அறிவியலுக்கு அப்பால் 26: நிறைமுகம்

சென்ற 25 வாரங்களாக, இன்னமும் அறிவியலின் ஆளுகைக்குள் அகப்படாமல் இருக்கும் எத்தனையோ விஷயங்களைப் பற்றி நாம் கண்டோம்.
அறிவியலுக்கு அப்பால் 26: நிறைமுகம்

அறிவியலுக்கு அப்பால் -26
சென்ற 25 வாரங்களாக, இன்னமும் அறிவியலின் ஆளுகைக்குள் அகப்படாமல் இருக்கும் எத்தனையோ விஷயங்களைப் பற்றி நாம் கண்டோம். இத்தொடரைப் படித்த வாசகர்களுக்குப் பல சந்தேகங்கள் எழுந்திருக்கலாம். இப்படிக்கூட நடக்குமா என்னும் ஐயம் சிலருக்கும், இதையெல்லாம் எப்படி நம்புவது என்ற கேள்வி சிலருக்கும், ஒருவேளை அப்படியே நடந்திருந்தாலும் அதிலிருந்து நாம் கொள்ள வேண்டிய முடிவு அல்லது பாடம் என்ன என்னும் திகைப்பு சிலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். அவர்களுக்கு எனது பணிவான பதில் என்னவென்றால், அறிவியலாளர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்ட, அல்லது நடுநிலையா ளர்கள் முன் பதிவு செய்யப்பட்ட, நிகழ்வுகளை மட்டுமே நான் இத்தொடரில் எழுதியுள்ளேன் என்பதுதான். இந்தப் பதிவுகள் நமக்குச் சொல்லும் பாடம் என்ன? 

இந்தப் பிரபஞ்சம் (universe) அல்லது அண்டம், நம் கற்பனைக்கும் எட்டாத ஒரு  சித்திரம், ஒரு புதிர். அதில் இருப்பவை, இல்லாதவை, இருப்பதாகத் தெரிபவை, இருந்தும் மறைந்திருப்பவை, தோற்ற மயக்கங்களாலும், காட்சிப் பிழைகளாலும் நம்மை ஏமாற்றித் திரிபவை என்று எத்தனையோ உண்டு. நம் புலன்களுக்குப் புலப்பட்டவை அனைத்தும் உண்மையென்றோ, புலன்களுக்குப் புலப்படாத அனைத்தும் பொய்மை யென்றோ நாம் கூற முடியவில்லை. கம்பன் காப்பியத்தில் ஆரணிய காண்டத்தில் மாரீசன் வதைப் படலத்தில் ஓர் அற்புதமான பாடல் உண்டு. பொன் மானைக் கண்டு, சீதை மதி மயங்கியபோது, அப்படிப் பட்ட ஒரு மான் உலகில் இருக்க முடியாது என்றும், அது ஒரு மாயை என்றும் இலக்குவன் அறிவுரை கூறுகிறான். உடனே இராமன், 
நில்லா உலகின் நிலை, நேர்மையினால்
வல்லாரும் உணர்ந்திலர்: மன் உயிர்தான்
பல்லாயிரம் கோடி பரந்துளதால்
இல்லாதன இல்லை இளங்குமரா
என்கிறான். அதாவது, "முறையான அறிவிலே திறமை சான்ற வல்லார்களுக்கும் இந்த உலகின் தன்மை முற்றிலும் அறிந்து கொள்ளத் தக்கதல்ல. நம் அறிவைக் கொண்டு மட்டும் இவ்வுலகில் இருப்பவை, இல்லாதவை அனைத்தையும் உணர்ந்துவிட முடியாது'' என்று இராமன் கூறுகிறான்.

இராமன் வாயிலாகக் கம்பன் நமக்குக் கூறிய செய்திதான் இந்த அறிவியலுக்கு அப்பால் தொடரின் அடிப்படைக் கருத்து ஆகும். மனித மூளையைப் போலவே, இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்திலும் கோடியில் ஒரு பங்கைக் கூட, மனிதன் இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இன்னமும் அறியப்படாத, புரிந்து கொள்ளப்படாத, கண்டுபிடிக்கப்படாத, அறிவினால் விளக்கப்படாத, ஆனால் சில சமயம் உள்ளுணர்வால் உணரப்படுகிற விஷயங்கள் இவ்வுலகில் ஏராளமாக உண்டு. 20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியலாளராகிய திரு.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், உள்ளுணர்வு சார்ந்த மனதிற்கும், பகுத்தறியும் மனதிற்கும் உள்ள வேறுபாட்டை இப்படி விளக்கினார் :

