அறிவியலுக்கு அப்பால் 18: கருவிலே திருவுடையார்

மேதாவித் தனம் (genius) என்பது 99 சதவிகிதம் வியர்வை சிந்திய உழைப்பும் (perspiration) 1 சதவிகிதம்
அறிவியலுக்கு அப்பால் 18: கருவிலே திருவுடையார்

மேதாவித் தனம் (genius) என்பது 99 சதவிகிதம் வியர்வை சிந்திய உழைப்பும் (perspiration) 1 சதவிகிதம் அருட்கிளர்ச்சியும் (inspiration) ஆகும் என்றார் தாமஸ் ஆல்வா எடிசன். ஆனால், பிறவியிலேயே அதி மேதாவிகளாகத் (prodigy) திகழ்ந்த பலரை வரலாறு நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறது.

 சீர்காழியில் பிறந்து, தனது 3-ஆவது வயதில் உண்ணாமுலை அம்மையின் பாலை அருந்தி, ""யாரளித்த பாலடிசில் உண்டது நீ'' என்று தனது தந்தையான சிவபாத இருதயரால் கேட்கப்பட்ட போது, ""தோடுடைய செவியன்'' என்று பாட்டிலே பதில் சொன்ன ஞானசம்பந்தப் பெருமான், இறை நம்பிக்கையாளர்களால், கருவிலே திருவுடையார்களில் முதன்மையாகப் போற்றப்படுகிறார்.

 இவ்வுலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில் பிறவி அதி மேதாவிகள் (child prodigies) பலர் தோன்றியிருக்கின்றனர். அப்படிப்பட்ட பிறவி அதிமேதாவிகளின் அபரிமிதமான மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றலுக்கான காரணம் இன்னமும் புலப்படவில்லை.

 ஆஸ்திரியாவில் (Austria) ஸால்ஸ்பெர்க் (Salzberg) நகரத்தில் 1756-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ஆம் நாள் தனது பெற்றோருக்கு 7-ஆவது குழந்தையாகப் பிறந்து, ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனையோ அற்புதங்களைச் செய்து காட்டித் தனது 36-ஆவது வயதில் அகால மரணமடைந்த மோஸார்ட் (Mozart) இசையுலகில் காலத்தை வென்ற பிறவி மேதாவியாகக் கருதப்படுகிறார்.

 தனது 3-ஆவது வயதில் வயலின், 4-ஆவது வயதில் பியானோவுக்கு முன்னோடியாக இருந்த ஓர் இசைப்பலகை இவற்றை வாசிக்கும் திறமை பெற்ற மோஸôர்ட், தன்னுடைய 5-ஆவது வயதில் இசையமைக்கத் தொடங்கி, 6-ஆவது வயதில் வியன்னா அரசியின் ஆட்சிமன்றத்தில் ஒரு கச்சேரியை நடத்திக் காட்டினார்.

 22 இசை நாடகங்கள் (operas), 40 இயைவுகொள் பல்லியங்கள் (Symphonies), பல தனி ஆவர்த்தன மெட்டுக்கள் (concertos), மற்றும் சில முடிக்கப்படாத இரங்கற்பாற்கள் (requiems) உட்பட 600-இக்கும் மேற்பட்ட அவரது படைப்புகளில் பல, இன்னமும் காலத்தை வென்று நிற்கின்றன. அவரது தாக்கம் மேற்கத்திய இசையில் இன்னமும் தொடர்கிறது. திரு.லுத்விக் வான் பீத்தோவன் (Ludwig Van Beethovan) தனது ஆரம்ப நாட்களில் மோஸôர்ட் படைத்த படைப்புக்களை வைத்தே இசையமைக்கத் தொடங்கினார்.

 ஜோஸப் ஹைடன் (Joseph Haydn) மோஸôர்ட்டைப் பற்றி எழுதும்போது ""அடுத்து வரும் சந்ததியினர் இன்னும் 100 ஆண்டுகளுக்கு இது போன்ற திறமையைப் பார்க்க முடியாது'' என்று எழுதினார். 20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாகிய திரு.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) மோஸôர்ட்டைப் பற்றி கூறும்போது ""மோஸôர்ட் இந்த உலகத்தைச் சேர்ந்தவரல்ல'' என்று கூறினார்.

 அமெரிக்காவில் வெர்ஜினியா (Virginia) மாகாணத்தில் கெஸ்விக் (Keswick) என்னும் நகரில் 1990-ஆம் ஆண்டு பிறந்த க்ரிகரி ஆர்.ஸ்மித் (Gregory R.Smith), 14 மாதக் குழந்தையாக இருக்கும்போது, மிகக் கடினமானக் கணிதங்களைப் போடும் திறனைப் பெற்றான். 2 வயதாகும்போது, மொழி இலக்கணத்தை நன்றாக அறிந்து கொண்டான். தனது 9-ஆவது வயதிற்குள் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றான். தனது 13-ஆம் வயதில் பட்டப்படிப்பை முடித்தான்.

