அறிவியலுக்கு அப்பால் 23: ஃபிலிப் பரிசோதனை 

2014-ஆம் ஆண்டு ஜான் போக் (John Pogue) என்னும் இயக்குநரால் இயக்கப்பட்டு லயன்ஸ் கேட் ஹேமர் (Lions gate Hammer)நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தி கொய்ட் ஒன்ஸ் (The Quiet Ones)
அறிவியலுக்கு அப்பால் 23: ஃபிலிப் பரிசோதனை 

2014-ம் ஆண்டு ஜான் போக் (John Pogue) என்னும் இயக்குநரால் இயக்கப்பட்டு லயன்ஸ் கேட் ஹேமர் (Lions gate Hammer)நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தி கொய்ட் ஒன்ஸ் (The Quiet Ones) என்னும் ஹாலிவுட் திரைப்படம் ஆவிகளைப் பற்றிய திகில் திரைப்பட வரிசைகளில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமாகக் கருதப்பட்டது. காரணம், அந்தத் திரைப்படம், 1972-ல் டொரன்டோ (Toronto) நகரில் உள்ள ஆவிகள் பற்றிய ஆய்வுச் சங்கத்தின் (Toronto Society of Psychical Research) உறுப்பினர்களால் உண்மையாகவே நடத்திக்காட்டப்பட்ட ஒரு பரிசோதனையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும். அந்தப் பரிசோதனைக்கு டொரன்டோ ஆய்வுக்குழு அளித்த பெயர் "ஃபிலிப் பரிசோதனை' (The Philip Experiment). ஒரு திரைப்படக் கதாசிரியர் குழு எப்படிக் கற்பனையான ஒரு கதையை வடிவமைக்குமோ அதைப் போலவே டொரன்டோ ஆய்வுக்குழுவும் கற்பனையாக ஒரு ஆவியை உருவாக்கி அதன்மூலம் அமானுஷ்யமான நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டமுடியுமா என்று செய்து பார்த்ததுதான் இச்சோதனையாகும். அப்பரிசோதனைக்கு அந்தக் குழு தேர்ந்தெடுத்துக் கொண்ட கதாபாத்திரம், 17-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் வார்விûக்ஷயரில் (Warwickshire) மிகப் பெரிய பிரபுக்களின் குடும்பங்களில் ஒன்றில் பிறந்த ஃபிலிப் (Philip) என்பவர்தான். டோரத்தி (Dorothea) என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட ஃபிலிப்பின் மணவாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியபோது, மார்கோ (Margo) என்னும் நாடோடிப் (Gypsy) பெண்ணைச் சந்தித்துக் காதல் கொள்கிறான் ஃபிலிப். ஆனால், சிறிது நாட்களில் ஃபிலிப்பிற்கும் மார்கோவிற்கும் உள்ள தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டதும், அந்த ஊர் பிரபுக்களால் சூன்யக்காரி என்றப் பட்டம் கட்டப்பட்டு எரித்துக் கொல்லப் படுகிறாள் மார்கோ. இதனால் மனமுடைந்துப் போன ஃபிலிப் தற்கொலை செய்து கொள்கிறான்.

17-ஆம் நூற்றாண்டில் நடந்ததாக நம்பப்பட்ட ஃபிலிப்பின் வாழ்க்கையை 1972-இல் (300ஆண்டுகளுக்குப் பின்) அணு அணுவாக ஆராய்ந்து பார்த்த டொரன்டோ குழு, ஃபிலிப்பின்ஆவியைக் கற்பனைக் கருவாகக் கொண்டு பரிசோதனைக் களத்தில், மேசை நாற்காலிகளை நகர வைப்பது, மேலெழும்ப வைப்பது, ஓசை எழும்ப வைப்பது போன்ற அமானுஷ்ய நிகழ்வுகளை (poltergeist phenomenon) ஆவிகளின் தயவு இல்லாமலேயே கூடச் செய்யலாம்   என்று நிருபிக்கும் முயற்சியில் இறங்கியது.

