திருக்குறள் அன்பன் வ.உ.சி.

பழம்பெரும் நாடான நம் பாரத நாட்டிற்குள் கடல்வழி உள்ளே நுழைந்த வந்தேறிகளை சுதேசிக் கப்பலை ஓடவிட்டதன் மூலம் கதிகலங்க வைத்தவர் வ.உ.சி. உப்புக்கடலில் தம்முடைய
திருக்குறள் அன்பன் வ.உ.சி.

பழம்பெரும் நாடான நம் பாரத நாட்டிற்குள் கடல்வழி உள்ளே நுழைந்த வந்தேறிகளை சுதேசிக் கப்பலை ஓடவிட்டதன் மூலம் கதிகலங்க வைத்தவர் வ.உ.சி. உப்புக்கடலில் தம்முடைய கப்பலை ஓடவிட்டதற்குத் தேசிய உணர்வும், நாட்டுப்பற்றும் காரணமாகலாம். ஆனால், அமுதக் கடலின் (தமிழ்) ஆழங்கண்டுணர்ந்தது வ.உ.சி.யின் மொழிப்பற்றையும், தமிழ் இனப்பற்றையும் வெளிப்படுத்துகிறது.
ஆம்! வ.உ.சி.க்கு நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் ஒருசேர அமைந்திருந்தன. அவருடைய முன்னோர்களும் தமிழ்மொழியில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர்கள். கவிராயர் வீடு என்றே அவரது வீடு அழைக்கப்பட்டது. சிறையில் இருந்தபொழுது தம்முடைய சுயசரிதையைக் கவிதை வடிவில் எழுதினார். தமிழ் மொழியில் இவ்வாறு சுயசரிதையைக் கவிதை வடிவில் எழுதிய முதல் மனிதர் வ.உ.சி என்றே கூறலாம். 
கோவைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தபொழுது ஆங்கில நூல்கள் சிலவற்றை தமிழாக்கம் செய்தார். அத்துடன் தமிழில் அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், மனம் போல வாழ்வு, மெய்யறம் முதலான நூல்களையும் எழுதி முடித்தார். சிறையில் உடனிருந்த கைதிகளுக்கு நன்னூலையும் போதித்தார். சுயசரிதை தவிர, தனிப்பாடல் திரட்டு எனும் கவிதைத் தொகுப்பும் அவரால் எழுதப்பட்டுள்ளது. அவர் இயற்றிய தோத்திரப் பாடல்களிலும் நாட்டு நலனே முதன்மை பெறுவதைக் காணலாம்.
வ.உ.சி.யை ஒரு தலைசிறந்த ஆய்வாளர் என்றும் கூறலாம். தொல்காப்பியத்திற்கு மிகுதியான பதிப்புகள் வெளிவராதிருந்த காலகட்டத்தில் (1928), தொல்காப்பியத்திற்கு உரைப் பதிப்பினை மேற்கொண்டார். தொல்காப்பியம் தவிர திருக்குறள் மீது அவர் அபாரக் காதல் கொண்டிருந்தார். 
சிறை வாசத்தின்போது, மணக்குடவர் உரையின் மூலம் திருக்குறளை நன்கு படித்துப் புரிந்து கொண்டார். 1934-ஆம் ஆண்டில் திருச்செந்தூரில் முருகப்பெருமான் முன்பு அறத்துப்பாலுக்கு இவர் எழுதிய உரை, புலவர்கள் முன்னிலையில் வெளியிடப் பெற்றது. அதே ஆண்டில் சாந்திக்கு மார்க்கம்என்ற மொழிபெயர்ப்பு நூலும் வெளியானது. 
கோவைச் சிறையிலிருந்து 1908-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் நாள் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையருக்கு ஒரு கடிதம் எழுதினார். திருக்குறளை
ஆராய்ச்சி செய்து வருகிறேன். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதிக் கொண்டிருக்கிறேன். சில ஐயங்கள் உள்ளன. அதற்கு விளக்கம் தேவை என்று எழுதினார். உ.வே.சா.வும், வேண்டிய விளக்கங்களை வ.உ.சி.க்கு எழுதி அனுப்பியுள்ளார்.
