சந்திரிகையின் கதை: நாவல் முயற்சி!

கவிஞராக அனைவராலும் அறியப்பட்ட மகாகவி பாரதியார், கட்டுரைகளுடன் அவ்வப்போது கதைகளையும் எழுதியுள்ளார். அவற்றுள் சில சிறுகதைகளுக்குரிய தன்மைகளுடன்
சந்திரிகையின் கதை: நாவல் முயற்சி!

கவிஞராக அனைவராலும் அறியப்பட்ட மகாகவி பாரதியார், கட்டுரைகளுடன் அவ்வப்போது கதைகளையும் எழுதியுள்ளார். அவற்றுள் சில சிறுகதைகளுக்குரிய தன்மைகளுடன் இருக்கின்றன. அந்த வகையில், பாரதியாரின் கதைகள் முறையாக அணுகப்பட்டிருந்தால் முதல் சிறுகதையை எழுதியவர் பாரதியார்தான் என்று சிறுகதை வரலாற்றில் பதியப்பட்டிருக்கும்.
வ.வே.சு. ஐயரின் "குளத்தங்கரை அரசமரம்' என்ற சிறுகதை மட்டும்தான் சிறுகதைக்குரிய தன்மைகளுடன் இருப்பதாக விமர்சகர்கள் மதிப்பிட்டனர். ஆனால், அதுவும் வங்கமொழிக் கதையின் தழுவல் என்ற முடிவினை விமர்சகர்கள் எட்டினர்.
பாரதியின் கவிதையை ஆராய்வதிலேயே விமர்சகர்கள் கவனம் செலுத்தினர்; உரைநடையைக் கண்டுகொள்ளவில்லை. அவரது கவிதைமொழி தொட்ட உச்சத்தைக்கொண்டு கதைகளை அணுகியதால் பாரதியின் கதைகள் பின்தங்கிவிட்டன. இந்தப் பிரச்னையை இன்று எழுதக்கூடிய பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.
பாரதியார் தன்னுடைய இறுதி நாள்களில், அதாவது 1920-ஆம் ஆண்டு "சந்திரிகையின் கதை'யை "சுதேசமித்திரன்' இதழில் எழுதினார். "பூகம்பம்' முதல் "சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு' வரையான ஒன்பது அத்தியாயங்கள் மட்டும் வெளியாயின. பாரதியின் மறைவிற்குப் பிறகு 1925-ஆம் ஆண்டு "பாரதி பிரசுராலயம்' இதனைத் தனிநூலாக வெளியிட்டிருக்கிறது. 1982-ஆம் ஆண்டு ரா.அ.பத்மநாபன் "பாரதி புதையல் பெருந்திரட்டு' என்ற தொகை நூலொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "சந்திரிகையின் கதை'யில் இதுவரை வெளிவராத ஒன்பதாவது அத்தியாயத்தின் இறுதிப் பகுதியையும் "விசாலாக்ஷிக்கு úக்ஷமகாலம்' என்ற பத்தாவது அத்தியாயத்தின் முதல் ஏழு பக்கங்களையும் தொகுத்து வெளியிட்டுள்ளார். ஏறக்குறைய விசாலாட்சியின் வாழ்க்கையை மட்டும் சொல்லி நிறைவு செய்திருக்கிறார் பாரதி. சந்திரிகையின் கதையைத் தொடங்கவே இல்லை.
பாரதியார் எழுதிய ஒரே சமூக நாவல், "சந்திரிகையின் கதை'. மாதர் விடுதலை, சமூகச் சீர்திருத்தம் முதலிய கருத்துகள் இழையோடும் இந்நாவலில் ஒன்பது முழு அத்தியாயங்களும், பத்தாவது அத்தியாயத்தில் ஏழு பக்கங்களும் எழுதியிருந்த சமயம், காலன் அவரைக் கொண்டுபோய் விட்டான்.
பத்தாவது அத்தியாயத்தில் அவர் எழுதியுள்ள கடைசி வாக்கியம் முற்றுப்பெறாமல் அந்தரத்தில் நிற்கிறது (பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.141) என்று ரா.அ.பத்மநாபன் எழுதியிருக்கிறார். பலரும் "சந்திரிகையின் கதை'யைச் சிறுகதை என்றே அளவிடுகின்றனர். ஆனால், இவர்தான் "சமூக நாவல்' என்று அதைக் குறிப்பிட்டிருக்கிறார். இனி இப்புனைவை நாவல் என்று அழைப்பதுதான் சரியானதாக இருக்கும்.