இந்தப் பரிசோதனைக் குழு உறுப்பினர்கள் ஒரு குடும்பத்தலைவி, ஒரு புத்தக விற்பனையாளர், ஒரு கணக்காளர், ஒரு சமூகவியல் மாணவர், ஒரு உளவியல் அறிஞர் மற்றும் ஒரு தொழிற் பொறியாளர் ஆவர். இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கியவர் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தடுப்பு மருந்து மற்றும் உயிரியற் புள்ளியியல் துறையின் (Department of Preventive Medicine and Biostatistics) உறுப்பினராகிய டாக்டர் ஏ.ஆர்.ஜி.ஓவன் (A.R.G.Owen). பரிசோதனையின் தொடக்க காலத்தில் இந்தக் குழுவின் நோக்கமும், செயல்பாடும் ஃபிலிப்பின் கதையைத் தொடர்ந்து விவாதிப்பதன் மூலம் ஓர் ஒட்டு மொத்தக் கூட்டுக் கற்பனை உருவகமாக (collective hallucination) ஓர் ஆவியை உருவாக்க முடியுமா என்பதுதான்.ஃபிலிப் பரிசோதனை தொடங்கப்பட்ட சில மாதங்களில் டொரன்டோ குழுவின் முயற்சிகள் கொஞ்சம் கூட பலனளிக்கவில்லை. ஃபிலிப்பின் ஆவியோ, வேறு யாருடைய ஆவிகளோ அல்லது டொரன்டோ குழுவினரின் மனோபலமோ இந்தப் பரிசோதனைக்கு எந்தப் பலனையும் நல்கவில்லை.

ஆரம்பக் கட்டத்தில் இந்தப் பரிசோதனையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றதும், இந்தக் குழுவின் தலைவர் அந்நாளில் புகழ்பெற்று விளங்கிய ஆங்கிலேய உளவியல் அறிஞராகிய கென்னத் ஜெ.பாச்சில்டார் (Kenneth) என்பவரைக் கலந்தாலோசித்து அவருடைய ஆலோசனையின் அடிப்படையில் தங்களது பரிசோதனை முறையில் சின்னஞ்சிறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். டொரன்டோ குழுவினர் கூடியிருக்கும் அறையில் உள்ள விளக்குகள் மங்கலாக்கப்பட்டு, 17-ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டு ஒரு வட்ட மேசையைச் சுற்றி அந்தக் குழுவினர் அமர்ந்து கொண்டு தங்களது அடுத்தகட்டப் பரிசோதனையை நடத்திய போது, திடீரென்று அந்த அறையில் காதைப் பிளக்கும் ஓசை கேட்டது. மேசையைத் தட்டும் ஓசையிலிருந்து கதவைத் தட்டும் ஓசை வரை பல்வேறு ஓசைகள் கேட்கத் தொடங்கியதும் அந்தக் குழுவினர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஓசையை எழுப்பியது எதுவோ அதனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஆவிகளோடு தொடர்புகொண்டு அவர்களோடு தகவல் பரிமாறிக் கொள்வதாகச் சொல்லும் பலரது கூற்று ஏமாற்றுவேலை என்பதையும், கற்பனையில் ஒரு ஆவியை உருவாக்கி, அந்த ஆவியின்மூலம் கூட சில அமானுஷ்ய நிகழ்வுகளை மனித யத்தனத்தால் நிகழ்த்திக் காட்டமுடியும் என்பதையும் நிரூபிப்பதுதான், டொரன்டோ குழுவின் முதல் நோக்கமாக இருந்தது. எனவே, ஒரு குழுவின் ஒட்டுமொத்தக் கூட்டு மனோசக்தியால் இப்படிப்பட்ட ஓசைகளை எந்த ஆவியின் தயவும் இல்லாமலேயே ஏற்படுத்த முடியும் என்பதை இந்தக் குழுவின் இரண்டாம் கட்டப் பரிசோதனை முடிவுகள் நிரூபித்துக் காட்டின.

