குஞ்சரி ரஞ்சித குமரன்!

சூரபதுமன் முதலிய அசுரர்களை அழித்துத் தேவர்களின் துயர் துடைத்ததற்கு நன்றி செலுத்தும் வகையில் தேவேந்திரன் தன் புதல்வியாகிய தேவசேனாவை முருகப் பெருமானுக்குத் திருமணம் செய்வித்தான்.
குஞ்சரி ரஞ்சித குமரன்!

சூரபதுமன் முதலிய அசுரர்களை அழித்துத் தேவர்களின் துயர் துடைத்ததற்கு நன்றி செலுத்தும் வகையில் தேவேந்திரன் தன் புதல்வியாகிய தேவசேனாவை முருகப் பெருமானுக்குத் திருமணம் செய்வித்தான். இந்தத் தெய்வீகத் திருமணம் நடைபெற்ற இடமாக திருப்பரங்குன்றத்தைக் கூறி விவாகச் சடங்குகள் நடந்தவிதத்தையும், இந்திரனுக்கு மகுடாபிஷேகம் நடத்திய பிறகு திருமணத் தம்பதிகள் ஸ்கந்தகிரி திரும்பிய விதத்தையும் கந்தபுராணம் விவரமாகத் தெரிவிக்கின்றது. திருப்பரங்கிரிப் புராணமும் இந்த வைபவத்தை விவரிக்கின்றது. 

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகிய இத்தலம் மதுரையம்பதிலிருந்து சுமார் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது என்பதை நாம் அறிவோம். தேவேந்திரன் தாரைவார்க்க, தேவயானையைக் கரம் பிடித்த தேவசேனாதிபதியான முருகனின் அழகிய திருமணக்கோலம் திருப்பரங்குன்றத்தில் தூண் சிற்பமாக அமைந்துள்ளது காண வேண்டிய ஒன்று. பாற்கடலைக் கடைந்த தருணத்தில் தோன்றியது ஐராவதம் என்ற வெள்ளை யானை. தேவலோகத்தில் இந்திரனின் பட்டத்து யானையாகிய இந்த யானையால் வளர்க்கப்பட்டவளே தேவசேனை என்று புராணம் கூறுகின்றது. அதனால் தேவசேனைக்கு கஜநாயிகை என்றும் தெய்வயானை என்றும் பெயர் உண்டு. 

அருணகிரிநாதர் தனது திருத்தணித் திருப்புகழில் "தெய்வயானைக்கு இளைய வெள்ளை யானைத் தலைவ தெய்வயானைக்கு இனிய பெருமாளே' என்று பாடியுள்ளார். அதாவது, தெய்வயானையாகிய கணபதிக்கு இளைய பெருமாளே, வெள்ளையானை ஐராவதத்துக்குத் தலைவனே, தேவசேனைக்கு இனிமை தரும் பெருமாளே, என்பது இதன் பொருளாகும். முருகன் தேவசேனா தேவியுடன் காட்சி தரும் இரண்டு விக்ரகத் திருமேனிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஒன்று, சுவாமலை திருத்தலத்தில் சபாபதி என்னும் வடிவில் முருகன் நடராஜரைப் போன்று நான்கு திருக்கரங்களில் இரண்டு நீட்டிப்பிடிக்கப் பெற்றும், மற்றைய இரண்டும் கீழ்நோக்கி வளைத்துக் காட்டியும் தேவசேனாதேவியுடன் காட்சியளிக்கின்றார். குஞ்சரி ரஞ்சித குமரன் இவ்வடிவம் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் தேவசேனா தேவியைத் திருமணம் செய்து கொண்ட கோலத்தில் உள்ள பாகுலேய மூர்த்தியின் தோற்றத்தைக் குறிக்கிறதென்பார். மிக அபூர்வமான இவ்வடிவம் வேறு எந்த திருத்தலத்திலும் காண்பதற்கரியது. மற்றொன்று திருவிடைக்கழி திருத்தலத்தில் உள்ள குஞ்சரி ரஞ்சித குமரனின் பஞ்சலோகப் படிமம். இந்த திருக்கோலத்தில் முருகப் பெருமான் தெய்வயானை யின் வலப்புறம் நின்று அவருடைய இடது தோளின் மீது தன் திருக்கரத்தை வைத்தபடி காட்சி  தருகின்றார். தேவகுஞ்சரி எனப்படும் தேவசேனாவை மகிழ்விக்கும் (ரஞ்சித) குமரன் வடிவம் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும். அருணகிரிநாதரும், சேந்தனாரும் பாடியுள்ளவற்றைக் கருத்தில் கொண்டு இப்படிமத்தை சென்னை சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவினர் இத்தலத்தில் நிறுவியுள்ளனர். மேலும் இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பு தெய்வயானைக்குத் தனிசந்நிதி இருப்பதாகும்.

முதலில் தேவலோகவாசியான தேவசேனா தேவியைக் கரம் பிடித்த குஞ்சரி ரஞ்சித குமரனே பின்னர் பூலோகவாசியான வள்ளியைக் கரம்பிடித்து குறமகள் தழுவிய குமரனாக ஆனார். ஆனால் நம் வழக்கத்தில் சாதாரண மானிடப் பிறவியாக அவதரித்து ஜீவாத்மா பரமாத்மா ஐக்கிய பாவனையில் தனது பக்தியால் மால்மருகனை வள்ளி கரம் பிடித்ததை சிலாகித்து பெருமைப்படுத்தும் விதமகாக வள்ளி தேவசேனாசமேத சுப்ரமண்ய சுவாமி என்றே கூறுகின்றோம். மேலும் வள்ளி தெய்வயானை திருமணங்களை இணைந்தே நடத்தும் வழக்கத்தையும் கொண்டுள்ளோம். 

தற்போது கந்தர் சஷ்டி விழா தமிழகமெங்கும் முருகன் குடிகொண்டுள்ள திருத்தலங்களில் நடைபெற்று வருகின்றது. நிறைவு நிகழ்வுகளாக நவம்பர் 5-ஆம் தேதி மகா கந்த சஷ்டியன்று சூரசம்ஹாரமும், மறுநாள் நவம்பர் 6-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். இத்திருமண உற்சவம் தேவசேனாவுடன் கூடிய முருகப் பெருமானின் கல்யாணத்தைக் குறிக்கின்றது என்பதைக் கருத்தில் கொள்வோமாக.

- எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com