"உள்ளுணர்வு சார்ந்த மனம் ஒரு புனிதப் பரிசு, பகுத்தறியும் மனம் ஓர் உண்மையான ஊழியன். புனிதப் பரிசை மறந்துவிட்டு, ஊழியனைக் கொண்டாடும் சமூகத்தை நாம் உருவாக்கி விட்டோம்''(The intitutive mind is a sacred gift and the rational mind is a faithful servant. We have created a society that honour the servant and have forgotten the gift) கடந்த 40 ஆண்டுகளாக இயற்பியலில் (Physics) உலகம் போற்றும் விஞ்ஞானியாகவும், எழுத்தாளராகவும், கல்வியாளராகவும், அறிவியல் உலகில் பெரும் சிந்தனையாளராகவும் விளங்கி வரும் திரு. ஃப்ரிஜோ கேப்ரா (Fritjof Capra- author of The Tao of Physics) இயற்பியலுக்கும் (Physics), மறையாற்றலுக்கும் (Mysticism) உள்ள தொடர்பையும், ஒற்றுமையையும் இப்படி விளக்கினார் : "இயற்பியலாளர்கள் பரிசோதனைகளில் இருந்து தங்களது அறிவைப் பெறுகிறார்கள். மறைஞானிகள் உள்நோக்குப் பார்வையில் இருந்து அறிவைப் பெறுகிறார்கள். இயற்பியலாளர்கள் தங்களது விசாரணையைப் புற உலகில் அமைந்துள்ள ஜடப்பொருள்களிலிருந்து தொடங்குகிறார்கள். மறைஞானிகள் மனதின் விழிப்பு நிலையில் இருந்து (consciousness) தங்களது பயணத்தைத் தொடங்குகிறார்கள். இந்த இருவருக்குள்ளும் இருக்கும் மிகப் பெரிய ஒற்றுமை என்னவென்றால் இந்த இருவரும் பெறும் அறிவு ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டதாக நிற்கிறது''.

மேற்கூறிய தனது சிந்தனைக்கு ஆதாரமாக, திரு. ஃப்ரிஜோ கேப்ரா, கேன உபநிஷதத்திலிருந்து கீழ்க்கண்ட வாக்கியத்தை மேற்கோள் காட்டுகிறார் : "ந தத்ர சக்ஷர் கச்சதி ந வாக் கச்சதி நோ மன: ந வித்மோ ந விஜானீமோ யதை ததநுசிஷ்யது.'' அதன் பொருள், "கண்கள் அங்குப் போவதில்லை. பேச்சும், மனமும் போவதில்லை. அறிவும் போவதில்லை. எனவே, அதை எப்படிக் கற்பிப்பது என்று தெரிவதில்லை என்பதாகும். இதற்குக் காரணம், சாதாரணமாக ஐம்புலன்களின் வழியாகத் தரப்படும் தகவல்களின் அடிப்படையிலேயே மனித மூளை தனது அறிவைப் பெறுகிறது. ஆனால் பல நேரங்களில் ஐம்புலன்களைப் புறந்தள்ளிவிட்டு நமது மூளை வேறு எங்கிருந்தோ கூடத் தனது அறிவைப் பெறுகிறது.

எனவே, அறிவியலுக்குச் சவால் விடும் விஷயங்கள் எத்தனையோ உண்டு என்பதை அறிவியலாளர்களே ஒத்துக் கொள்கிறார்கள். அறிவியலால் இன்னமும் தீர்வு காணப்படாத எல்லாவற்றையும் மூடத்தனம் என்று ஒதுக்குவதும் ஒரு வகையான மூடத்தனம்தான.  மறை ஞானம் (mysticism) அல்லது ஆன்மிக அனுபவம் (spiritual experience) ஆகியவற்றை அறிவியல் ரீதியாகப் பரிசோதித்துப் பார்க்க வெளிநாடுகளில் ஆய்வுக்கூடங்கள் (Institutes of Psychical Research) இருக்கின்றன. துரதிருஷ்டவசமாக, நம் நாட்டில் அப்படிப்பட்ட ஆய்வுச்சாலைகள் இல்லை. எங்கே ஆன்ம ஞானம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தழைத்திருந்ததோ அங்கே அதைப் பற்றிய அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் இல்லை.

இந்த உலகில், எல்லாவற்றையும் கேள்வியே கேட்காமல் நம்புகிறவர்கள் ஒரு பக்கமும், எதையுமே நம்பாமல் கேலி பேசுபவர்கள் இன்னொரு பக்கமும் நிற்பதனால், தேடுபவர்களின் (seekers) எண்ணிக்கை குறைந்து போய்விட்டது. அப்படித் தேடுபவர்களைத் தேடுகின்ற, மற்றும் ஊக்குவிக்கின்ற பயணம்தான் இக்கட்டுரைத் தொடர்.

தேடுபவர்கள் அனைவரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால் அது சக பயணிகளுக்கு ஊக்கத்தைத் தரும் என்னும் வகையில், சிறிது நாட்களுக்குப் பிறகு, முடிந்தால் மீண்டும் நம் பயணத்தைத் தொடருவோம். அதுவரை, தேடியவற்றை அசைபோடுவோம். 
நன்றி.

- நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com