இந்த வாரம் கலாரசிகன்

என்னுடைய நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் மணாவுக்கு முக்கியமான இடமுண்டு. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு
இந்த வாரம் கலாரசிகன்

என்னுடைய நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் மணாவுக்கு முக்கியமான இடமுண்டு. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் இருவருமே பத்திரிகையாளர்கள் என்கிற முறையில் நெருங்கிப் பழகி வருகிறோம். "எல்லோருக்கும் நல்லவர்' என்று மிகச் சிலரைத்தான் குறிப்பிட முடியும். அவர்களில் மணாவும் ஒருவர்.
 மணா என்கிற பத்திரிகையாளரை மதிப்பிடுவதற்கு அவர் நீண்ட காலம் "துக்ளக்' இதழில் பணியாற்றியவர் என்பது மட்டுமே போதும். "துக்ளக்' ஆசிரியர் "சோ'வைப் பொருத்தவரை, அவரே கூறுவதுபோல, அவ்வளவு எளிதில் யாரையும் நம்பிவிடவோ, ஏற்றுக்கொள்ளவோ மாட்டார். அடிப்படையில் வழக்குரைஞர் என்பதாலோ என்னவோ ஒருவரைத் தொடர்ந்து கவனித்து அதன் அடிப்படையில்தான் அவர் குறித்து ஒரு முடிவுக்கு வருவார். அப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், யார் வந்து என்ன சொன்னாலும் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள மாட்டார். அவருடைய கணிப்பு பொய்த்ததில்லை.
 நண்பர் மணாவின் பத்திரிகைத் துறை அனுபவங்களின் தொகுப்புதான் "சொல்வது நிஜம்' என்கிற புத்தகம். கடந்த ஓராண்டுக்கு மேலாக படிக்க வேண்டும் என்று எனது மேஜையில் கண்ணில் படும்படியாக எடுத்து வைத்திருந்த "சொல்வது நிஜம்' புத்தகத்தை, தீபாவளி விருந்தாக ஒரே மூச்சில் கடந்த செவ்வாய்க்கிழமை படித்து முடித்தேன்.
 "மூத்த ஊடகவியலாளரின் நெஞ்சைச் சுடும் அனுபவங்கள்' என்கிற பீடிகையுடன் தொகுக்கப்பட்டிருக்கும் "சொல்வது நிஜம்' புத்தகம் பத்திரிகையாளர் மணாவின் நேரடி அனுபவங்களைப் பதிவு செய்கிறது. தமிழகத்தின் சமூக, அரசியல், சினிமா, உலக நிகழ்வுகள் குறித்த ஏறத்தாழ 20 ஆண்டுகாலப் பதிவுகளை மணாவின் அனுபவத்தில் "சொல்வது நிஜம்' சொல்லிப் போகிறது. ஒரு நாவல் படிக்கும் விறுவிறுப்புடன், மணா என்கிற பத்திரிகையாளரின் நேரடி அனுபவங்கள் கட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமைகள் அனைவர் குறித்தும் இந்தப் புத்தகத்தில் செய்திகளும், சம்பவங்களும் பதிவாகியிருப்பது இதன் தனிச்சிறப்பு.
 வீரப்பன் காடு, மம்பட்டியான் சாம்ராஜ்ஜியம், தேர்தல் களத்தில் எம்.ஜி.ஆர். - சிவாஜி, காமராஜர் குடும்பத்துக்கு ஜெயலலிதாவின் உதவி, ஜெயகாந்தன்- இலக்கிய ரெளடி? முதலிய பதிவுகள் கேட்டிராத அனுபவங்கள். ஆஸிட் அராஜகம், குழந்தைக் குற்றங்கள், சொர்ணம்மாள் செய்த தியாகம் உள்ளிட்டவை அவருக்கு மட்டுமல்ல படிப்பவர்களுக்கும் மறக்க முடியாத அனுபவங்கள். எம்.கே.தியாகராஜ பாகவதர் குறித்த "தங்கத் தட்டு' பாகவதர், நகைச்சுவை நடிகர் தங்கவேலு குறித்த "டனால்' சொல்லும் பாப்புலாரிட்டி, பின்னணிப் பாடகர் பி.பி. சீனிவாஸ் குறித்த "மென்மை மனிதர் பி.பி.எஸ்' மூன்றும் சுவாரசியமான தகவல்கள்.
 36-க்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கும் பத்திரிகையாளர் மணா துக்ளக்கில் 14 ஆண்டுகள் பணியாற்றியவர். எனக்கும் நண்பர். நாங்கள் இருவருமே ஆசிரியர் "சோ'வின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமானவர்கள். நண்பர் மணா இன்னும் கூட சற்று உசத்தி. 76 வாரங்கள் குமுதத்தில் வெளியான "ஒசாம அசா' தொடரை எழுத நண்பர் மணாவைத்தான் ஆசிரியர் "சோ' தேர்ந்தெடுத்தார் என்பதுதான் அதற்குக் காரணம்.
 