"சந்திரிகையின் கதை' பெரும் "நாவல்' ஒன்றுக்கான முயற்சி. உன்னதமான ஒரு புனைவாக அமைவதற்குரிய அடித்தளம் இப்பத்து அத்தியாயத்திற்குள் இருப்பதைப் புனைவை வாசிப்பவர்களால் எளிதில் உணர முடியும். இக்கதை நிறைவேறியிருந்தால், தமிழிலக்கியப் புனைகதை வரலாற்றில் இது ஒரு கருவூலமாகத் திகழ்ந்திருக்கும் எனத் திறனாய்வாளர் பலரும் மதிப்பிட்டுள்ளனர். பாரதியாரின் இக்கதையில் நவீன புனைவு வடிவத்தின் தன்மைகள் நிரம்பி வழிகின்றன. "சந்திரிகையின் கதை' பலவகைகளில் நவீனத் தன்மையைப் புனைவிற்குள் முன்னெடுத்திருக்கிறது.
ஜீ.சுப்பிரமணிய ஐயரிடம் தனக்கு எப்படிப்பட்ட கணவன் வேண்டும் என்று விசாலாட்சி கேட்குமிடமும் குறிப்பிடப்பட வேண்டியது. "என் கணவன் பணமுடையவனில்லா விட்டாலும் நல்ல படிப்பும் மாசந்தோறும் கொஞ்சம் பொருள் சம்பாதிக்கும் திறமும் உடையவனாக இருக்க வேண்டும். இந்தக் குழந்தையும் என்னோடுதான் இருக்கும்' என்று தன்னிடம் ஒப்படைத்துவிட்டு இறந்துபோன அண்ணன் குழந்தையைச் சுட்டிக்காட்டித் தெளிவாகப் பேசுகிறாள்.
இந்நாவலின் கதை 1901-1907 காலகட்டத்தில் நடைபெறுவதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. பெண்கள் இவ்வளவு தெளிவோடு பேசுவதற்குப் பாரதி இப்புனைவில் இடத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். பத்து வயதில் விதவையானவள் விசாலாட்சி, இல்லறம் என்றால் என்னவென்று அறியாத வயதிலேயே தன் கணவனை இழந்தவள்.
அவள் பேசுகிறாள், "இந்தக் குழந்தையும் என்னோடுதான் இருக்கும்' என்று. இன்றுகூட இதுபோன்ற உரையாடலைப் பொதுவில் நிகழ்த்த முடியாது. "எனக்கும் அந்தப் பால்ய திருமணத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது; நான் எதற்காக மறுமணம் செய்துகொள்வதற்கு நாணப்பட வேண்டும்' என்ற தொனி அவளது பேச்சில் பொதிந்திருக்கிறது. விதவை மறுமணம் என்ற சீர்திருத்தத்தைத் தாண்டி அந்தக் குரல் ஒலிக்கிறது. நான் மறுமணத்தை யாசகமாகக் கேட்கவில்லை; அது எனக்கான உரிமை என்ற சுதந்திரம் அவளது உரையில் வெளிப்படுகிறது. மிகச் சாதாரணமானதோர் எதிர்பார்ப்பு. இதுகூட அவர்களுக்குச் சாத்தியப்படவில்லை என்பதுதான் துயரமானது.
பாரதியின் எள்ளல் மொழியும் கூர்ந்த சமூக அவதானிப்பும் புனைவில் வெளிப்படுகின்றன. பாரதியிடம் ஒரு செவ்விலக்கிய (கிளாசிக்) நாவலைப் படைப்பதற்கான முன்னெடுப்புகள் மனதிற்குள் பதியமிட்டிருக்கின்றன. கருத்தியல், உருவம் சார்ந்து இந்நாவல் பல படிகள் முன்னோக்கி நகர்ந்திருப்பதைக் காலத்தின் துணையுடன் வாசித்துணர வேண்டும்.
}சுப்பிரமணி இரமேஷ்




 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com