உடலைச் சுற்றி ஒளிவட்டம்- கிர்யன் நிழற்படம்

ஒருயிர் ஈருடல்' என்னும் வசனத்தைக் காதலர்களும் நண்பர்களும் பேசக் கேட்கிறோம் நாம்.
உடலைச் சுற்றி ஒளிவட்டம்- கிர்யன் நிழற்படம்

ஒருயிர் ஈருடல்' என்னும் வசனத்தைக் காதலர்களும் நண்பர்களும் பேசக் கேட்கிறோம் நாம். ஆனால், மனித உடல் என்பது ஓருடல் அல்ல, அது மூன்று உடல்களால் ஆனது என்று சாத்திரங்கள் கூறுகின்றன. அந்த உடல்களுக்குச் சாத்திரங்கள் கொடுக்கும் பெயர் (1) ஸ்தூல சரீரம் (2) சூக்ஷ்ம சரீரம் மற்றும் (3) காரண சரீரம் என்பவையாகும். நிலம், நீர், தீ, காற்று மற்றும் வெளி (ஆகாயம்) ஆகிய ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவாக்கப்பட்டு, பிறத்தல், இருத்தல், வளர்தல், முதிர்தல், அழுகுதல் மற்றும் இறத்தல் ஆகிய மாற்றங்களுக்கு உட்படும் சரீரம், ஸ்தூல சரீரமாகும். அன்னமய கோசமும், பிராணமய கோசத்தின் ஒரு பகுதியும், ஸ்தூல சரீரத்திற்குள் உறைவதால் திட உணவு, நீர் மற்றும் பிராணவாயு ஆகிய மூன்றும் ஸ்தூல சரீரத்திற்குத் தேவைப்படுகிறது.

ஸ்தூல சாரீத்தைத் தாண்டி, மனம் மற்றும் புத்தி இவற்றின் உறைவிடம் சூக்ஷ்ம சரீரமாகும். எனவே, இதில்தான் பிராணமய கோசத்தின் ஒரு பகுதியும், மனோமய கோசமும், ஞானமய கோசமும் உறைவதாகச் சொல்லப் படுகின்றது. இந்த சூக்ஷ்ம சரீரம், ஸ்தூல சரீரத்தைச் சுற்றி ஓர் ஒளி வட்டத்தின் (aura) வடிவில் சக்தியாகப் பரிணமிக்கின்றது.(உடலைச் சுற்றியுள்ள Aura என்பது வேறு: தலையைச் சுற்றியுள்ள halo என்பது வேறு) ஒரு மனிதன் இறந்தபின், அவனுடைய உடல் எரியூட்டப் பட்டால், அப்போது ஸ்தூல சரீரத்திலிருந்து ஆன்மா வெளியே போவதற்கான வாகனமாகக் கட்டை விரல் அளவில் (அங்குஷ்ட மாத்ரா) இந்தச் சூக்ஷ்ம சரீரம் பயன்படுகிறது. ஸ்தூல சரீரத்திலிருந்து வெளியேறும் ஆன்மா, சூக்ஷ்ம சரீரத்தின் மேலேறிச் சிறிது காலம் தன் உடல் வீழ்ந்த இடத்தைச் சுற்றி அலைவதாகவும், அந்தச் சூக்ஷ்ம சரீரத்தையும் கரைத்து ஆனந்தமய கோசம் வாழும் காரண சரீரமாக அதை மாற்றுவதற்கான முயற்சியே இறுதிச் சடங்குகள் என்றும் சாத்திரங்கள் கூறுகின்றன.

