கனவில் வந்த மகிஷாசுரமர்த்தினி!

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை ஆண்டு வந்த சோழ மன்னன் ஒருவன் போர் புரிவதில் பெருவிருப்பம் கொண்டவனாக இருந்தான்.
கனவில் வந்த மகிஷாசுரமர்த்தினி!

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை ஆண்டு வந்த சோழ மன்னன் ஒருவன் போர் புரிவதில் பெருவிருப்பம் கொண்டவனாக இருந்தான். அவனது போர்க்காலத்தில் ஒரு முறை தனது படை மற்றும் பரிவாரங்களுடன் கட்டுமாவடி வழியாக சேது சாலையை கடக்கும் நிலை ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் கட்டுமாவடி கடற்கரை அடர்ந்த காடுகள் நிறைந்ததாக காட்சியளித்தது. அதனால் காட்டுப்பகுதியில் இரவில் செல்லமுடியாத காரணத்தினால் அன்றிரவு மட்டும் அங்கேயே தங்கி விட்டு செல்லலாம் என மன்னன் எண்ணினான். 

அதைத் தொடர்ந்து மன்னனும் அவனது பரிவாரங்களும் அங்கேயே ஒரு குடில் அமைத்து தங்கினர். இரவு தங்கினாலும் மன்னனுக்கு மறுநாள் நடக்கப் போகும் யுத்தத்தை நினைத்து தூக்கமே வரவில்லை. யுத்தத்தில் தான் தோற்றுவிடுவோம் என்று மன்னன் எண்ணினான். இப்படியே கவலையோடு படுத்திருந்தவன் விடியற்காலையில் சற்று கண்ணயர்ந்தான். 

அப்போது  தோன்றிய அவனது கனவில், வானத்திலிருந்து கந்தவர்வனின் குடையுடன் துவாரபாலகர்களுடன் ஒரு பெண் கடவுள் (மகிஷாசுரமர்த்தினி) இறங்கி வரும் காட்சி தெரிந்தது. இதைப் பார்த்ததும் மன்னனின் கவலை மேலும் அதிகரித்தது. ஆனால் மகிஷாசுரமர்த்தினி, மன்னனைப் பார்த்து. "மகனே! பயப்படாமல் போருக்குச் செல் வெற்றி உனக்கே'' என்றார். இதனால் மன்னன் உற்சாகமடைந்தான். மறுநாள் போரில் மகத்தான வெற்றி பெற்றான். வெற்றி பெற்றவுடன் அடுத்த வாரத்திலேயே இங்கு மகிஷாசுரமர்த்தினிக்கு ஒரு கோயிலை கட்டினான். 

பிறகு சில ஆண்டுகளில் அக்கோயிலை விட்டு தஞ்சை மண்ணுக்கு படைவீரர்களுடன் புறப்பட்டான். அதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் கணிசமான அளவில் அந்தணர் குடும்பங்கள் வசித்து வந்தனர். இக்கோயில் பலருக்கு குல தெய்வமாகவும் உள்ளது. ஆனால் பல்வேறு காலகட்டத்தில் அவர்கள் தொழில் நிமித்தம் குடிபெயர்ந்து விட்டனர். இவ்வாறு குடி பெயர்ந்தவர்கள் தங்கள் மூதாதையர் சொல்லக் கேள்வி பட்டு இந்தக் கோயிலில் எழுந்தருளிய மகிஷாசுரமர்த்தினியே தங்கள் குலதெய்வம் என அறிந்து விசாரித்து வந்து தற்போது குடும்பத்துடன் வணங்கிச் செல்கின்றனர். இக்கோயிலில் எழுந்தருளியுள்ள  அன்னை மகிஷாசுரனின் தலையில் கால் வைத்தபடி ஆக்ரோஷமாக எழுந்து நின்றவாறு துவாரபாலகர்களுடன் கந்தர்வரின் குடையின் கீழ் காட்சியளிக்கிறார். ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்த ஆக்ரோஷமான காட்சியின் ஒரு புறம் விநாயகரும் மறுபுறம் நாகநாதரும் உள்ளனர். 

வழக்கமாக எல்லா கோயில்களிலும் முதல் பூஜை விநாயகருக்குத்தான். ஆனால் இந்தக் கோயிலில் முதலில் ஆக்ரோஷ அம்பாளை பூஜை செய்து சாந்தப்படுத்தி விட்டுத்தான் விநாயகருக்கு பூஜை செய்கிறார்கள். இந்த கோயிலில் விநாயகர் வந்ததே தனிக்கதையாகும். இங்கு எழுந்தருளிய மகிஷாசுரமர்த்தினி இரவு நேரத்தில் சாதாரண பெண் உருவத்தில் கடற்கரையில் உலாவி வருவாள் என்றும் இந்தச் சமயத்தில் அதைப் பார்க்கும் மனிதர்கள் நோய் வாய்ப்படுவார்கள் என்றும் இக்கிராமத்தில் ஓர் அச்சமூட்டும் நம்பிக்கை இருந்து வந்தது. 

எனவே சமய வல்லுநர்களின் ஆலோசனைப்படி மகிஷாசுரமர்த்தினியை சாந்தப்படுத்த கோயிலுக்கு முன்பாக விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். அம்மனுக்கு பூஜை நடத்திய பிறகே விநாயகருக்கு பூஜை நடத்தும் சம்பிரதாயமும் உருவானது. இதனால் மகிஷாசுரமர்த்தினி தன் உக்கிரத்தை குறைத்துக் கொண்டு சாந்தமானதாக புராண வரலாறு கூறுகிறது. வழக்கமாக எல்லா அம்மன் கோயில்களில் இருக்கும் பலிபீடம் இந்தக் கோயிலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாவல் மரமே இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சமாகும். 

இந்த அம்மனை ராகு தோஷம் உள்ளவர்களும், திருமணம் தள்ளிப் போகும் நிலை உள்ளவர்களும் தொடர்ச்சியாக ஏழு வெள்ளிக்கிழமைகளில் வழிபட அவர்களது தோஷம் நீங்கும்; நல்லது நடக்கும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகும். 

வழித்தடம்:  பட்டுக்கோட்டை- மீமிசல் பேருந்தில் ஏறி கட்டுமாவடியில் இறங்கி சற்று தூரம் நடந்து சென்றால் அழகன்வயல் என்னுமிடத்தில் இக்கோயில் உள்ளது. அறந்தாங்கியில் இருந்தும் கட்டுமாவடிக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.   
தொடர்புக்கு-94437 43530. 
- பொ.ஜெயச்சந்திரன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com