இந்த வாரம் கலாரசிகன்

கடந்த புதன்கிழமை அலுவலக வேலையாக சேலம் போனபோது, சரவணா மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன்.
இந்த வாரம் கலாரசிகன்

கடந்த புதன்கிழமை அலுவலக வேலையாக சேலம் போனபோது, சரவணா மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். சேலத்தில் "தினமணி'யின் சார்பில் "ஆரோக்கியம் மருத்துவக் கண்காட்சி' நடைபெறும் போதெல்லாம் சரவணா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர், மருத்துவர் சி. அசோக் அவரது மருத்துவமனையைப் பார்வையிட வருமாறு தொடர்ந்து அழைப்பு விடுப்பார். அவரது அன்புக் கட்டளையை இந்த முறை மறக்காமல் நிறைவேற்றி விட்டேன்.
மருத்துவர் அசோக் ஏனைய மருத்துவர்களிலிருந்து பல விஷயங்களில் மாறுபட்டவர். சித்த மருத்துவத்தில் மட்டுமல்லாமல், ஆங்கில மருத்துவத்திலும் பட்டம் பெற்றவர். யோகா மருத்துவத்திலும் பயிற்சி பெற்றவர். சேலத்தில் இவர் நடத்தும் பல்துறை மருத்துவம் இணைக்கப்பட்ட சரவணா மருத்துவமனை சாமானியர்களின் சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது என்பதுதான் அதன் தனிச்சிறப்பு.
2002-ஆம் ஆண்டு முதல் கொடைக்கானல் வானொலி நிலையத்தின் பண்பலை வரிசையில் வாரம் ஒருமுறை "நாளும் நலம் நாடி' என்கிற தலைப்பிலான மருத்துவர் சி. அசோக்கின் வானொலி உரைகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. ஆரம்பத்தில் கொடைக்கானலில் தொடங்கிய ஒலிபரப்பு இப்போது திருச்சி, தருமபுரி, அகில இந்திய வானொலியின் பண்பலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நாள்தோறும் ஒலிபரப்பப்படுகிறது. அந்த உரைகள் "நாளும் நலம் நாடி' என்ற பெயரில் தொகுக்கப்பட்டு, அதன் முதல் தொகுதி இப்போது வெளியாகியிருக்கிறது.
தனது ஐந்து நிமிட வானொலி உரையில் குட்டிக் கதைகளுடன், எல்லோருக்கும் தெரிந்த நிகழ்வுகளை அல்லது செய்திகளை உவமைகளாக இணைத்து, சிந்தனையாளர்களின் கருத்துகளை மேற்கோள்காட்டி மனதில் பதியும் வண்ணம் மருத்துவர் அசோக் வழங்கும் "நாளும் நலம் நாடி' நிகழ்ச்சி வானொலி நேயர்களின் பெருத்த வரவேற்பைப் பெற்றிருப்பதில் வியப்பில்லை. அவரது கொங்குத் தமிழும், சித்த மற்றும் ஆங்கில மருத்துவப் படிப்பும், இயல்பாய்க் கைகோர்க்கும் நகைச்சுவை உணர்வும், நமது கலாசாரத்தின் மீதுள்ள பிடிப்பும் அந்த உரைகளின் சிறப்பம்சங்கள்.
"எந்தப் பிணிக்கும் பாதித் தீர்வு விழிப்புணர்வு' என்கிற அடிப்படையில் அமைந்த உரையில் அவர் வலியுறுத்துவது, "தவறான உணவு தவிர்', "சரியான உணவு சேர்', "மருந்துக்கு என்ற அளவில் மருந்து சேர்'ஆகியவற்றைத்தான். நூல் வடிவம் பெற்றிருக்கும் அவரது வானொலி உரைகளின் முதல் தொகுதியில் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், மூட்டுவாத நோய், தொற்று நோய் அல்லாத பிற நோய்கள் குறித்த புள்ளிவிவரங்கள், மன உளைச்சல் உள்ளிட்ட பல இன்றைய சமுதாயம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் குறித்த 87 கட்டுரைகள் அடங்கியிருக்கின்றன.
நோயைப் பற்றிய புரிதலை விட, உடல் நலம் பற்றிய புரிதல் அவசியம் என்பதை வலியுறுத்தி, மருத்துவத்தை எளிமையாக்கிக் கொடுக்க வேண்டும் என்கிற சமுதாயப் புரிதலுடன் மருத்துவர் சி.அசோக் தொகுத்து வழங்கியிருக்கும் "நாளும் நலம் நாடி' என்கிற புத்தகத்துக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் திருச்சி வானொலி நிலைய இயக்குநர் க.நடராசன் கூறியிருப்பது போல, இந்தப் புத்தகம் படிப்பதற்கு மட்டுமன்று பகிரவும்தான்.