ஸ்தூல சரீரத்தைச் சுற்றிச் சூக்ஷ்ம சரீரம் என்று ஓர் ஒளி வட்டம் உண்டா? மனித உடல்களைச் சுற்றி ஒளி வட்டங்கள் உண்டா? போன்ற கேள்விகள் அர்த்தமற்றவை என்று கருதப்பட்ட காலம் உண்டு. ஆனால், 1939-ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டில் மின்பொறியாளராக (Electrical Engineer) வாழ்ந்த செம்யோன் கிர்லியன் (Semyon Kirlian) என்பவரும், அவரது மனைவி வேலன்டினாவும் (Valentina) கிராஸ்னோடர் (Krasnodar) மருத்துவமனையில் ஒரு நோயாளியைப் பார்க்கச் சென்றபோது, திடீரென்று ஒரு புதுக் கண்டுபிடிப்பைச் செய்தார்கள். அந்த நோயாளியின் அருகில் மின்முனைகள்  (Krasnodar) கொண்டு வரப்பட்டபோது அந்த நோயாளிக்கும் மின்முனைக்கும் இடையில் ஓர் ஒளி உண்டாவதைக் கண்டு பிடித்தனர். உடனே தொடர்ந்து பரிசோதனையில் இறங்கிய கிர்லியன் தம்பதியினர், மின் கடத்தும் தட்டின் (Conducting Plate) மேல் ஒரு நிழற்படச் சுருளை (photographic film) வைத்துவிட்டு இன்னொரு மின் கடத்தியின்மேல் ஒரு மனிதனின் கையையோ ஓர் இலையையோ வைத்துவிட்டு அந்தக் கடத்திகளின்மேல் மின்சாரத்தைச் செலுத்தினால், அந்த நிழற்படச் சுருளில் பதியப்படும் கை அல்லது இலையின் வடிவத்தைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் தோன்றியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

1970-ஆம் ஆண்டு இந்தக் கிர்லியன் தம்பதியினரின் கண்டுபிடிப்புக்களைப் பற்றி "சைகிக் டிஸ்கவரீஸ் பிஹைண்ட் தி அயான் கர்டெய்ன்' (Psychic Discoveries Behind the Iron Curtain) என்னும் பெயரில் ஒரு நூலை லின் ஷ்ரோடர் (Lynn Schroeder) மற்றும் ஷீலா ஓஸ்ட்ரேண்டர் Shiela Ostrander) என்னும் இரு அமெரிக்க எழுத்தாளர்கள் எழுதி வெளியிட்டனர். அதன் பின்னர்தான், ஒவ்வொரு மனித உடலைச் சுற்றியும், தாவரங்களைச் சுற்றியும் கூட ஓர் ஒளிவட்டம் உண்டு என்பதை இந்த உலகம் ஒப்புக்கொண்டது.

உடலைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்தைப் பற்றி அமெரிக்க விஞ்ஞானியாகிய திரு.நிகோலா டெஸ்லா (Nichola Tesla) என்பவரும், ஆங்கிலேய ஆராய்ச்சியாளராகிய திரு.ஜார்ஜ் டி லா வார் (George de la Warr) என்பவரும் ஏற்கெனவே ஆராய்ச்சிகளைச் செய்திருந்தாலும், உயர் மின்னழுத்த நிழற்படத்தின் (ஏண்ஞ்ட் யர்ப்ற்ஹஞ்ங் டட்ர்ற்ர்ஞ்ழ்ஹல்ட்ஹ்) மூலம் இந்த ஒளிவட்டத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது கிர்லியன்தான். கிர்லியன் தம்பதியினரின் கருத்துப்படி, ஓர் உடலில் நோயின் தாக்கம் வெளிப்படையாகத் தெரிவதற்கு முன்னரே உடலைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்தில் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கி விடுகின்றன. இந்தக் கண்டுபிடிப்பு கிர்லியன் தம்பதியினருக்கு தற்செயலாக நேர்ந்த ஒன்றாகும். ஒரு நாள் தன்னுடையக் கண்டுபிடிப்பைப் பற்றி ஒரு முக்கிய விருந்தினருக்குச் செயல்முறை விளக்கமளிக்க விரும்பிய கிர்லியனுக்கு பெரும் ஏமாற்றமும் தோல்வியும் ஏற்பட்டது. ஆனால், அவருடைய மனைவியால் அதே உபகரணங்களைக் கொண்டு பரிசோதனை நடத்தப்பட்டபோது அப்பரிசோதனை சரியான முடிவுகளைக் கொடுத்தது. இப்பரிசோதனைக்கு அடுத்த நாள் குளிர் ஜுரத்தால் (ஐய்ச்ப்ன்ங்ய்க்ஷ்ஹ) கிர்லியன் தாக்கப்பட்டபோதுதான், நோய்க் கிருமிகள் ஓர் உடலைத் தாக்குவதனால் ஏற்படும் விளைவுகளை ஒருவர் நேரடியாக உணர்வதற்கு முன்னரே அவரது உடலைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு விடுகின்றன என்பதைக் கிர்லியன்
கண்டுபிடித்தார்.

