புத்தாண்டில் வித்திடுவோம் கலகமில்லா உலகம்

முதல் ஹிஜ்ரத் நபி பட்டம் கிடைத்த 5 ஆம் ஆண்டு ரஜப் மாதத்தில் இன்றைய எத்தியோப்பியா அன்றைய ஹபசா - அபிசீனியா
புத்தாண்டில் வித்திடுவோம் கலகமில்லா உலகம்

முதல் ஹிஜ்ரத் நபி பட்டம் கிடைத்த 5 ஆம் ஆண்டு ரஜப் மாதத்தில் இன்றைய எத்தியோப்பியா அன்றைய ஹபசா - அபிசீனியா மேற்காசிய கண்டத்தின் கோடியில் அமைந்துள்ள ஆப்பிரிக்க நாட்டிற்கு 11 ஆண்கள் 4 பெண்கள் 15 நபர்கள் குழுவாக விழுமிய நபி (ஸல்) அவர்களின் அனுமதியுடன் மக்காவிலிருந்து சென்றதே. சில நாள்கள் கழித்து இரண்டாவது குழு 83 ஆண்கள் 18 பெண்கள் 101 நபர்கள் குழுவாக சென்றது. முதல் குழு தலைவர் உத்மான் பின் மள்வூன் (ரலி). இக்குழுவில் இனிய நபி (ஸல்) அவர்களின் திருமகள் ருக்கையா (ரலி) மருமகன் உத்மான் பின் அப்பான் (ரலி) ஆகியோரும் அடங்குவர். இக்குழு நடந்தும் ஒட்டகங்கள், குதிரைகளில் சவாரி செய்தும் செங்கடலின் கடற்கரையை அடைந்தது. அரை தீனார் வாடகையில் ஒரு கப்பலை வாடகைக்கு எடுத்து பன்னாட்கள் பயணம் செய்து அபிசீனியாவை அடைந்தது. சில நாள்கள் கழித்து இரண்டாவது குழுவும் சென்றது. இவர்களை அங்கிருந்து விரட்டியடிக்க குறைஷிகள் செய்த சூழ்ச்சிகள் வீழ்ச்சியுற்றன. அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷியும் இஸ்லாத்தை ஏற்றார். மன்னர் மக்கத்து அகதிகள் மதீனாவிற்குச் செல்லும் வரை 13 ஆண்டுகள் அபயம் அளித்தார். 

நபித்துவம் பெற்ற ஆறாம் ஆண்டிலிருந்து ஒன்பதாம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அவர்களின் ஹாஷிம் கிளையினரும் மக்காவை விட்டு ஷுஆபு அபீதாலிப் என்ற மலை கணவாயில் குடியிருந்தனர். 

முதன் முதலாக யத்ரிப் (மதீனா) நகருக்கு ஹிஜ்ரத் செய்தவர் அபூஸலமா அப்துல்லா பின் அப்தில் அஸத் அல் குரைஷி (ரலி). இவர் முதல் குழுவில் அபிசீனியாவிற்குச் சென்று மக்காவிற்குத் திரும்பியவர். இவரைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் தனியாகவும் இருவராகவும் குழுவாகவும் மதீனாவிற்குச் சென்றனர்.

கோமான் நபி (ஸல்) அவர்களைக் கொன்றிட கொடியவன் அபூஜஹில் கொலையாளிகளை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வீட்டை முற்றுகையிட செய்த நபித்துவம் பெற்ற பதிமூன்றாம் ஆண்டு ரபியுல் அவ்வல் பிறை ஒன்று வெள்ளிக்கிழமை இரவில் முற்றுகையிட்ட மூடர்களின் கண்களில் காணாது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருமைத் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு தவ்ர் குகையில் மூன்று நாள்கள் தங்கி ரபியுல் அவ்வல் பிறை 4 இல் திங்கள்கிழமை பயணத்தைத் துவக்கினார்கள். இதனை, இறைமறை குர்ஆனின் 8-30 ஆவது வசனம் ""நிராகரிப்போர் உம்மைச் சிறை வைக்கவோ கொலை செய்யவோ ஊரைவிட்டு வெளியேற்றவோ சூழ்ச்சி செய்த நேரத்தில் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்'' என்று கூறுகிறது.

அப்துல்லாஹ் பின் அரீகத் வழிகாட்ட ஆமிர் பின் புஹைரா செங்கடல் கரையோரமாய் 20-9-622 நபித்துவம் பெறற 13 ஆம் ஆண்டு ரபீவுல் அவ்வல் பிறை 16 இல் மதீனாவை அடைந்தார்கள். அபூ அய்யூப் (ரலி) இல்லத்தில் தங்கினார்கள். அந்த இடங்கள் எலலாம் இன்று மஸ்ஜிதுன் நபவி ஆக உள்ளது. ஹிஜ்ரத் வரலாற்றில் அபூ அய்யூப்(ரலி) பெயரும் சிறப்பாக குறிப்பிடப்படுகிறது.

