேத சாத்திரங்களைத் தாங்கி மிளிரும் ஓடு. தரிசிப்பவர்க்கும், உஞ்சவிருத்தி (பிச்சை) எடுப்பவர்க்கும், பிச்சை இடுபவர்க்கும் வேத சக்திகளைத் தரும் முப்பத்திரண்டு வகையான தான-தர்ம தேவதைகளும் திருவோட்டில் வாசம் செய்கிறார்களாம். தூய சந்நியாசிகளுக்குத் திருவோட்டை தானமாக அளிப்பது சிறப்பு. இவ்வோட்டை வேள்வியிலும் இடுவர்.
இந்தியாவில் திருவோட்டு மரத்தை அறிமுகம் செய்தவர் இங்கல்ஹலிகார் முக்தா கிர்லோஸ்கர் என்பவர். சீசெல்ஸ் தீவிலிருந்து இவ்விதையைக் கொண்டு வந்து நட்டு, பராமரித்து தம் வீட்டுத் தோட்டத்தில் அலங்கார அழகு மரமாக்கினார். பின்பு இந்தியாவில் அரிதான சில இடங்களில் இது உற்பத்தியாகியுள்ளது. "புணே'வில் "ஆந்த்' என்ற இடத்திலும் பல்வேறு மடங்களிலும் திருவோட்டு மரங்கள் காணப்படுகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே திருவோட்டு மரம் உள்ளது. தமிழ்நாட்டில் "கோதை' (கன்னியாகுமரி) என்ற ஊரில் காசி விசுவநாதர் கோயிலில் திருவோட்டு மரம் காணப்படுகிறது. நாகர்கோவில் அருகே ஒரு சிவன் கோயிலில், ஒழுகினசேரி ஊரில் - திருவோட்டு மரம் உள்ளது.
திருவோட்டு மரம் திருச்சி தென்னூர் உக்கிரமா காளியம்மன் கோயிலிலும், சென்னை அருகே "ஞாயிறு' என்ற ஊரில் புஷ்பரதேஸ்வரர் கோயிலிலும் தலவிருட்சமாக விளங்குகிறது.
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் திருவோட்டு மரங்கள் வளர்க்கப்படுவதாகத் தெரியவருகிறது. அழகிய ஆம்பலாப்பட்டு என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலில் திருவோட்டு மரம் காணப்படுறது.
தனக்கென வாழாது சமூக நலத்திற்காகத் தன்னலம் துறந்த தியாக நங்கை, தவநங்கையான மணிமேகலை பசிப்பிணியைப் போக்க திருவோட்டை(அமுதசுரபி) ஏந்திய நிகழ்வு யாவரும் அறிந்ததே.
சித்தர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர் யாவரும் திருவோட்டைத் துறந்தவர்களே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com