 இதற்கிடையில் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு உணவும் கல்வியும் தடையின்றிக் கிடைக்க வேண்டும் என்னும் பொது நல நோக்கோடு, ""இன்டர்நேஷனல் யூத் அட்வகேட்ஸ் (International Youth Advocates)" என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தனது 11 ஆவது வயதில் தொடங்கினான். இந்தத் தொண்டு நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் ஆக்கபூர்வமான செயல்பாட்டைப் பார்த்து, க்ரிகரி ஆர்.ஸ்மித், அவனுடைய 12-ஆவது வயதில் ஒரு முறையும், 13-ஆவது வயதில் இன்னொரு முறையும் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டான்.

 அமெரிக்க அதிபர் திரு.பில் கிளின்டன் (Bill Clinton), அந்நாளைய சோவியத் கூட்டமைப்பின் அதிபர் திரு.மைக்கெல் கோர்பச்சேவ் (Michael Gorbachev)போன்றோரோடு சரிசமமாக அமர்ந்து உரையாடும் வாய்ப்பைப் பெற்ற க்ரிகரி ஆர்.ஸ்மித், அமெரிக்காவின் அத்தனைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் (Winfrey Oprah Show உட்பட) பேட்டி எடுக்கப்பட்ட ஒரே சிறுவன் என்னும் பெருமையைப் பெற்றான்.

 குழந்தைகளுக்கான உரிமைகளைப் பற்றி விவாதிப்பதற்காகக் கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் கூட்டத்தில் முக்கிய விருந்தாளியாக அழைக்கப்பட்டான்.

 ஐ.நா. சபையின் பாதுகாப்புக் குழுவின் (Security Council of United Nations) முன்னால் தோன்றி உரையாடும் சிறப்பைப் பெற்ற க்ரிகரி. ஆர்.ஸ்மித், தன்னுடைய 27- ஆவது வயதிற்குள் ஒன்றுக்கொன்றுத் தொடர்பற்ற 3 தனித்தனித் துறைகளில் முனைவர் பட்டமும் பெற்று விட்டான். தன்னுடைய 9- ஆவது வயதில் வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) பத்திரிகைக்குப் பேட்டியளித்த க்ரிகரி ஆர்.ஸ்மித், ""எனக்கு ஒரு சிறப்பான தனித்திறமை அளிக்கப்பட்டிருப்பதாக நான் உணர்கிறேன், அது எப்படி, ஏன் எனக்கு அளிக்கப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அத்திறமையைக் கொண்டு மனித குலத்திற்கு நான் தொண்டாற்றுவேன்'' என்று கூறினான்.

 1962-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் நாள் தென் கொரியாவில் (South Korea) கேங்க்வான் (Gangwon) மாகாணத்தில் பிறந்தவன் கிம் உங் யாங் ((Kim Ung Yong). 6 மாதக்குழந்தையாக இருக்கும்போதே பேசத் தொடங்கிய அவன் தனது 3-ஆம் பிறந்த நாளுக்குள்ளாக கொரிய (Korean), ஜப்பானிய (Japanese), ஆங்கில (English) மற்றும் ஜெர்மானிய (German) மொழிகளை எழுதவும் படிக்கவும் தெரிந்து கொண்டான். அவனுடைய 4-ஆவது வயதில் புத்திக்கூர்மைக்கான தேர்வில் (Intelligence Quotient Test) 200 மதிப்பெண்கள் வாங்கி, மிகப் பெரிய சாதனையைப் படைத்தான்.

 1967-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ஆம் நாள், ஃப்யூஜி டி.வி. (Fugi T.V.) என்னும் ஜப்பானியத் தொலைக்காட்சியில் கணிதத்தில் வகைக்கெழு சமன்பாடுகளை (differential equations) வெற்றிகரமாகப் போட்டுக்காட்டினான். 7-ஆவது வயதில் அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாஸôவினால் அழைக்கப்பட்ட கிம் உங் யாங், தனது 15-ஆவது வயதில் கொலரேடோ (Colorado) பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றான்.

 இப்படிச் சிலர் மட்டும், பிறவியிலேயே மேதாவித்தனமும், வயதுக்கு மீறிய திறமை மற்றும் அறிவாற்றலும் பெறக் காரணம் என்ன? ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமைக்கும் தொடரும் காரணத்தால் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுகின்றனவா? அப்படியானால் மறு பிறப்பு என்பது உண்மைதானா? அல்லது மனித மூளை என்னும் இயந்திரத்தின் இயக்கம் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படாததால் இது இன்னமும் புதிராகவே இருக்கிறதா?

- நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com