இன்றியமையாதது

"முக்கியம்' என்பது வடசொல். வடசொற்களைத் தவிர்த்துத் தனித்தமிழை ஆளவேண்டும் என்ற உணர்ச்சி மேலோங்கியபொழுது,
இன்றியமையாதது

"முக்கியம்' என்பது வடசொல். வடசொற்களைத் தவிர்த்துத் தனித்தமிழை ஆளவேண்டும் என்ற உணர்ச்சி மேலோங்கியபொழுது, இன்றியமையாதது, இன்றியமையாமை (முக்கியத்துவம்) போன்ற சொற்களின் பயன்பாடு வளர்ந்தது.
சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதி இன்றியமையாமைக்குத் "தானில்லாமல் முடியாமை' என்று பொருள் கூறியதோடமையாது, indispensableness, necessity, sine qua non என்று ஆங்கிலம் மற்றும் இலத்தீன் சொற்களையும் தந்துள்ளது.
"இன்றியமையாமை' என்பது ஒரு நிலைமையை விளக்குகின்றது (condition). யாதோ ஒன்று, யாதோ ஒன்று இல்லையெனில் இருக்க முடியாது; அல்லது செயல்பட முடியாது; வாழ முடியாது என்ற நிலையினைத்தான் இன்றியமையாத நிலை குறிக்கின்றது.
பழந்தமிழ் இதுபற்றி என்ன கூறுகிறது? நற்றிணையின் முதல் பாட்டு கபிலர் இயற்றியது. தலைவன் பொருள்தேடும் பொருட்டுப் பிரியப் போகிறான் என்பதைத் தோழி, தலைவிக்கு அறிவிக்கிறாள்.
அப்பொழுது தலைவி அதற்கு மறுப்பு தெரிவிக்கும் நிலையில் அமைந்திருக்கிறது கீழ்க்காணும் செய்யுள்.
"நீர்இன்று அமையா உலகம் போலத்
தம்இன்று அமையா நம் நயந்தருளி 
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்புஅறி யலரே!' 
(1: 6-9)
நீர் இல்லாமல் உலகம் வாழவியலாது; அதுபோல் தலைவன் இல்லாமல் தலைவிக்கு வாழ்வில்லை என்பதுதான் இப்பகுதியின் பொருள்.
செய்யுளின் நடையிலேயே சொல்வதாயின், நீரின்றி உலகம் அமையாதது போல் தலைவன் இன்றித் தலைவி அமையாள். நம் காலத்து நடையில் இது எவ்வாறு அமையும்?
தலைவன் தலைவிக்கு இன்றியமையாதவன் எவ்வாறெனில், உலகுக்கு நீர் இன்றியமையாதது போல். உண்மையான பொருள் இங்குத் தலைகீழாக மாறியுள்ளதைக் காண முடிகின்றது.
யார் இன்றி யார் அமையாதவர்? தலைவன் இன்றித் தலைவி அமையாதவள். எப்படி? மழையின்றி உலகு அமையாதது போல. திருவள்ளுவர்,
"நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு'
என்று விளக்கினார். "இன்று' என்ற உகர ஈறு, "இன்றி' என இகர ஈறாக மாறியுள்ளது. But for water, there is no existence for all lives; so also, but for the clouds, there is no flow of water. ஆங்கிலத்திலுள்ள But for 
என்னும் தொடர் "ஒன்று இன்றி' என்ற பொருளைக் கொண்டுள்ளது. 
இங்கு "அமைதல்' என்ற சொல்லின் பொருளை அறிதல் இன்றியமையாதது. நம்கால நடையில் - சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியின் முதல் தொகுதி, இச்சொல்லுக்குரிய பல பொருள்களைத் தருகிறது (15) அவற்றுள் நிறைதல் (to be complete), இல்லையாதல் (to be Non-Existent) செய்யக் கூடியதாதல் (to be Practicable) என்பவை இன்றியமையாத நிலைக்குப் பொருத்தமானவையாகத் தோன்றுகின்றன. 
எம் பேராசிரியர் முனைவர் செ.வைத்தியலிங்கம் வகுப்பில் கூறியதை எண்ணிப் பார்க்கிறேன். "எழுதுகோல் (பேனா) இன்றி நான் அமையாதவன்' என்றுதான் சொல்ல வேண்டும் என்றும்; "எனக்குப் பேனா இன்றியமையாதது' என்பது பிழையென்றும் அவர் கூறினார்.
பிழை வழக்குகள் எனினும் அவை மக்களின் பேச்சிலும் எழுத்திலும் பல காலமாகப் பயின்று ஆழ வேர்விட்டுள்ளவை. எனவே, அவற்றை ஏற்று அமைவது நல்லது.

-முனைவர் அ. தட்சிணாமூர்த்தி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com