தன்னிச்சையாக எதையும் ஆராயாமல், இலக்கியங்களை நன்கு படித்த சான்றோர் பெருமக்களின் துணையுடன் தம்முடைய இலக்கியப் பணியினை வ.உ.சி. இனிதே நிறைவேற்றினார். 1935-இல் உ.வே.சாமிநாதையரின் 80-ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின்போது, நிலைமண்டில ஆசிரியப்பாவின் 40 வரிகள் அடங்கிய வாழ்த்து மடலை வ.உ.சி. அனுப்பினார். அப்பாடலின் இறுதி இரண்டு வரிகளில் தூத்துக்குடிவாழ் ஒட்டப்பிடாரம் சிதம்பரம் என்னும் திருக்குறள்அன்பனே! என்று தன்னைத் திருக்குறள் அன்பன் என்று பெருமிதத்துடன் வெளிப்படுத்திக் கொள்கிறார். 
கண்ணனூர் சிறையில் இருக்கும்பொழுது அங்கிருந்த கைதிகளுக்கு அறக்கருத்துகள் பற்றி அடிக்கடி அறிவுரை சொல்வார். அவ்வறக் கருத்துகளைத் தொகுத்து மெய்யறிவு எனும் பெயரில் நூலாக்கினார். 
சிறையிலிருந்து மீண்ட பின்பு, திருமணம் செல்வகேசவராய முதலியார் முன்னிலையில் மரபுப்படி மெய்யறிவு நூலை அரங்
கேற்றம் செய்தார். இந்நூலில் திருக்குறள், சிறுபஞ்ச மூலம், ஆசாரக்கோவை, திருமந்திரம், சைவ சித்தாந்தம், சித்தர் பாடல்கள், ஒளவையார், தாயுமானவர், வள்ளலார் ஆகியோருடைய பாடல்களின் தாக்கம் மிகுதியாக உள்ளன. 
சிறையிலிருந்து வெளிவந்த பின்பு சென்னையில் சில ஆண்டுகள் தங்கினார். பெரம்பூரில் அவர் வசித்துவந்தபொழுது அக்கம் பக்கத்திலிருந்த மாணவர்கள் பலரையும் அழைத்து, அவர்களுக்கு இலவசமாகத் திருக்குறள் போன்ற நீதி நூல்களைக் கற்பித்தார். திருக்குறள் வகுப்பினை மட்டும் தனியாகவும் நடத்தினார். மூதறிஞர் ராஜாஜியும் வ.உ.சி.யிடம் திருக்குறள் பாடங் கேட்டதாகக் கூறுவர். நல்லாசிரியருக்கு இருக்க வேண்டிய சில நற்குணங்களை வ.உ.சி. பெற்றிருந்தார். 
இன்று தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. ஆனால், தமிழ் மொழிக்கென்று தனியே பல்கலைக்
கழகம் இல்லையே என்ற தன்னுடைய ஆதங்கத்தை - ஏக்கத்தை வ.உ.சி., சேலத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் (5.11.1927) தாம் ஆற்றிய தலைமை உரையில் வெளிப்படுத்தியுள்ளார். 
தமிழ்மொழி மிகத் தொன்மையானது. அது மலையாளம், கன்னடம், துளுவம், தெலுங்கு முதலிய பல பாஷைகளுக்கும் தாய்ப் பாஷையாய் விளங்குவது. இவ்வாறிருந்தும் இந்நாட்டில் இதுவரையில் தமிழ் சர்வகலாசாலை ஒன்றும் ஏற்படுத்தவில்லை என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.
தம்முடைய வாழ்நாளின் இறுதி நாள்களில் தூத்துக்குடியில் சைவ சித்தாந்த சபையினை நிறுவினார். தம்முடைய வீட்டிலேயே அன்றாடம் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தார். 
1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி வ.உ.சி. அமரரானார். அவர் கண்ட இரு பெரும் கனவுகள் அவருடைய ஆயுட் காலத்தில் நிறைவெய்தவில்லை. நாடு விடுதலை பெறவில்லையே என்பது ஒன்று; திருக்குறளுக்குத் தம்முடைய உரை முழுவதையும் அச்சிட முடியவில்லையே என்பது மற்றொன்று. இவ்விரண்டும் வ.உ.சி.யின் காலத்திற்குப் பின்பே நிறைவேறின. 
செல்வமும் செல்வாக்குமாக இருந்த காலத்திலும், வெஞ்சிறையில் வாடிய காலத்திலும், எல்லாம் இழந்து வறுமையில் வாடிய காலத்திலும், தமிழை மறவாத, இலக்கியத் தொண்டினைத் தம் வாழ்வின் ஓர் அங்கமாகவே கருதி வாழ்ந்த தன்னலமற்ற தேச பக்தரான கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்!
- முனைவர் சீனிவாச கண்ணன்

இன்று: வ.உ.சி.யின் 82-ஆம் ஆண்டு நினைவு நாள்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com