மாதவிக் குளியல்

இந்திர விழா என்றதும் நினைவுக்கு வருவது இளங்கோ, சீத்தலைச்சாத்தனார் படைப்புகளே. அதுவும் மாதவியை
மாதவிக் குளியல்

இந்திர விழா என்றதும் நினைவுக்கு வருவது இளங்கோ, சீத்தலைச்சாத்தனார் படைப்புகளே. அதுவும் மாதவியை மையமாகக்கொண்டு இயங்கும் விழாவாகவும் இது இருக்கிறது. 
கண்ணகியை விடுத்து மாதவிபால் கோவலன் சென்றதற்கு இவ்விழாவே அடிப்படைக் காரணமாக அமைகிறது. மாதவி கோவலனோடு கடலாடுதற்குச் செல்வதற்கு முன்பு தன்னை ஒப்பனை செய்து கொள்வதாக விளக்கிச் செல்கிறார் இளங்கோவடிகள்.
பத்துத் துவரினும், ஐந்து விரையினும்
முப்பத்து - இருவகை ஓமாலிகையினும்
ஊறின நன்னீர். (சிலப்.கடலா. 77-79)

ஐந்து வகைவிரை, பத்து வகைதுவர், முப்பத்து இரண்டு வகை ஓமாலிகை என்று பதப்படுத்தப்பட்ட நன்னீரில் குளித்ததாகக் குறிப்பிடுகிறார். இதனை, அரண்மனையில் வாழும் அரச மகளிரும், மாளிகைகளில் வாழும் செல்வப் பெண்டிரும், மாதவி போலும் நாடகக் கணிகையரும் கோட்டம், துருக்கம், தகரம், அகில், சந்தனம் என்னும் ஐவகை விரையும் (நறுமணப் பொருளும்); நாவல் அல்லது பூவந்தி, கடு, நெல்லி, தான்றி, ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக்காசு அல்லது கருங்காலி, மாந்தளிர் என்னும் பத்து வகைத்துவரும்; இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம், நாகணம், கோட்டம், நாகாம், மதாவரிசி, தக்கோலம், நன்னாரி, வெண்கோட்டம், காசறை (கத்தூரி), வேரி, இலாமிச்சம், கண்டில் வெண்ணெய், கடு, நெல்லி, தான்றி, துத்தம், வண்ணக்கச்சோலம், அரேணுகம், மாஞ்சி, சயிலேகம், புழுகு, புன்னை நறுந்தாது, புலியுகிர், சரளம், தமாலம், வகுளம், பதுமுகம், நுண்ணேலம், கொடுவேரி என்னும் முப்பத்திரு வகை ஓமாலிகையும் ஊற வைத்த நன்னீரில் குளித்து வந்தனர் என்று விளக்குவார், மொழி ஞாயிறு தேவநேயபாவாணர்(பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்).
இது பற்றிய தெளிவும் அதனைப் பயன்படுத்தலும் இன்று இருக்கின்றதா என்கிற ஐயம் எழுகிறது. பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மனமா? செயற்கை மனமா? என்கிற சிவபெருமான் - நக்கீரர் வாதம்கூட மாதவியின் குளியலோடு தொடர்புடையதே. 
நம் நாட்டில் இயற்கையிலேயே கிடைக்கும் நாற்பத்தேழு வகை நறுமணப் பொருள்களைக் கொண்டு மாதவி குளித்திருக்கிறாள். இன்னும் பல்வேறு அணிகலன்களை 
அணிந்துகொண்டு இந்திர விழாவின் இறுதி நாளான கடலாடுதலுக்குச் சென்றிருக்கிறாள். 
இன்று பெண்கள் ஒப்பனை செய்து கொள்வதில் அதிக நாட்டம் உடையவராக இருக்கின்றனர். அது ஒரு துறைசார் படிப்பாகவும் உள்ளது. ஊர்தொறும் மகளிர் அழகு நிலையங்களும் இயங்குகின்றன. இயற்கையோடு கூடிய அழகுபடுத்தல் குறித்த புரிதலை அறிந்து, அதற்குத்தக அழகு செய்துகொள்ள விழைய வேண்டும். அப்பொழுதுதான் நாம் நம்மின் மரபின் வழி பயணிக்கின்றோம் 
என்பதை இந்த நாடறியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com