இந்த வாரம் கலாரசிகன்

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதனின் தமிழ்ப்பற்று குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்த வாரம் கலாரசிகன்

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதனின் தமிழ்ப்பற்று குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை. "ஒருமை-பன்மை கூடத் தெரியாமல் ஊடகங்களில் எழுதுகிறார்களே' என்று பல முறை அவர் என்னிடம் விசனப்பட்டு, தமிழ் படும்பாடு குறித்த தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
1967-இல் தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய வேந்தர் கோ.விசுவநாதன், துறைமாறிக் கல்வியாளரான பின்பும் அவரது அடிப்படைத் தமிழார்வம் மட்டும் தடம் புரளாமல் எப்போதும் போலத் தொடர்ந்து கொண்டிருப்பதன் வெளிப்பாடுதான் அவரால் தொடங்கப்பட்டிருக்கும் "தமிழியக்கம்'.
சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த 15-ஆம் தேதி, "தமிழியக்கம்' கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் அங்கே வந்து குழுமியிருந்த தமிழார்வலர்கள் காலையிலிருந்து, இரவு எட்டு மணிக்கு மேல் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் குழுமியிருந்தது, தமிழார்வம் குன்றிவிடவில்லை என்பதை எடுத்துரைத்தது.
மூன்று நாள் மாநாடாக நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சி, ஒரு நாள் விழாவாக முடிந்துவிட்டதே என்கிற எனது வருத்தத்தை அந்த அரங்கத்தில் பதிவு செய்தேன். அது வெறும் வெற்று வார்த்தையல்ல. வேந்தர் கோ.விசுவநாதன் பின்னணியில் இருப்பாரேயானால், மூன்று நாள் மாநாடு என்கிற கனவு நனவாவது சாத்தியம்தான்.
"தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் போதும், பிறகு தமிழ் பார்த்துக் கொள்ளும்'' என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தன். "தமிழியக்கம்' தொடங்கப்பட்டுவிட்டது. இனி, தமிழன்னை அதைப் பார்த்துக் கொள்வாள்.

தமிழியக்கம் குறித்த நினைவுடன் இருந்தபோது, கடந்த 17-ஆம் தேதி கவியரசு கண்ணதாசனின் நினைவு நாள் வந்தது. கவியரசு கண்ணதாசன் நடத்திய "தென்றல்' இதழில் வெளிவந்த தமிழறிஞர்களின் கட்டுரைகளை ஆர்.பி. சங்கரன் என்பவர், "தென்றல் வளர்த்த தமிழ்' என்கிற பெயரில் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார். தமிழியக்கத்துக்கு வலு சேர்க்கும் கட்டுரைகள் அந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.
1954 முதல் 1962-ஆம் ஆண்டு வரை கவியரசு கண்ணதாசன் நடத்திய திங்கள் இதழ் "தென்றல்'. திரையுலகிலும், அரசியல் மேடைகளிலும் தனிப்பெரும் ஆளுமையாக அவர் வலம்வந்த வேளையிலும், தமிழை மறக்காமல் அவர் ஆற்றிய இலக்கியப் பணிதான் "தென்றல்'. தன்னுடைய கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், நாடகங்கள் மட்டுமல்லாமல், பல புதிய எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் அறிமுகம் செய்ததிலும் "தென்றல்' இதழுக்குப் பெரும் பங்குண்டு. தென்றலில் கட்டுரை வெளிவந்தால் அதை இலக்கிய அங்கீகாரமாகவும், மோதிரக் கையால் குட்டுப்பட்ட பெருமையாகவும் எழுத்தாளர்கள் கருதினார்கள்.
அன்றைய மூத்த தமிழறிஞர்களான கி.ஆ.பெ.விசுவநாதம், கா.அப்பாதுரையார், தேவநேய பாவாணர், ஒüவை துரைசாமிபிள்ளை, மு.வரதராசனார், அ.கி.பரந்தாமனார், டாக்டர் மா.இராசமாணிக்கனார், அ.மு.பரமசிவானந்தம் முதலிய எண்ணற்ற பெருமக்களின் படைப்புகள் தென்றலில் வெளிவந்தன. அவற்றில் தமிழ் குறித்தும், தமிழ் வளர்ச்சி குறித்தும், தமிழில் பிறமொழி சொற்களின் கலப்பு குறித்தும் வெளிவந்த 20 கட்டுரைகள் "தென்றல் வளர்த்த தமிழ்' தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
கவியரசு கண்ணதாசனின் தமிழ்ப் பற்றையும், இலக்கிய ஆர்வத்தையும் எடுத்துரைக்கும் "தென்றல் வளர்த்த தமிழ்' எடுத்துரைக்கும் சேதி என்னவென்றால், 1954-லிலேயே கவியரசர் "தமிழியக்கம்' ஒன்றைப் பெயரிடாமல் தொடங்கியிருந்தார் என்பதுதான்.

