கவி பாடலாம் வாங்க - 40: 8. வெண்பா இனம் (1)

பாக்கள் நான்கு வகை என்றும் அவை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்றும் பாவினங்கள் துறை, தாழிசை, விருத்தம் என மூவகைப்படும் என்றும் முன்பு கண்டோம். வெண்பாவின் வகைகளாகிய குறள்
கவி பாடலாம் வாங்க - 40: 8. வெண்பா இனம் (1)

பாக்கள் நான்கு வகை என்றும் அவை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்றும் பாவினங்கள் துறை, தாழிசை, விருத்தம் என மூவகைப்படும் என்றும் முன்பு கண்டோம். வெண்பாவின் வகைகளாகிய குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, கலி வெண்பா ஆகியவற்றின் இலக்கணத்தை முதல் பாகத்தில் அன்பர்கள் அறிந்திருப்பார்கள்.
வெண்பாவின் இனங்களைப் பற்றி இப்போது கவனிக்கலாம். குறள் வெண்பாவுக்குக் குறள் வெண் செந்துறை, குறள் தாழிசை என்று இரண்டு இனங்கள் உண்டு.

குறள் வெண் செந்துறை
இரண்டு அடிகளாய் அளவு ஒத்து அறம் பொருள் இன்பம் வீடு என்னும் சிறந்த உறுதிப் பொருள்களைப் பற்றி வருவது குறள்வெண்செந்துறை. இதை வெண் செந்துறை என்றும் கூறுவது உண்டு. 

"ஒழுகிய ஓசையின் ஒத்தடி இரண்டாய்
விழுமிய பொருளது வெண்செந் துறையே'

என்பது யாப்பருங்கலம்.

"ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை'

என்னும் முதுமொழிக் காஞ்சிப் பாட்டில் இவ்விலக்கணங்கள் பொருந்தியிருப்பதால் அது குறள் வெண் செந்துறையாகும்.

நான்கு சீருக்கு அதிகமாகப் பல சீரால் அமைந்த அடி இரண்டாய் ஈற்றடி குறைந்து வருபவையும், செந்துறை வெள்ளையிற் சிதைந்து வருபவையும், குறள் வெண்பாவில் தளை பிறழ்ந்து வருபவையும் குறள் தாழிசை எனப்படும். தாழிசைக் குறள் என்றும் இதைச் சொல்வதுண்டு.

"நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாய ஞானநற்
கண்ணி னானடி யேஅடை வார்கள் கற்றவரே'

இந்தக் குறள் தாழிசை நான்கு சீரினும் மிக்க அடிகளை உடையதாய், முதலடி எட்டுச் சீரும் இரண்டாவது அடி ஐந்து சீரும் உடையதாய் வந்தது.

"வெள்ளை நரைத்தலை மிக்கவ ராயினும்
எள்ளி யுரைப்பீர் என்னே நுங்குணம்'

இது குறள் வெண்செந்துறைபோல இருப்பினும் விழுமிய பொருளுடையதாக இல்லாமையால் குறள் தாழிசை ஆயிற்று.

"எத்தனை காலம் பெரியாரோ டிருந்தாலும்
பித்தருக் குண்டாமோ பெட்பு' 

இது குறள் வெண்பாவைப் போலத் தோற்றினாலும், பெரியாரோடிருந்தாலும் என்ற இடத்தில் கலித்தளை அமைந்து செப்பலோசை பிறழ்ந்தமையால் இது குறள் தாழிசை ஆயிற்று. பின் இரண்டும் அத்துணைச் சிறப்புடையன அல்ல.

வெளி விருத்தம்

இனி வெண்பாவின் இனங்களைக் கவனிக்கலாம். வெளி விருத்தத்தைப் பற்றி முன்பு ஓரளவு அறிந்தோம். ஐஞ்சீரடி மூன்றோ நான்கோ வந்து, ஐந்தாவது சீர் ஒரே சொல்லாக வருவது வெளிவிருத்தம்.

"ஒருமூன் றொருநான் கடியடி தோறும்
தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை
விருத்தம் எனப்பெயர் வேண்டப் படுமே'

என்பது காக்கைப் பாடினியம் என்ற பழைய யாப்பிலக்கணச் சூத்திரம்.

"கொண்டல் முழங்கினவால் கோபம் பரந்தனவால் 
என்செய்கோயான் 
வண்டு வரிபாட வார்தளவம் பூத்தனவால் 
என்செய்கோயான்
எண்டிசையுந் தோகை இயைந்தகவி ஏங்கினவால்
என்செய்கோயான்'

இது மூன்று அடியாகி, அடிதோறும் இறுதியில் என் செய்கோயான் என்ற தனிச் சொல்லைப் பெற்று வந்த வெளி விருத்தம். ஐந்தாம் சீராக ஒரே தொடர் மீட்டும் மீட்டும் வந்திருத்தலைக் கவனிக்க. 

"ஆவா வென்றே அஞ்சின ராழ்ந்தார் ஒருசாரார்
கூகூ வென்றே கூவிளி கொண்டார் ஒருசாரார்
மாமா வென்றே மாய்ந்தனர் நீத்தார் ஒருசாரார்
ஏகீர் நாய்கீர் என்செய்து மென்றார் ஒருசாரார்'

இது நாலடியாய் வந்த வெளி விருத்தம். 

(தொடர்ந்து பாடுவோம்...)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com