அறிவியலுக்கு அப்பால் 21: வாட்செகா அற்புதம்

அமெரிக்காவில் இல்லினாய் (Illinois) மாநிலத்தில் 1864-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரு மற்றும் திருமதி வென்னம் (vennum) தம்பதியினருக்கு,
அறிவியலுக்கு அப்பால் 21: வாட்செகா அற்புதம்

அமெரிக்காவில் இல்லினாய் (Illinois) மாநிலத்தில் 1864-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரு மற்றும் திருமதி வென்னம் (vennum) தம்பதியினருக்கு, மேரி லுரன்ஸி (Mary Lurancy) என்னும் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு 13 வயது ஆகும்போது அடிக்கடி வலிப்பு வரத் தொடங்கியது. வலிப்பு
வரும்போதெல்லாம் சுய நினைவை இழந்த அந்தப் பெண், தனக்கு நினைவு திரும்பும் போதெல்லாம் தன்னை வேறொரு நபராகக் கருதத் தொடங்கினாள்.

அவள் மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக எண்ணி அவளுடைய பெற்றோர் அவளை மனநலக் காப்பகத்தில் சேர்க்க முடிவெடுத்தனர். ஆனால், வென்னம்
குடும்பத்தாரின் மிக நெருங்கிய நண்பர்களாகிய ராஃப் (Roff) தம்பதியினர் லுரன்ஸியை ஆன்மிக நாட்டம் கொண்ட மருத்துவராகிய இ.டபிள்யூ. ஸ்டீவன்ஸ்(E.W.Stevens) என்பவரிடம் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். மருத்துவர் ஸ்டீவன்ஸ் லுரன்ஸியை ஆழ்ந்த அறிதுயில் நிலைக்கு(hypnotism) உட்படுத்தியபோது, தன்னுடைய உடலுக்குள் அடிக்கடி பல்வேறு ஆவிகள் புகுந்து விடுவதாக லுரன்ஸி கூறினாள். அந்த ஆவிகளில் ஒன்றின் பெயர் மேரி ராஃப் (Mary Roff) என்று லுரன்ஸி கூறியபோது மருத்துவர் ஸ்டீவன்ûஸ விட திருமதி.ராஃப் மற்றும் அவரது கணவர் இருவரும் பெருத்த
அதிர்ச்சிக்குள்ளானார்கள். காரணம், ராஃப் தம்பதியினருக்குப் பிறந்து தனது 19 ஆவது வயதில் கடும் நோயினால் பாதிக்கப்பட்டுக் காலமான ஒரு மகளின் பெயர் மேரி ராஃப் ஆகும். அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் வாரன் கவுன்டி என்னும் இடத்தில் 1846-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் நாள் ராஃப் (Roff)
தம்பதியினருக்குப் பிறந்தவள் மேரி ஆவாள். அவளுக்கு 13 வயது ஆனபோது காக்காய் வலிப்பால் அடிக்கடி பாதிக்கப்பட்ட மேரி, விரக்தியால் 1865-ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயன்றாள். நல்லவேளையாக அவள் காப்பாற்றப்பட்டதும், நினைவிழந்த நிலையில் 5 நாட்கள் கிடந்த மேரி, கண் விழித்த போது அவளது கண்கள் பாண்டேஜ் துணியால் கட்டப்பட்டிருந்தன. ஆனாலும் கட்டப்பட்ட கண்கள் வழியாகவே மேரியால் படிக்கவும் பார்க்கவும் முடிந்தது. டான்வில் டைம்ஸ்(Danville Times) பத்திரிகையின் ஆசிரியர் ஏ.ஜெ.ஸ்மித் (A.J.Smith) என்பவர் மேரி ராஃப்பைப் பரிசோதித்தபோது அவளால் கட்டப்பட்ட கண்களைக் கொண்டே ஸ்மித்தின் கையில் இருந்த கடிதத்தைப் படிக்க முடிந்தது. அதைப்பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து போன ஸ்மித் இதைப்பற்றி ஒரு நீண்ட கட்டுரையைத் தன் நாளிதழில் எழுதினார். அதன் பின்னர், 1865 ஜுலை மாதம் 5-ஆம் நாள் மேரி ராஃப் இறந்து போனாள். 