இராமலிங்கர் பணிமன்றம் ஏ.வி.எம். அறக்கட்டளையுடன் இணைந்து 53 ஆண்டுகளாக "வள்ளலார்-காந்தி விழா' நடத்தி வருகிறது. அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கத்தைத் தொடர்ந்து அவர் போட்ட பாதையில் பயணிக்கும் அவரது திருமகனார் ம. மாணிக்கம் இந்த விழாவை சிறப்புடன் நடத்தி வருவது குறள் வழியிலான "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி'. இந்த ஆண்டு இராமலிங்கர் பணி மன்ற விழாவில் தோழர் கே. ஜீவபாரதி தொகுத்திருக்கும் "சட்டப் பேரவையில் அருட்செல்வர்' என்கிற புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது.
கவிஞர் கே.ஜீவபாரதி குறித்து இதற்கு முன்பே நான் பல பதிவுகள் செய்திருக்கிறேன். தோழர் ஜீவாவைப் பற்றி கவிஞர் ஜீவபாரதி 22 நூல்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். உலகில் ஒரு தலைவரைப் பற்றி எந்தவோர் எழுத்தாளரும் இத்தனை நூல்களைத் தொகுத்திருப்பாரா என்பது சந்தேகம்தான். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், பசும்பொன் தேவர், தோழர் ஜீவா ஆகியோர் குறித்து கே.ஜீவபாரதியின் நூல்களை மேற்கோள் காட்டாமல் பேசவோ, எழுதவோ முடியாது.
அருட்செல்வர் நா. மகாலிங்கம் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தமிழகத்தின் முதல் மூன்று சட்டப் பேரவைகளிலும் தொடர்ந்து உறுப்பினராக இருந்த 15 ஆண்டு காலகட்டத்தில், அவர் ஆற்றிய உரைகளும், விவாதங்களும், சொன்ன கருத்துகளும் இன்றைக்கும் கூடத் தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே வழிகாட்டும் கலங்கரை விளக்காகத் திகழ்கின்றன.
தமிழகத்தின் முதல்வர்களாக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர், பக்தவச்சலம், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று அனைவருடனும் அருட்செல்வருக்கு நெருங்கிய தொடர்பும் நட்பும் உண்டு. தேசத்தந்தை காந்தி மகானிடமும், காங்கிரஸ் பேரியக்கத்திலும் தாளாத பற்று கொண்டிருந்த அருட்செல்வர் இந்திய விடுதலை வேள்வியிலும் பங்கு பெற்றவர்.
"ஒரு தொழிலதிபராக இருந்தாலும் சராசரி அரசியல்வாதிகளைப் போல சிந்திக்காமல், தமிழக வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துகளைத் தொடர்ந்து சொல்லி வந்தவர் அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம்'' என்று தோழர் ஆர்.நல்லகண்ணு தனது அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பதற்கு மேலாக அவர் குறித்து யாரும் கூறிவிட முடியாது.
அருட்செல்வர் நினைவு நாளில் தமிழவேள் "சிவாலயம்' ஜெ. மோகனின் உதவியுடன் கே.ஜீவபாரதியால் தொகுத்துப் புத்தக வடிவம் பெற்றிருக்கும் "அருட்செல்வரின் சட்டப்பேரவை உரைகள்' இன்றைய சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்குமான வழிகாட்டுதல்கள். இது புத்தகம் அல்ல, தொகுப்பும் அல்ல, ஆவணப் பதிவு.

வல்லம் தாஜுபால் என்கிற கவிஞரின் "மெüனம் நம் எதிரி' என்கிற கவிதைத் தொகுப்பு விமர்சனத்திற்கு வந்திருந்தது. அதில், இருக்கும் வைர வரிகள் இவை:
வங்கியைக் கண்டு பயந்தால்
கழனி விவசாயி
வங்கியே கண்டு பயந்தால்
கார்ப்பரேட் முதலாளி!







 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com