நபித்துவ 11 ஆம் ஆண்டில் இருந்து 13 ஆம் ஆண்டிற்குள் அதிக அளவில் மக்காவிலிருந்து ஹிஜ்ரத்தாக வந்த முஹாஜிரீன்களை ஆதரித்து அனைத்து உதவிகளையும் செய்த மதீனத்து அன்சாரிகள் தலைமுறை தலைமுறையாக அல்லாஹ்வின் அருளைப் பெற்று பொருளோடும் பொலிவோடும் வலுவோடும் வாழ்வாங்கு வாழ அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வேண்டியபடி இன்றும் மதீனா வனப்புடனும் வணிக சிறப்புடனும் வளமோடும் திகழ்கிறது. 

ஹிஜ்ரத்துக்குப் பிறகே மக்காவில் இரு ரக் அத்துகள் தொழுத லுஹர் (நண்பகல்) அசர் (மாலை) இஷா (இரவு) தொழுகைகள் நான்கு ரக் அத்துகளாக தொழபட்டதை அறிவிக்கிறார் அன்னை ஆயிஷா (ரலி) நூல் -புகாரி. தொழுகைக்கு அழைக்கும் பாங்கு சொல்லும் முறை ஹிஜ்ரி முதலாம் ஆண்டில் மதீனாவில் ஏற்பட்டது.

ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டது. இரு பெருநாள் (ஈதுல் பித்ர், ஈதுல் அழ்ஹா) ஏற்பட்டன. ஈதுல் பித்ர் தர்மம் துவங்கியது. மக்காவில் கடமையான ஜகாத்தை வசூலிக்கும் முறை இந்த ஆண்டில்தான் ஏற்பட்டது. பத்ரு போர் நிகழ்ந்தது. ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு மது குடிப்பது தடை செய்யப்பட்டது. தொடர்ந்து ஹலால் (ஆகுமானது) ஹராம் (ஆகாதது) குற்ற தண்டனை சட்டவிதிகள் குறித்த வசனங்கள் அருளப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. 

மக்கத்து முஹாஜிரீன்களுக்கு தட்பவெப்ப நிலை ஒத்து கொள்ளாமையால் காய்ச்சலால் கடும் வேதனைக்கு உள்ளாயினர். உத்தம நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் ""மக்கத்தை எங்களுக்கு ஏற்றதாக ஏற்படுத்தியது போல மதீனாவையும் உகந்ததாக ஆக்கிவை'' என்று வேண்டியதை விளம்புகிறார் அம்ருபின் ஆஸ் (ரலி) நூல்- புகாரி. இனிய நபி (ஸல்) அவர்களின் இறைவேட்டலுக்குப்பின் மதீனாவும் மக்கத்து அகதிகளுக்கு அகமும் புறமும் ஏற்கும் ஏற்ற நகராகியது. ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு மக்கா வெற்றிக்குப்பின் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தவர்கள் மக்காவில் தங்காமல் மதீனாவிற்கே திரும்பினர். 

உலகில் மனிதர்கள் பெருகிய பின்னர் காலத்தைக் கணக்கிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மனித தேவைகளே புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திடும். அதுபோல துவக்கத்தில் மக்கள் ஆதம் நபி பூமியில் இறங்கிய நாளையும் நூஹ் நபியும் அவரைப் பின்பற்றியோரும் வெள்ளப் பிரளயத்தில் இருந்து தப்பிய நாளையும் இப்ராஹிம் நபி, யூசுப் நபி நபித்துவம் பெற்ற நாளையும் மூசா நபி நைல் நதியைக் கடந்த நாளையும் அடிப்படை ஆண்டாக வைத்து காலத்தைக் கணக்கிட்டனர். ஈசா நபி பிறப்பிற்கு முன் கி.மு. என்றும் பிறப்பிற்குப்பின் கி.பி. என்றும் இன்றைய கால கணக்கு ஏற்பட்டது.

அபூ மூஸô அஸ் அரி (ரலி) வேண்டுகோளின் தூண்டுதலால் உமர் (ரலி) பிற தோழர்களுடன் ஆலோசித்து அலி (ரலி) முன்மொழிந்த ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்ட ஹிஜ்ரி ஆண்டை அறிவித்தனர். ஹிஜ்ரத்துக்கு இரு மாதங்கள் முந்திய முஹர்ரம் மாதத்தை அராபியர்கள் முதல் மாதமாக கணக்கிட்டதைப்போல் ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாக முஹர்ரம் ஏற்கப்பட்டது. ஹிஜ்ரி 15 ஆம் நூற்றாண்டு பிறப்பைச் சிறப்பித்து இந்திய அரசு 3-11-1980 இல் அஞ்சற்றலை வெளியிட்டது. ஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டு 3-10-2016 இல் பிறக்கிறது. 

புத்தாண்டில் எத்திக்கும் முத்தான மனித இனம் புனிதமாய் வாழ சகிப்பு தன்மையுடன் சகோதரத்துவம் பேணி உலக அமைதிக்கு வித்திட்டு கலகம் இல்லா உலகம் காண உறுதி பூணுவோம். 
- மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com