ஆனால், இந்தப் பரிசோதனையின் மூன்றாம் கட்டத்தில் அறிவியல் உட்கூறுகளைத் தாண்டிய சில நிகழ்வுகள் ஏற்படத் தொடங்கின. ஒரு குழுவின் கூட்டு மனோசக்தியால் ஏற்படுத்த முடியாத அசைவுகள் மற்றும் ஓசைகள் அங்கே ஏற்படத் தொடங்கியபோது, பகுத்தறிவாளராகிய டாக்டர் ஓவன் குழம்பிப்போனார். ஒருவேளை தனது குழுவின் உறுப்பினர்களில் ஓரிருவர் அறிவியலுக்குப் புறம்பாக சில காரியங்களைச் செய்யத் தொடங்கி விட்டனரோ என்ற சந்தேகம் டாக்டர் ஓவனுக்கு ஏற்பட்டது. எனவே அவர், மேசையைச் சுற்றி அமர்ந்திருக்கும் குழு உறுப்பினர்களின் கைவிரல்கள் படக்கூடியஇடங்களில் மெல்லிய கைக்காகிதங்களை (paper doilies) வைத்தார். பிறகு, அந்த அறையின் பல முக்கியமான இடங்களில் கண்காணிப்புப் புகைப்படக்கருவிகளை நிறுவினார். இதற்குப் பின்னர், நடந்த நிகழ்வுகள் டொரன்டோ குழுவை அதிர்ச்சியில் உறைய வைத்தன.

திடீரென்று அறையின் விளக்குகள் மங்கலாகிப்போகும். குழு உறுப்பினர்கள் ஃபிலிப்பின் ஆவியைக் கேட்டுக் கொண்டதும், மறுபடியும் விளக்குகள் பிரகாசமாகும். திடீரென்று அறைக்குள் குளிர்ச்சியான காற்று வீசும். காற்றைக் கட்டுப்படுத்தக் கூடிய சக்தி உனக்கு இருக்கிறதா என்று அந்தக் குழு உறுப்பினர்கள் கேட்டதும், அறைக்குள் ஒரு சூறாவளி தோன்றும். ஒருநாள் திடீரென்று குழு உறுப்பினர்கள் அமர்ந்திருந்த மேசையின் மேல் ஒரு புகைப்படலம் உருவாகி அந்த மேசை அறைக்கதவை நோக்கி நகரத் தொடங்கியபோது, டொரன்டோ குழு உறுப்பினர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, "ஃபிலிப்: தி இமாஜினரி கோஸ்ட்' (Philip : The Imaginary Ghost என்னும் பெயரில் இந்தப் பரிசோதனையின் நிகழ்வுகள், ஒரு 16 மி.மீ. படமாகத் தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்த சி பி.எஸ். (C.B.S.) தொலைக்காட்சிநிறுவனம் "மேன் அலைவ்' (Man Alive) என்னும் பெயரில் ஓர் ஆவணப்படத்தைத் (documentary) தயாரித்தது. தொலைக்காட்சி நேயர்கள் 50 பேருக்கு முன்னால், மேசையின் மேல் விதவிதமான ஓசைகளை ஏற்படுத்தியும், அந்த அறைக்குள் விளக்குகளை ஏற்றியும் அணைத்தும் ஃபிலிப்பின் கற்பனை ஆவி ஆட்டம் போட்டபோது டாக்டர் ஓவன் குழுவினரால் அறிவியல் ரீதியாக எந்தவிதமான விளக்கத்தையும் அளிக்க முடியவில்லை. இறுதியில் டாக்டர் ஓவனும், மார்கரேட் ஸ்பேரோஸ்; (Margaret Sparrows) என்பவரும் 1976-இல் "கஞ்ஜுரிங் அப் ஃபிலிப்' (Conjuring Up Philip) என்னும் பெயரில் இந்தப் பரிசோதனை முடிவுகளை ஓர் ஆய்வு நூலாக வெளியிட்டனர். 

ஆக, பரிசோதனைச் சாலையில் கற்பனை ஆவிகளை உருவாக்கி அவற்றின் பெயரால் ஒரு சில மனிதர்களின் கூட்டு மனோசக்தியைக் கொண்டே அமானுஷ்ய நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்ட முடியும் என்னும் முயற்சியில் இறங்கிய டாக்டர் ஓவன் குழு, அறிவியலைத் தாண்டி நடந்த நிகழ்வுகளால் ஆடிப்போனதை என்னென்பது?

- நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com