கோரிக்கைகளை  நிறைவேற்றும் கோமுகேஸ்வரப் பெருமாள்!

ஒரு முறை சுந்தரமூர்த்தி சுவாமிகள் தென் தமிழகத்தில் பல்வேறு சிவத்தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்து வந்தார்.
கோரிக்கைகளை  நிறைவேற்றும் கோமுகேஸ்வரப் பெருமாள்!

ஒரு முறை சுந்தரமூர்த்தி சுவாமிகள் தென் தமிழகத்தில் பல்வேறு சிவத்தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்து வந்தார். அப்படியான தன்னுடைய சிவதரிசன யாத்திரையில் நஞ்சைக் கொழிக்கும், தஞ்சைத் தரணியில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அருள்மிகு ஞானாம்பிகை சமேத கோமுகேஸ்வரப் பெருமானை தரிசிப்பதற்காக வந்து கொண்டிருந்தார். அவருடன் மேலும் சில அடியார்களும் வந்திருந்தனர். வழியில், வெட்டாறு என்று அழைக்கப்படும் அகத்திய காவிரியைத் தாண்டித்தான் கோமுகேஸ்வரர் கோயிலை அடைய முடியும். ஆனால் வெட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அடியார்களுடன் மனம் கலங்கி நின்றார். ஆற்றை எப்படிக் கடப்பது என்ற கவலையில் வருத்த முற்றார். உலகத்தை படைத்து, காத்து, அழித்து, மறைத்து அருள்புரிகின்ற ஈசன் இதனை ஞான திருஷ்டியில் கண்டார்.  உடனே ஓடக்காரனாக வந்து சுந்தரமூர்த்தி நாயனார் முன்பு நின்றார்.

அக்கரைக்கு கொண்டு சென்று விடுவதாக சொல்லி சில பொற்காசுகளை கூலியாகப் பெற்றுக் கொண்டார். முதலில் சில அடியார்களை மட்டும் அக்கரையில் கொண்டு போய் விடுகிறார். பிறகு மீண்டும் கரைக்கு வந்து சுந்தரமூர்த்தி நாயனாரை ஏற்றிக்கொண்டு வருகிறார் ஓடக்காரனாக வந்த ஈசன்.

நடு ஆற்றில் வந்து கொண்டிருக்கும் போது தன்னுடைய திருவிளையாடலை ஆரம்பிக்கிறார் ஈசன். நடு ஆற்றில் சுழல் ஏற்படச் செய்கிறார். ஓடம் சுழலும் போது துடுப்பையும் நழுவ விட்டு விடுகிறார். பிறகு துடுப்பை எடுப்பதற்காக தண்ணீரில் குதித்து தேடுவதாக பாசாங்கு செய்கிறார் ஈசன். மேலும் நீச்சல் தெரியாதவர் போன்று தத்தளிக்கிறார். படகில் இருந்த நாயனார் கண்களை மூடி ஈசனை பிரார்த்திக்கிறார். படகு பாறையில் மோதி நொறுங்குகிறது. இறைவன் ரிஷபாரூடராக தோன்றி அனைவரையும் காப்பாற்றி திருக்காட்சி அருள்கிறார்.

சுந்தரமூர்த்தி நாயனாரின் கோரிக்கையை நிறைவேற்றியது போலவே, பக்தர்கள் எந்த கோரிக்கையோடு வந்தாலும் அதை நிறைவேற்றித்தரும் இந்த கோமுகேஸ்வரரை தேவர்களின் தலைவனான தேவேந்திரன் கொக்கு வடிவத்தில் வந்து பூஜித்து வரம் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.

காஞ்சி காமகோடி பீடாதிபதி மகா பெரியவர் அவர்கள் இந்த ஆலயத்திற்கு இருமுறை விஜயம் செய்து வழிபட்டுள்ளார்கள். அருள்மிகு கோமுகேஸ்வரரை பெளர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் வழிபட்டால் எல்லாவிதமான தோல்வியாதிகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.

இவ்வாலயத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை, ஸமேத கல்யாண சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, கஜலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி, சண்டிகேஸ்வரர், நந்தி, பைரவர் ஆகிய கடவுளர்களுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

இவ்வாலயத்தில் தற்போது கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொடர்புக்கு: 94864 16998. 
- ஆதலையூர் சூரியகுமார் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com