காசிக்கு சமமான திருத்தலங்கள்!

காசிக்கு சமமான திருத்தலஙகள் தமிழகத்தில் உள்ளன. அவை: மயிலாடுதுறை..
காசிக்கு சமமான திருத்தலங்கள்!

காசிக்கு சமமான திருத்தலஙகள் தமிழகத்தில் உள்ளன. அவை: மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவெண்காடு, திருவையாறு, ஸ்ரீ வாஞ்சியம். இந்த ஐந்து தலங்களையும் "பஞ்சகாசி' என்று போற்றுவர்.

தீபாவளித் திருநாளில் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடினாலும் அங்கு ஓடும் காவேரி நதியில் நீராடினாலும் "காசியில் ஓடும் கங்கையில் நீராடிய பலன் கிட்டும்' என்று சாஸ்திரம் கூறுகிறது.

மேலும், திருச்சி சமயபுரம் கோயிலுக்கு அருகில் "உஜ்ஜயினி ஓம் காளி அம்மன்' திருக்கோயிலில் உள்ள சக்தி தீர்த்தத்தில் நீராடினால் கங்கையில் குளித்த பலன் கிட்டுவதுடன் உடல் நலமும் சீராகும்.

திருமலை திருப்பதியில் உள்ள "ஆகாச கங்கை' என்னும் தீர்த்தத்தில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். திருமலை கோயிலுக்கு அருகில் உள்ள குமார தீர்த்தத்தில் மாசி மாத பௌர்ணமி அன்று நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.

திருக்கடையூரில் "திருக்கடவூர் மயானம்' திருத்தலத்தின் தீர்த்தமான காசி தீர்த்தத்தில் பங்குனி மாதம் சுக்லபட்சம் அசுவினி நட்சத்திரத்தில் நீராடினால் கங்கையில் குளித்த பலன் உண்டு.

மகாவிஷ்ணு திரிவிக்கிரம அவதாரம் எடுத்தபோது, தந்தையின் திருப்பாதத்திற்கு பிரம்ம தேவன், பாதபூஜை செய்தார். அந்தத் தீர்த்தம் பூமியில் திருமாலிருஞ்சோலை மலையில் விழுந்து "நூபுர கங்கை'யாகப் பெருகியது என்று புராணம் கூறுகிறது. இந்த நூபுர கங்கைத் தீர்த்தத்தில் நீராடினாலும் கங்கையில் நீராடிய முழுப் பலனைப் பெறலாம்.

மயிலாடுதுறை காவேரி நதிக்கரையோரம் உள்ள விஷ்ணு கட்டத்தில் துலா மாதத்தின் (ஐப்பசி) கடைசி நாளும் கார்த்திகை முதல் நாளும் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும்.

"காசிக்கு வீசம்' என்று புகழப்பட்ட ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் உள்ள "குப்த கங்கை' என்னும் தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு அன்று காலை ஐந்து மணி முதல் ஆறு மணிக்குள் நீராட கங்கை நதியில் குளித்த புண்ணியம் கிட்டும்.

தீபாவளி அன்று அதிகாலையில் பாரதத்தில் உள்ள எந்த நீரில் குளித்தாலும் கங்கை நதியில் நீராடிய பலன் கிடைக்கும். கங்கையானவள் அன்று விடியற்காலை எல்லா நீரிலும் எழுந்தருள்வதாக புராணம் கூறுகிறது.

- டி.ஆர். பரிமளரங்கன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com