அரனுக்கே அன்னமிட்ட அம்பிகை!

கணக்கற்ற கோயில்களைக் கொண்ட காசிமாநகரத்தில் விஸ்வநாதர் கோயில் அமைந்திருக்கும்....
அரனுக்கே அன்னமிட்ட அம்பிகை!

கணக்கற்ற கோயில்களைக் கொண்ட காசிமாநகரத்தில் விஸ்வநாதர் கோயில் அமைந்திருக்கும் அதே வீதியின் முனையில்தான் அன்னபூரணி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு கொலுவீற்றிருக்கும் அன்னை ஆண்டவனுக்கே படியளித்தவள் என்று போற்றப்படுகின்றாள்.

கருவறையில் இரண்டு அடி உயரத்தில் கருங்கற்சிலையில் நின்ற கோலத்தில் இடதுகையில் அன்னப்பாயச பாத்திரம் கொண்டும். வலதுகையில் வாரிவழங்குவதற்கு கரண்டியும் ஏந்தி அம்பிகை அருளும் கோலத்தைக் காண கண்கோடி வேண்டும்.

அம்பிகையின் பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் உள்ளது. ஆனால் தீபாவளிப் பண்டிகை நாள்களில் மட்டுமே அன்னையின் முழுதிருவுருத்தை இனிப்பு பட்சண வகை படையல்கள் சூழலுடன் தரிசிக்கலாம். மற்ற நாள்களில் ஸ்வர்ண கவசம் அணிவிக்கப்பட்டு திருமுக தரிசனம் மட்டுமே கிடைக்கும். பிறபகுதிகள் புடவையால் அலங்கரிக்கப்பட்டு மறைக்கப்பட்டிருக்கும். காசீபுராதீஸ்வரி என்று இந்த அம்பிகையை தனது அன்னபூர்ணா அஷ்டக ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரர் துதித்து பலவாறு போற்றியிருப்பார்.

இவ்வாலயத்தில் முதல் தளத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது முழுவதும் தங்கத்தினால் ஆன சற்றுப்பெரிய அளவிலாளான அன்னபூர்ணி அம்பிகை திருமேனி. இந்த அம்பிகையையும் தீபாவளி சமயத்தில் தரிசிக்க முடியும். தீபாவளிக்கு முதல்நாள் நரகசதுர்த்தசியில் கீழே ஆலய மண்டபத்திலும், தீபாவளியன்று லட்டுத்தேர் பவனியில் காசிநகர வீதியிலும், மறுநாள் ஆலயத்திலும் தரிசிக்கலாம்.

தங்கக் குடையின் கீழ் சொர்ணப் பட்டுப்புடவை அணிந்து பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி வீற்றிருக்க, எதிரில் பரமேஸ்வரன் வெள்ளி விக்கிரகமாக பிட்சாடனர் கோலத்தில் கையில் கபாலம் ஏந்தி காட்சி தரும் இந்த தங்கத் திருமேனியைக்காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். "நித்தியான்ன தானேஸ்வரி' என்று ஆதி சங்கரர் கூறியவண்ணம். பக்தர்கள் தங்கள் காணிக்கையாக அம்மன் பாதத்தில் சமர்ப்பிக்கும் பணநோட்டுகள் மலையாகக் குவியும்.

ஈ, எறும்பிலிருந்து அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்றாடம் உணவு அளிக்கும் காசி அன்னபூரணியை தீபாவளித் திருநாளன்றோ அல்லது வாய்ப்பு கிடைக்கும் சமயத்திலாவது சென்று தரிசனம் செய்தால் நமது இடர்கள் தீரும், இன்னல்கள் விலகும், அல்லல்கள் அகலும், பஞ்சம் பறந்தோடும், வாழ்வு வளம் பெறும்.

- எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com