தங்களது பரிசோதனைகளைத் தாவரங்களின் இலைகளின்மேல் கிர்லியன் தம்பதியினர் செய்து பார்த்தபோது, பசுமையான இலையைச் சுற்றி ஏற்பட்ட ஒளிவட்டத்திற்கும், செடியிலிருந்து 2, 3 நாட்கள் முன்னதாகப் பறிக்கப்பட்டு வாடிப்போன அல்லது நோயுற்ற இலைகளைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்திற்கும் வேறுபாடு இருப்பதாகக் கிர்லியன் கண்டுபிடித்தார். ஆனால், லண்டன் நகரில் உள்ள சிட்டி பல்கலைக் கழகத்தில் மின்னணு மற்றும் மின்பொறியியல் துறையில் பேராசிரியராக இருக்கும்

திரு.ஆர்தர் ஜெ. எல்லிசன் (Arthur J. Ellison) என்பவர், மனித உடல் ஒரு மின்வேதியியல் இயந்திரம் (Electrochemical Machine) என்றும், அந்த உடலைச் சுற்றி காந்தச் சக்தியும், மின்சக்தியும் உள்ள ஒரு படலம் அமைந்திருப்பதாகவும், இதை நோக்கித்தான் கிர்லியன் நிழற்படத்திற்கான ஆய்வு கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும் சொன்னார்.

இன்னும் சில ஆராய்ச்சியாளர்களோ ஈரப்பசையின் காரணமாக இந்த ஒளிப்படலம் தோன்றுகின்றது என்றும், உடலிலிருந்து வெளிப்படும் வியர்வை, நுண்ணுயிர்க் கிருமி (பாக்டீரியா) போன்றவற்றின் தாக்கம்தான் நிழற்படத்தில் தோற்றுவிக்கப்படும் ஒளிவட்டம் போன்ற ஒரு அமைப்பிற்குக் காரணம் என்றும் முடிவிற்கு வந்தனர்.

கிர்லியன் தம்பதியினரின் கண்டுபிடிப்பை ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் (St.Petersburg) உள்தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கும் திரு.கான்ஸ்டான்டின் கொரட்கோவ் (Konstantin Korotkov) அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றார். அவர் உருவாக்கிய கேஸ் டிஸ்சார்ஜ் விஷுவலைசேஷன் டெக்னிக் (Gas Discharge Visualisation Technique) என்னும் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு நுண்ணிய புகைப்படக் கருவியால் ஒரு மனிதனைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் சக்தி மையத்தைப் (ங்ய்ங்ழ்ஞ்ஹ் ச்ண்ங்ப்க்) படம் பிடிக்க முடியும் என்றும், அந்தப் படத்தில் வெளிப்படும் சக்தி மையத்தின் தன்மை, அடர்த்தி, நிறம் இவற்றைக் கொண்டு ஒரு மனிதனின் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் ஆன்ம வெளிப்பாட்டைக் கண்டுபிடிக்க முடியும் என்றும் கொரட்கோவ் எழுதினார்.

இவற்றையும் தாண்டி, ஓர் உயிர் கணிப்புப் பதிவு மின்மானி நிழற்படக் கருவியின் (bioelectrographic camera) மூலம் ஒரு மனிதன் இறக்கும் தருவாயில் அவனது உடலை விட்டு ஆன்மா வெளியேறுவதைப் படம் பிடிக்க முடியும் என்று அறுதியிட்டுக் கூறி, அத்தருணத்தைப் புகைப்படம் எடுத்துக் காட்டியபோது (அல்லது அப்படிச் சொன்னபோது) அறிவியல் உலகின் பரிகசிப்பிற்கும், ஆன்மிக உலகின் ஏகோபித்த ஆதரவிற்கும் உள்ளானார் கொரட்கோவ்.

எது எப்படியாயினும், குறைந்தபட்சம் மனித உடலைச் சுற்றி ஒரு சக்தி மையம் இருப்பதும், அவற்றினால் ஒளி ஏற்படுவதும், அந்த ஒளியின் நிறமும், அடர்த்தியும் அந்த மனிதனின் மனோ நிலை, குணாதிசயங்கள் இவற்றைப் பொருத்து அமையும் என்பதும் ஒரு சில அறிவியலாளர்களால் இன்று ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. அப்படியானால், ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரங்களும், பஞ்ச கோசங்களும் உண்மைதானா? அதை நம் முன்னோர்கள் எந்தக் கிர்லியன் நிழற்படமும் இல்லாமலேயே எப்படிக் கண்டுபிடித்தனர் என்ற கேள்விகளுக்கு அறிவியலாளர்கள்தான் விடை கூற வேண்டும்.

- நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com