 
 திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழாய்வுத் துறையின் முன்னாள் தலைவர் முனைவர் பெ. சுபாசு சந்திரபோசு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வு நெறியாளராகவும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருப்பவர். இவர் தொகுத்து வெளியிட்டிருக்கும் புத்தகம் "மகத்தான பேருரைகள்'. உலக அளவில் மகத்தான பேருரைகளாகப் போற்றப்படும் 25 உரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
 கெளதம புத்தரில் தொடங்கி, சி.என் அண்ணாதுரை வரையிலான 25 பேர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரைகள் முனைவர் பெ.சுபாசு சந்திரபோசால் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு என்றால், அதைவிடக் குறிப்பிடத்தக்க இன்னோர் அம்சமும் இதில் இருக்கிறது. அது என்னவென்றால், அந்த 25 பேர் குறித்த விவரங்கள் ஒவ்வொரு உரைக்கும் முன்னால் தரப்பட்டிருப்பது.
 இதில் இடம்பெற்றிருக்கும் சிலருடைய உரைகள் அவர்களது பிரபலமான வரலாற்றுச் சிறப்புமிக்க உரைகள் அல்ல என்றாலும் கூட, முனைவர் சந்திர போசின் தேர்வும் குறைகூற முடியாதது என்பதை மறுக்க இயலாது. இந்தத் தொகுப்பில் மூன்று மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க உரைகள் விடுபட்டிருக்கின்றன. அவை மார்க் ஆண்டனி, நெப்போலியன், நெல்சன் மண்டேலா ஆகிய மூவரின் உரைகள்.
 முனைவர் பெ.சுபாசு சந்திரபோசின் இந்த முயற்சியின் நீட்சியாக அவர் அடுத்த தொகுப்பையும் வெளிக்கொணர வேண்டும் என்பது எனது வேண்டுகோள். எல்லா நூலகங்களிலும் இடம்பெற வேண்டிய அற்புதமான தொகுப்பு முனைவர் பெ.சுபாசு சந்திரபோசின் "மகத்தான பேருரைகள்.'
 
 
 பரிமளா தேவி என்பவர் எழுதிய "மருதாணிப் பூக்கள்' என்கிற கவிதைத் தொகுப்பு புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது. அதிலிருந்த,
 விரல்கள் தொட்டதால்
 வெட்கத்தில் சிவந்தது
 மருதாணி
 என்கிற துளிப்பாவைப் படித்தபோது, பிரபல ஆங்கிலக் கவிஞர் லார்ட் பைரனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வந்தது.
 பைரன் அப்போது பள்ளிச் சிறுவன். பள்ளிக்கூடத்தில் கட்டுரை எழுத வேண்டும். ஏசுநாதர் ஒரு விருந்துக்குச் செல்கிறார். அந்த விருந்தில் எல்லோருக்கும் வழங்குவதற்கு "திராட்சை ரஸம்' இருக்கவில்லை. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார். அந்தத் தண்ணீரை ஏசுநாதர் பார்த்தவுடன், அந்தத் தண்ணீர் திராட்சை ரஸமானது என்று விவிலியம் கூறுகிறது. இதுதான் ஏசுநாதர் செய்த முதல் அற்புதம் என்று கருதப்படுகிறது. அன்றைய கட்டுரைக்கான கருப்பொருள் இதுதான்.
 இது குறித்து எல்லா மாணவர்களும் பக்கம் பக்கமாக வியாசம் எழுதிக் கொண்டிருந்தனர். ஆனால், சிறுவன் பைரனோ மூன்று வரிகள் எழுதிவிட்டுக் கைகட்டி அமர்ந்திருந்தான்.
 அதைப் பார்த்த ஆசிரியருக்குக் கோபம் வந்தது. ""என்ன நீ பேசாமல் இருக்கிறாய்?'' என்று கேட்டு, அவன் எழுதி வைத்திருந்த காகிதத்தைப் பிரித்துப் பார்த்த ஆசிரியர் ஆச்சரியத்தில் சமைந்தார். அந்தச் சம்பவத்தை மூன்று வரிகளில் கவிதையாக்கி இருந்தார் சிறுவன் பைரன். இதுதான் பைரன் எழுதிய முதல் கவிதை.
 அவன் பார்த்தான்
 அவள்
 முகம் சிவந்தாள்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com