கம்பர் காட்டும் ஆசிரியர் பக்தி!

ஒளவையார்  சில இல்லாதவைகளைக் கூறி அவை இருப்பதான சிறப்பை, "நீறில்லா நெற்றிபாழ், நெய்யில்லா உண்டிபாழ் /  ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்' எனக்  குறிப்பால் உணர்த்தினார்.
கம்பர் காட்டும் ஆசிரியர் பக்தி!

ஒளவையார்  சில இல்லாதவைகளைக் கூறி அவை இருப்பதான சிறப்பை, "நீறில்லா நெற்றிபாழ், நெய்யில்லா உண்டிபாழ் /  ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்'  எனக்  குறிப்பால் உணர்த்தினார். ஆனால், "திரிகடுகம்' இயற்றிய நல்லாதனார், "கணக்காயர் இல்லாத ஊர்நன்மை பயத்தல் இல' (10)  என ஆசிரியர் இல்லாத ஊரைப் பயனில்லாததாக வெளிப்படையாய்க் கூறியது, ஆசிரியருக்குள்ள சிறப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.

ஆசிரியரும் மனிதரே ஆயினும் அவரை மனிதருள் மாமனிதராக மக்கள் போற்றினர். அவர் அனைவருக்கும் முன் மாதிரியானவர். அவரது சொல்லும், தோற்றமும் தெய்வாம்சம் மிக்கதாக இருந்ததால் சமூகத்தில் அவரது மதிப்பும் மரியாதையும் உயர்வுடையதாகக் கருதப்பட்டன. அதனால்  அவர், "எழுத்தறிவித்தவன் இறைவனாவான்' எனப் புகழப்பட்டார்.

இவற்றிக்கான சான்று ஒன்றைக் கம்ப காவியத்தில் காணலாம். விசுவாமித்திர முனிவர் தமது வேள்வியைக் காப்பதற்கு ராமனை அயோத்திலிருந்து காட்டுக்கு அழைத்து வந்தார். வேள்விக்குத் தீங்கு செய்த தாடகை என்னும் அரக்கியை ராமன் கொன்றதும் வேள்விக்கான செயல் முடிந்தது.

இதனால் ராமனை முனிவர், அயோத்திக்குக் கூட்டிப்போய் விடாமல் மிதிலைக்கு அழைத்துப் போக, முனிவரது வரவை அறிந்த மிதிலை மன்னன் சனகர், முனிவரை வரவேற்று ஓர் ஆசிரமத்தில் தங்க வைத்தார்.

இந்நிலையில், முனிவருடன் வந்த ராம-லட்சுமணர்களைப் பற்றி அறிய ஆவல் கொண்ட சனகர், ""இவர் யாவர்?''  என்றார். வினாவைத் தொடுத்தபோதே, சனகரின் முகம் மலர்ந்திருந்தது. 

""தசரதனின் புதல்வர்கள்'' என்றார் முனிவர். 

சனகரின் முகம் வாடியது. இதனையும் அந்தத் திரிகால முனி உணர்ந்தார்.
நாளை நடக்கும் சீதைக்கான வில் முறிப்பில் ராமன் முறித்தால் அவன் சீதைக்குப் பொருத்தமான மணாளனாக இருப்பான் எனத் திட்டமிட்டு மனதிற்குள் மகிழ்ந்தவனுக்கு, தசரதன் மக்கள் என்றதும் தந்தையறிவு மகனறிவாகும் என்பதால், தந்தைக்கான பலதாரப் பண்பு இவனுக்கும் ஆகிவிடும் என்பதால் சனகனின் முந்திய உணர்வை மாற்றிக் கொண்டான் போலும்' என விசுவாமித்திரர் எண்ணி, அந்த வாட்டத்தைப் போக்க வேண்டி, ""பெற்றது தசரதனானாலும் கல்வி பயிற்றுவித்து வளர்த்து ஆளாக்கியது வசிட்டர்'' என்றார். இக்காட்சி குறிப்பின் குறிப்புணர்தலாக அமைந்தது. இதைக் கம்பர், 

"திறையோடு அரசிறைஞ்சும் செறிகழல்கால் தசரதனாம் 
முறையோடு தொடர்மனத்தான் புதல்வர் எனும் பெயரேகாண்,
உறையொடு நெடுவேலோய் உபநயன விதிமுடித்து 
மறையோது வித்து வளர்த்தானும் வசிட்டான் காண்!' 

என்றார். பெற்றெடுத்ததோடு தசரதனது கடமை முடிந்தாலும் குருகுலத்தில் ராமனை அறிவால் புரந்து வளர்த்து ஆளாக்கியதெல்லாம் ஆசிரியராகிய குருகுல வசிட்டர் என்பதால், தந்தை அறிவு மகன் அறிவு என்பதினும் ஆசிரியரது அறிவே மாணாக்கரை உருவாக்கியது என்பதால், "சனகமகா அரசரே, நீர் உம்  எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டாம்' எனக் குறிப்பாகச் சொல்லாமல் சொல்லிக் காட்டினார் என்பதாகும். இதில்தான் ஆசிரியர் - மாணாக்கர் உறவின் சிறப்பு உணர்த்திக் காட்டப்பட்ட அளவில் மறுநாள் விற்போட்டியில் ராமன் வெற்றி பெற்று சீதையை மணந்தான். மணந்ததும் அவன் அங்கு அமர்ந்திருந்த குலகுருவாகிய ஆசிரியராம் வசிட்டரது காலில் விழுந்து வணங்கிய பின்னரே, பெற்றோர் காலில் விழுந்து வணங்கினான் என்கிறார் கம்பர்,

"முற்றிய மாதவர் தான் முறை சூடி
கொற்றவனைக் கழல் கும்பிடலோடும்
பொற்றொடியைக் கொடு நல்மனை புக்கான்'

முற்றிய மாதவர் என்பவர் வசிட்டர், விசுவாமித்திரர் ஆவர். கொற்றவன் என்பவன் தந்தை தசரதன் ஆவான். இவ்வாறு கம்பர் காட்டும் ஆசிரியர் பக்தி அளப்பரிது!

ஆசிரியர்களே மாணாக்கரை உயர்த்தும் கலங்கரை விளக்கானவர்கள் என்பதற்குப் பலரை எடுத்துக் காட்டலாம்.  அதற்கோர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்தான் ஆசிரிய தினக் கொண்டாட்டத்தின் பிதா மகனாகிய டாக்டர் இராதாகிருஷ்ணன்.

வடக்கே இராமகிருஷ்ணர் - சுவாமி விவேகானந்தர்; தெற்கே திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை - உ.வே.சாமிதாதையர் என்போர் ஆசிரியர் - மாணாக்கர்களுக்கான அடையாள பிம்பங்களாவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com