இந்த வார கலாரசிகன்

"தினமணி'யின் புதுச்சேரி நிருபர் ஜெபலின் ஜான் தனது குடும்பத்துடன் இஸ்ரேலுக்குப் புனிதப் பயணம்  சென்று வந்தார். அவருக்கு முன்பு இதேபோல "தினமணி'யின் ஏற்காடு நிருபர் ஜான் போஸ்கோவும், சமீபத்தில் காலமான

"தினமணி'யின் புதுச்சேரி நிருபர் ஜெபலின் ஜான் தனது குடும்பத்துடன் இஸ்ரேலுக்குப் புனிதப் பயணம்  சென்று வந்தார். அவருக்கு முன்பு இதேபோல "தினமணி'யின் ஏற்காடு நிருபர் ஜான் போஸ்கோவும், சமீபத்தில் காலமான தன் தாயாருடன் புனித பூமிக்குப் பயணம் மேற்கொண்டதையும்  குறிப்பிட வேண்டும். 

ஜெபலின் ஜான் புனித பூமிக்குப் பயணம் சென்றதைவிட  முக்கியமானது, அவர் தன் மகன் ஜெஃப்ரினையும் அழைத்துச் சென்றதுதான். ஈரோடு சி.எஸ் அகாடமியில் 5ஆவது படிக்கும்  ஜெஃப்ரின்,  தான் சென்றுவந்த அனுபவத்தைப் புத்தகமாக வெளிக்கொணர்ந்திருப்பது  முளையிலேயே தெரியும் வளரும் பயிரின் அடையாளம். 

இந்தப் புத்தகத்தை உருவாக்க ஓராண்டு எடுத்துக் கொண்டிருக்கிறார் அந்தப் பத்து வயது சிறுவன். இதற்காக முறையாகத் தட்டச்சு கற்றுக்கொண்டு கணினியில்  தானே தட்டச்சு செய்து, அந்த 40 பக்க நூலை உருவாக்கியிருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.  இதற்கு அவருக்கு உற்சாகமும் உறுதுணையும் வழங்கிய பள்ளியின் தலைமை ஆசிரியை அங்கயற்கண்ணியும், ஜெஃப்ரினின் தாத்தா ஜான்சன் ரஸல், தாயார் கிருபா பொன்மணி, ஒன்றுவிட்ட சகோதரர் ஜெஸ்வின் ரஸல் ஆகியோரையும் பாராட்ட வேண்டும். 

பாலஸ்தீனத்திலுள்ள விவிலியம் சார்ந்த  ஒவ்வோர் இடம் குறித்தும், தொடர்ந்து எகிப்தின் பிரமிடுகள் குறித்தும்  அவர் எழுதியிருக்கும் அந்தக் கையேடு  10 வயது சிறுவனின் தனி முயற்சி என்பதை நினைத்தால் வியப்பு மேலிடுகிறது. ஒரு பள்ளிச் சிறுவனின் பதிவாக இல்லாமல்,  ஒரு பத்திரிகையாளனின் பார்வையாக அமைந்திருக்கிறது "புனித பூமிக்கு ஒரு மாணவனின் புனிதப் பயணம்' என்கிற அந்தப் புத்தகம்.

ஒரு சின்ன வருத்தம் ஜெஃப்ரின். ஏன் இந்த ஆங்கில மோகம்? இதையே தமிழில் பதிவு செய்திருக்கலாமே? தமிழ் எழுதப் படிக்கத் தெரியாமல் வளர்த்திருக்
கிறார்களோ?


நொபோரு கராஷிமா தவிர்க்க முடியாத தமிழாய்வாளர்.  கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாற்றுக்குப் பிறகு  நொபோரு கராஷிமா தொகுத்து வழங்கியிருக்கும் ஆய்வு நூல் "சுருக்கமான தென் இந்திய வரலாறு- பிரச்சினைகளும் விளக்கங்களும்'. ஆங்கிலத்தில் வெளிவந்த இந்த நூலை முனைவர் ப.சண்முகம் தமிழாக்கம் செய்திருக்கிறார். அதை "அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்' மூலம் பதிப்பாசிரியராக இருந்து சிற்பி பாலசுப்பிரமணியம் வெளிக்கொணர்ந்திருக்கிறார். 

இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது கல்லூரி மாணவனாக எட்டி நின்று நான் வியந்து பார்த்த அயல்நாட்டுத் தமிழ் அறிஞர்களில் ஒருவர் நொபோரு கராஷிமா.  தென்னிந்திய வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்ட  கராஷிமா தமிழர் வாழ்வியலோடு ஒன்றிய அறிஞர்.

1961-இல் சென்னை பல்கலைக்கழகத்தில்  ஆய்வுக்கு முனைந்தவர். ஊட்டியிலுள்ள இந்திய அகழ்வாய்வுத் துறையின்  கல்வெட்டு ஆய்வாளர் அலுவலகத்தில் பயிற்சி பெற்றவர்.  1985-இல் இந்திய கல்வெட்டியல் கழகத்தின் தலைவராக உயர்ந்தவர். 1989 முதல் 2010 வரை அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராக இருந்ததோடு, உலகத் தமிழ் மாநாட்டை 1995-இல் தஞ்சையில் சிறப்பாக நடத்தியவர். 

