இறந்தோரை மறவாதே

மனிதன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவை இழப்பானெனில்....
இறந்தோரை மறவாதே

மனிதன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவை இழப்பானெனில் அவனுக்கு வரும் பயனென்ன?' என்று இயேசு சொன்னார். மத்தேயு 16:26) இவ்வுலகில் நாம் வாழ்க்கையில் தர்ம காரியங்களாலும் நற்செயல்களாலும் புண்ணிய பேற்றினை சம்பாதித்து மறுவுலகில் இறைவனோடு என்றென்றும் வாழும் தகுதியினைப் பெறவேண்டும்.

உடலானது மண்ணோடு மண்ணாக மக்கிப் போயினும் அழியாத ஆன்மா இறவனோடு ஒன்றிக்கும் இயல்பை உடையது. ஆண்டவரின் இல்லத்தில் மகிழ்வோடு வாழும் பேறு பெற்ற இந்த ஆன்மாக்களிடம் நாம் இறைஞ்சும்போது, நம் வேண்டுதல்களை இறைவன் கண்டிப்பாக கருணையோடு கண்ணோக்குவார். இந்த நம்பிக்கையினால்தான், இறந்தோரை அடக்கம் செய்யும் கல்லறையை, தோட்டத்தைப் பராமரிப்பதுபோல் கிறிஸ்துவர்கள் பராமரித்து வருகிறார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2 ஆம் தேதி கல்லறைத் திருநாள் என அழைத்து, நம்மை விட்டுப் பிரிந்து போன இறந்தோரை நினைவு கூர்கின்றனர். இறந்துபட்ட உறவினர்களையும் நண்பர்களையும் நினைவில் இருத்தி, அவர்களின் கல்லறையை சுத்தம் செய்து, மெழுகுவர்த்தி பொருத்தி, பக்தியோடு வேண்டுதல் செய்யும் காட்சியானது உருக்கம் நிறைந்ததாக இருக்கும். ஒவ்வொரு கல்லறையின் தலைமாட்டிலும் காணப்படும் சிலுவைக் கல் மீது இறந்தோரின் பெயர், பிறந்த தேதி, இறந்த தினம், பொருத்தமான பைபிள் வசனம் ஆகியன காணப்படும். கல்லறைத் திருநாள் அன்று மட்டுமல்லாமல் உற்றார் உறவினரின் இறந்த தினத்தன்றும் முக்கியமாக வீட்டில் கொண்டாடப்படும் விசேஷ தினங்களன்றும் பக்தியுள்ள கிறிஸ்துவர்கள் கல்லறைக்குச் சென்று பிரார்த்தனை செய்வர்.

தறிகெட்டு ஓடும் எண்ணங்களை ஒரு கட்டுக்குள் நிலை நிறுத்தி, தேவையற்ற ஆசைகளுக்கு ஒரு கடிவாளம் இட்டு, விண்ணுலகை நோக்கிய பாதையில் நம்மைச் செலுத்துவதற்கு மறுவுலக வாழ்வைப் பற்றிய நினைவுகள் உதவுகின்றன. எனவே, நேரிய வாழ்க்கை வாழுவோம்; அழியாத ஆன்மாவைக் காப்போம்; விண்ணுலக வாழ்வில் இறைவனோடு ஒன்றிப்போம்.

- பிலோமினா சத்தியநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com