பத்தாண்டுகளுக்கு முன்பு கோவை கம்பன் கழகத்தில் உரையாற்றச் சென்றபோது, நிகழ்ச்சித் தொகுப்பாளராக எனக்கு அறிமுகமானவர் திருமதி மகேஸ்வரி சற்குரு. கம்பன் மீது பேரார்வம் கொண்ட இலக்கியச் சொற்பொழிவாளரான மகேஸ்வரி சற்குரு, கவியரங்கம், பட்டிமன்றம் மட்டுமல்லாமல், ஆன்மிக மேடைகளிலும் தனி முத்திரை பதித்தவர். பல கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் சென்று சுயமுன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், சேவை மனப்பான்மையுடன் கூடிய விழிப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத்திவரும் இவரின் கம்பன் குறித்த கட்டுரைகளின் தொகுப்புதான் "கம்பன் தந்த மகாமந்திரம்'.
கோதண்டராமனின் அம்பரா தூளியிலிருந்து கம்பீரமாகப் புறப்படுகின்ற வாளியைப் போல இந்தத் தொகுப்பில் இடம்பெறும் ஒவ்வொரு கட்டுரையும் மகேஸ்வரி சற்குருவின் நெஞ்சத் தூளியிலிருந்து ஒய்யாரமாகக் கிளம்பி சொல்லோவியம் படைத்திருக்கிறது. கம்ப காதையில் என்னென்ன பாடல்களை மீண்டும் மீண்டும் நான் படித்து ரசிப்பேனோ, அந்தப் பாடல்கள் எல்லாம் மகேஸ்வரி சற்குருவின் ரசனைக்கும் உரிய பாடல்கள் என்பதைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.
அது என்ன கம்பன் தந்த மகாமந்திரம்? இதற்கு மகேஸ்வரி சற்குரு விளக்கம் தருகிறார்: ""முடிவெடுக்கும் திறனே வெற்றி-தோல்விகளை நிர்ணயிக்கிறது. அத்தகைய முடிவுகளே வாழ்க்கைப் பாதையை திசை திருப்பும் திசைகாட்டிகளாக உள்ளன. கம்பன் தனது காவியத்தில் வெற்றி தரக்கூடிய சிறந்த முடிவுகள் எடுப்பதற்கான நுட்பமான திசைகாட்டியை ஆங்காங்கே வைத்துள்ளான். முடிவெடுக்கும் திறனை மந்திரமாக நமக்குத் தந்துள்ளான்'' என்று கூறும் மகேஸ்வரி சற்குரு கம்ப காவியத்தில் அதுபோல எடுக்கப்படும் மந்திர முடிவுகளைத் தேர்ந்தெடுத்து 16 கட்டுரைகளாக்கிப் புத்தக வடிவம் தந்திருக்கிறார்.

கோயில் சிலைகளின் திருட்டு, பரவலாகவும், பரபரப்பாகவும் பேசப்பட்டு வரும் நேரத்தில், திருமயத்திலிருந்து வெ.சீனிவாசன் என்கிற வாசகர் குறுஞ்செய்தியில் அனுப்பியிருக்கும் கவிதை இது:
செருப்புக்கு டோக்கன்
நுழைவுக்கு சோதனை
உண்டியலுக்குப் பூட்டு
சிலை திருட்டு!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com