அவள் இறந்தபோது, லுரன்ஸி வென்னம் 13 மாதக் குழந்தை. எனவே, தங்களுடைய மகளாகிய மேரி ராஃபின் ஆவி லுரன்ஸியின் உடலில் புகுந்து
கொண்டிருப்பதாகச் சொல்லப் பட்டவுடன் ராஃப் தம்பதியினருக்கு அதிர்ச்சி, ஆர்வம், மகிழ்ச்சி மற்றும் துயரம் அனைத்தும் ஒருங்கே ஏற்பட்டது.

உடனே, லுரன்ஸியைத் தங்களுடன் சிறிது காலம் அனுப்பி வைக்குமாறு வென்னம் தம்பதியினரிடம், ராஃப் தம்பதியினர் வேண்டிக் கொண்டனர். மிகப் பெரிய குழப்பத்தில் ஆழ்ந்த வென்னம் தம்பதியினர் தங்கள் மகளாகிய லுரன்ஸியை ராஃப் தம்பதியினரோடு அனுப்பி வைத்தனர். ராஃப் தம்பதியினரின் வீட்டுக்குச் சர்வ சாதாரணமாகப் போய்ச் சேர்ந்த லுரன்ஸி, ராஃப் தம்பதியினரின் இரண்டாவது மகளைப் பார்த்தவுடன் நெர்வி (Nervie) என்று அவளுடைய பெயரைக் கூவிக் கொண்டே ஓடிப்போய் அவளைக் கட்டி அணைத்துக் கொண்டாள். 

இதில் வேடிக்கை என்னவென்றால், இதற்கு முன்னர் நெர்வியை லுரன்ஸி பார்த்ததே இல்லை. அதேபோல், ராஃப் தம்பதியினரின் வீட்டில் தங்கியிருந்த
காலம்வரை அவர்களது சொந்தக்காரர்கள் ஒவ்வொருவரையும், ஏன் அவர்கள் வாழ்க்கையில் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த சம்பவங்களையும் லுரன்ஸி சரியாக நினைவு கூர்ந்தாள். ராஃப் தம்பதியினரின் பக்கத்து வீட்டுக்காரர்களாக ஒரு காலத்தில் வாழ்ந்த திருமதி.பார்க்கர் (Parker) ஒருநாள் ராஃப் தம்பதியினரின் வீட்டுக்கு வந்தபோது, அவளை லுரன்ஸி சரியாக அடையாளம் கண்டுகொண்டாள். லுரன்ஸிக்கு எந்த காலத்திலும் திருமதி.பார்க்கரைத் தெரியாது. ராஃப் தம்பதியினரின் வீட்டில் மேரி ராஃபால் தைக்கப்பட்ட துணிகள் மற்றும் எழுதப்பட்டக் கடிதங்களையெல்லாம் மிகச் சரியாக அடையாளம் கண்டு கொண்ட லுரன்ஸி, அவை தொடர்புடைய சம்பவங்களையும் மிகச் சரியாக நினைவு கூர்ந்தாள்.

சிறிது காலத்திற்குப் பிறகு வென்னம் தம்பதியினர் ராஃப் தம்பதியினரின் வீட்டுக்குப் போனபோது, அவர்கள் இருவரையும் லுரன்ஸியால் அடையாளம்
கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால், திடீரென்று ஒரு நாள் ராஃப் தம்பதியினரைப் பார்த்து மேரி ராஃப் லுரன்ஸியின் உடலை விட்டு விலகிவிடப் போவதாகத் தெரிவித்தாள். கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் மெளனத்தில் ஆழ்ந்த லுரன்ஸி தன்னுடைய இயல்பு நிலைக்குத் திரும்பியபோது, தான் எப்படி, ஏன் மற்றும் எதற்காக ராஃப் தம்பதியினரின் வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்று புரியாமல் தவித்தாள். உடனே, வென்னம் தம்பதியினர் லுரன்ஸியை தங்கள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போனார்கள. சிறிதுகாலத்திற்குப் பிறகு, வலிப்பு நோயின் தாக்கத்திலிருந்து தாமாகவே விடுபட்ட லுரன்ஸிக்கு 1882-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அதன்பிறகு எந்தவிதத் தாக்கமும் இல்லாமல் அவள் இயல்பான வாழ்க்கை வாழ்ந்தாள்.

