கோடி மடங்கு புண்ணியம் தரும் புண்ணியகோடீஸ்வரர்

நமது துக்கங்களுக்கு முடிவு என்று ஏற்படும்? சம்சார சாகரத்தில் உழன்று கொண்டிருக்கும் நாம் என்று விடிவு காண்போம்? முக்திக்கு வாயில் எது இவைபோன்ற அனைத்து கேள்விகளுக்கும்
கோடி மடங்கு புண்ணியம் தரும் புண்ணியகோடீஸ்வரர்

நமது துக்கங்களுக்கு முடிவு என்று ஏற்படும்? சம்சார சாகரத்தில் உழன்று கொண்டிருக்கும் நாம் என்று விடிவு காண்போம்? முக்திக்கு வாயில் எது இவைபோன்ற அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும் திருத்தலமாக விளங்குவது விடைவாயில் என்பதனை அறுதியிட்டுக்கூறியுள்ளார் ஞானசம்பந்தர் தனது தேவாரப் பாசுரத்தில். திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் உள்ள இத்தலத்தைப்பற்றி (93 திருவிடைவாசல் கிராமம்) மேலும் தெரிந்துகொள்வோம்.

தலச்சிறப்பு: இது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட திருமுறைத்தலம்! மேடு ஒன்றினை வெட்டியெடுக்கும் போது உள்ளே கோயில் ஒன்று குடி கொண்டிருப்பது அறியப்பட்டது. 

மேலும் தோண்டிப் பார்க்கையில், கோயிலுக்குள் அத்தலத்தைப் பற்றி ஞானசம்பந்தப்பெருமானின் தேவாரப் பதிகம் கல்வெட்டில் பொறித்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டு 1917 ஆம் ஆண்டு உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டு தற்போது 275 ஆவது தேவாரத் திருத்தலமாக திகழ்கின்றது. அவர் தனது பாடல்களின் இறுதியில் "விடைவாயே' என குறிப்பிட்டு முடித்திருப்பதிலிருந்து இதன் பழமையை அறிந்து கொள்ளலாம். 

மேலும் இத்தலத்தைப்பற்றி ஐயடிகள் காடவர்கோன் தம்முடைய சேத்திரக்கோவையில் "தென் இடைவாய்' என்று குறிப்பிட்டுள்ளார். உமையொருபாகனின் திருப்பாதங்களை நாம் அடையும் வாயிலாக இத்திருத்தலம் விளங்குவதால் விடைவாயில் என அழைக்கப்படுகின்றது. 

காவிரியின் துணை நதிகளான வெண்ணாறு, பாண்டவையாறு (பஞ்ச பாண்டவர்களின் தாகம் தீர்க்க குந்திதேவியாரால் உருவாக்கப்பட்டது), வெள்ளையாறு என மூன்று நதிகளுக்கு நடுவே இத்தலம் அமைந்திருப்பதாலும், சிவனின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் விடை எனப்படுகிற ரிஷபம் இத்தலத்தில் விசேஷமாக விளங்குவதாலும், திருவிடையன் என்ற சூரிய குலத்து அரசன், கோயில் கட்டி வழிபட்டத் தலமானதாலும் திருவிடைவாசல் என்ற பெயர் வரக்காரணமாக இருந்ததாக பலவித கருத்துக்கள் நிலவுகின்றன. இத்தலத்தில் சாஸ்தா குழந்தை வடிவில் பாலசாஸ்தாவாக அருளுகிறார்.

வழிபாட்டு பலன்கள்: இத்தலத்தின் இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். திருவிடைவாயப்பர், இடைவாய்நாதர், புண்ணியகோடீஸ்வரர் என்று பல திருநாமங்களை உடையவர். தன்னை தரிசிப்பவருக்கு கோடி புண்ணியத்தை அருளுபவர். அம்பிகை அபிராமி உமையாள் என்ற திருநாமத்துடன் விளங்குகின்றாள்.
காஞ்சி மகா சுவாமிகள் இத்தல இறைவனை அனைவரும் தரிசிக்க வேண்டும் என்று வற்புறுத்தியத் திருத்தலம். திருமணத்தில் தடை உள்ளவர்கள், மழலைப்பேறு வேண்டுபவர்கள் அது நிறைவேற இவ்வாலய பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுகிறார்கள். தல விருட்சமாக மகிழ மரமும், கஸ்தூரி அரளியும் உள்ளது. இத்தலத்து புண்ணிய கோடிதீர்த்தம் புறத்தூய்மையுடன், அகத்தூய்மையையும் அளிக்கின்றது. சப்தநதிகளும் இறைவனை வழிபட வந்ததற்கு சாட்சியாக இன்றும் ஏழு கிணற்றுடன் காட்சியளிக்கும் அற்புதத்தலம்.

திருப்பணி: சிறப்புகள் பல வாய்ந்த இத்திருத்தலத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ புண்ணியகோடிநாதர் திருக்கோயில் திருப்பணிக்குழு என்ற அமைப்பின் மூலம் திருப்பணிவேலைகள் நடைபெற்றுவருகின்றன. டிசம்பர் 2016 இல் மஹாகும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. சிவநேயச் செல்வர்கள் இந்த சிவபுண்ணிய கைங்கர்யத்தில் ஈடுபட்டு நலம் பெறலாம்.

இத்திருத்தலம் செல்ல தஞ்சாவூர்- நாகப்பட்டிணம் தேசிய நெடுஞ்சாலையில் கொரடாச்சேரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும். 
தகவல்களுக்கு: 98400 53289, 94433 32853.
- எஸ். வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com