இவருக்கு 2013-இல் இந்திய அரசு "பத்ம ஸ்ரீ' விருது வழங்கி கெüரவித்தது. உடல்நலக் குறைவாக இருந்த நொபோரு கராஷிமாவை ஜப்பானில் அவரது இல்லத்துக்கே சென்று விருதை வழங்கி கெüரவித்தார் அன்றைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். அந்த நிகழ்வில் கலந்துகொள்ள எனக்குக் கிடைத்த வாய்ப்பை வாழ்நாள் பயனாகக் கருதுகிறேன். 

இந்தியாவில் கிடைக்கும் கல்வெட்டுகளில்  தென்னிய மொழி கல்வெட்டுகளே இரண்டு பங்குக்கு மேல். அவை முறைப்படி ஆராயப்படாமல் இருப்பது வரலாற்று ஆய்வுக்குப் பின்னடைவு எனக் கருதிய நொபோரு கராஷிமா வரலாற்றுப் பேரறிஞர் ஒய்.சுப்பராயலுவையும், முனைவர் ப.சண்முகத்தையும் துணையாகக் கொண்டு தென்னிந்திய  வரலாற்றை  தொல்பழங்காலம் தொட்டுக் கட்டமைத்து, செம்மைப்படுத்த முற்பட்டார். இதற்கு "சுகாசு மிஜஷீமா' என்ற தம் மாணவரையும் ஹருகா சயனாகிசவா,  ஹிரோஷி யமஷிதா ஆகிய நண்பர்களையும் உதவியாகக் கொண்டு  "சுருக்கமான தென்னிந்திய வரலாறு - பிரச்னைகளும் விளக்கங்களும்' என்கின்ற  ஆய்வு நூலைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில்  தென்னிந்தியாவின் வரலாற்றுத் தொடக்கம், மெகஸ்தனிஸ் குறிப்புகளாலும், வடமொழி நூல்களாலும், கல்வெட்டுகளாலும் அடையாளப்படுத்தப்படுகின்றது. சேர, சோழ, பாண்டிய பேரரசுகளின் தொடக்கங்களும் கண்டடையப்பட்டுள்ளன. பிராமி எழுத்து பற்றிய தகவல்கள் பகிரப்படுகின்றன. எழுத்தின் அறிமுகம் வணிகர்களாலா, சமணர்களாலா என்றும் விவாதிக்கப்படுகிறது. 

தென்கலையின் தோற்றம், தமிழ் சைவ சித்தாந்தம் ஆகியவற்றின் தனி நிலைகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.  தமிழில் உரைநடையின் தோற்றம் உரையாசிரியர்களால் 12-ஆம் நூற்றாண்டு முதல் வளர்ந்ததென விளக்கப்பட்டுள்ளது. கோயில் கட்டுமானங்கள், சமயத் தத்துவங்களுக்கு உருவமாக வளர்ந்தமை குறிக்கப்பட்டுள்ளது. அருங்கலைகளான இசை, நாட்டியம் மட்டுமல்லாது தென்னிந்திய உணவு முறைகள் கூட ஆராயப்பட்டுள்ளன. இப்படிப் பல நுண்மைக் குறிப்புகளை இவ்வரலாற்று நூல் உள்ளடக்கியிருக்கிறது. 

சிற்பி பாலசுப்பிரமணியம் தனது பதிப்புரையில் குறிப்பிட்டிருப்பது போல, தமிழக வரலாற்றுக்கும், தென்னிந்திய வரலாற்றுக்கும் கலங்கரை விளக்கமான இந்நூலை தமிழுலகம் அடையாளம் கண்டு போற்றும் என்கிற நம்பிக்கை எனக்கும் உண்டு. ஆங்கிலத்தில்  வெளிவந்த இந்த நூலை, நொபோரு கராஷிமாவுடன் ஆய்வுப் பணிகளில் உடனிருந்து பணியாற்றி ஆங்கில மூலத்தை வெளிக்கொணர உதவிய முனைவர் ப.சண்முகத்தை விடச் சிறப்பாக வேறு யாரும் தமிழ்ப்படுத்திவிட முடியாது. அதை உணர்ந்து, முனைவர் ப.சண்முகத்தின் மொழிமாற்றத்துடன் நொபோரு கராஷிமாவின் இந்த வரலாற்று ஆவணத்தை  வெளிக்கொணர்ந்திருக்கும்  அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தை எத்துணை பாராட்டினாலும் தகும்.

விமர்சனத்துக்கு வந்திருந்தது கவிஞர் பகலவன் எழுதிய "மனக்கடலின் சிப்பிகள்' என்கிற கவிதைத் தொகுப்பு. அதிலிருந்து   "வினோதக் கணக்கு' என்கிற தலைப்பிலான கவிதை.

கூட்டிப்
பெருக்கினால்
கழிகிறதே
குப்பை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com