முறையாக மருத்துவப் படிப்பைப் படித்த மருத்துவர் ஸ்டீவன்ஸ், லுரன்ஸியை நேரடியாகப் பரிசோதித்துத் தன் அனுபவங்களை 1879-ஆம் ஆண்டு ரெலிஜியோ
பிலசாபிகல் ஜர்னல் (Religio Philosophical Journal) என்னும் பத்திரிகையில் வெளியிட்டார். இதில் மருத்துவர் ஸ்டீவன்ûஸக் கவர்ந்த விஷயம்
என்னவென்றால், மார்ச் 1849-இல் இறந்துபோன மருத்துவர் ஸ்டீவன்ஸின் மகள் எம்மா ஏஞ்சலியாவைப் (Emma Angelia) பற்றிய விவரங்களையும் லுரன்ஸி
மிகச் சரியாகத் தெரிவித்தாள். ஸ்டீவன்ஸிற்குச் சொந்தமான விஸ்கான்ஸின் (Wisconsin) என்னும் நகரில் உள்ள வீட்டைப் பற்றிய விவரங்களையும் கூட
லுரன்ஸியால் சரியாகத் தெரிவிக்க முடிந்தது.

1887-இல் மருத்துவர் ஸ்டீவன்ஸ், லுரன்ஸியின் கதையை "தி வாட்செகா வொண்டர்' (The Watseka Wonder) என்னும் பெயரில் எழுதி வெளியிட்டார்.
ஸ்டீவன்ஸின் குறிப்புக்களை முழுமையாக நம்பாமல் முனைவர். ரிச்சர்ட் ஹாட்சன் (Richard Hodgson) என்னும் உளவியல் ஆராய்ச்சியாளர், இந்த நிகழ்ச்சியில் தொடர்புடைய பலரை நேரில் சந்தித்து அவர்களோடு உரையாடி அவர்கள் பொய் சொல்லவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின்னர், 1890-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் நாள் "ரெலிஜியோ பிலசாபிகல் ஜர்னல்' (Religio Philosophical Journal) பத்திரிகையில் ஒரு கட்டுரையை எழுதினார். 

அதே நேரத்தில் உளவியல் ஆராய்ச்சியாளராகிய வில்லியம் ஜேம்ஸ் (William James)  "தி ப்ரின்ஸிபிள்ஸ் ஆஃப் ஸைக்காலஜி' (The Principles of Psycology)
என்னும் நூலில் லுரன்ஸியின் கதையை, இவ்வுலகில் தோன்றிய ஆவிகளால் பீடிக்கப்பட்ட நபர்களின் கதைகளுள் விசித்திரமான ஒன்று என்று குறிப்பிட்டார்.
ஓரு நூற்றாண்டுக்கும் மேலாக லுரன்ஸியின் கதை எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் கவர்ந்து வந்தது. 1949-இல் "அவுட் ஆஃப் தி நைட்' (Out of the
Night) என்னும் தலைப்பில் வந்த வானொலி நிகழ்ச்சியில் லுரன்ஸியின் கதை, "தி கர்ள் வித் தி ட்யூயல் பர்சனாலிட்டி' (The Girl with the Dual Personality)
என்னும் தலைப்பில் ஒலிபரப்பப்பட்டது. 1986-இல் இதே கதை ஒரு புதினமாக்கப்பட்டு "பிஃபோர் ஐ வேக்' (Before I Wake) என்ற தலைப்பில் நாடகமாக்கம் பெற்றது. 2009-ஆம் ஆண்டு லுரன்ஸியின் கதை "தி பொஸஸ்டு' (The Possessed) என்ற பெயரில் திரைப்படமாக வெளியிடப்பட்டது.

ஆனால், திரு.பிராங்க் சார்ஜன்ட் ஹாஃப்மேன் (Franc Sargent Hoffman) போன்ற உளவியல் அறிஞர்களால் லுரன்ஸியின் கதை ஒரு பித்தலாட்டமான
ஆள்மாறாட்டம் என்று வர்ணிக்கப்பட்டது. இருப்பினும், லுரன்ஸியால் எப்படி முன்பின் தெரியாத ராஃப் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் அவர்களோடு
தொடர்புடைய பல சம்பவங்களையும் அறிந்திருக்க முடிந்தது என்ற கேள்விக்கு எந்த அறிவியல் அறிஞனாலும் இதுவரை பதில் கூற முடியவில்லை.

- நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com