அவதாரம்! குறுந்தொடர் 8

ஸ்ரீபாஷ்யத்திற்கு எழுதிய உரையை நாடெங்கும் பரவச்செய்ய ஸ்ரீவிஜய யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்று
அவதாரம்! குறுந்தொடர் 8

குறுந்தொடர்: 8
ஸ்ரீபாஷ்யத்திற்கு எழுதிய உரையை நாடெங்கும் பரவச்செய்ய ஸ்ரீவிஜய யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்று சீடர்கள் வேண்டினர். அரங்கன் முன்பு சென்று பட்டி தொட்டியெங்கும் விசிஷ்டாத்வைதத்தைப் பரப்புவதற்கும் அனுமதி கேட்டார் உடையவர். நடந்தே பழக்கப்பட்ட அவரது கால்கள் போக்குவரத்து வசதிகளே இல்லாத அந்த நாள்களில் நடப்பதற்கு அஞ்சவில்லை.

அரங்கன் அனுமதியுடன் முதலில் சோழமண்டலம் திவ்ய தேசத்து பெருமாள்களை மங்களாசாசனம் செய்தார். செல்லும் வழியெல்லாம் சீடர்கள் என்னும் செல்வம் சேர்ந்ததோடு  புறச்சமயவாதிகளும் திருந்தி வைணவரானார்கள்.

திருமாலிருஞ்சோலையில் கள்ளழகரை தரிசிக்கும்போது கள்ளழகரால் தெய்வ வாக்காக ராமானுஜரின் பெருமை இங்கு சொல்லப்பட்டது. அங்கு ஆண்டாள் வேண்டிக்கொண்ட 100 தடா அக்கார அடிசிலும் 100 தடா வெண்ணெயையும் சுடர்க்கொடிக்காகப் படைத்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற அவரை ஆண்டாள் முன் வந்து, "வாரும் அண்ணா!' என அழைத்த சம்பவம் நிகழ்ந்தது.

பின்னர், திருப்புல்லாணியில் சேது தரிசனம் செய்து, நம்மாழ்வாரின் அவதார ஸ்தலமான ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். தம்முடன் வந்த திருமலை நம்பியின் குமாரருக்கு திருக்குருகைப் பிரான் பிள்ளான் என்ற நம்மாழ்வார் பெயரைச் சூட்டி, அப்பிள்ளானைக் கொண்டு திருவாய் மொழிக்கு உரை இயற்றச் செய்தார்.

தென்னரங்கன் பொன்னடியாகத் திகழும் சடகோபனிடம் எம்பெருமானார் அடிபணிந்து ஆழ்வாரின் பொன்னடியாகத் தம்மை உலகம் வழங்கவேண்டும் என்று வேண்டினார். அது மாற்றம் பெற்று அன்று முதல் ராமானுசன் என்றே அழைக்கப்பட்டார்.  

மதுரகவி ஆழ்வார் திருஅவதாரம் செய்த திருக்கோளூர் சென்று, தரிசனம் செய்யும்போது  ஒரு சாதாரணப் பெண்ணை "ஏன் அம்மா, இந்த ஊரைவிட்டுச் செல்கிறாய்?'' என்றார். அந்தப் பெண்ணோ எண்பத்தோரு சொற்றொடர்களில் ஆழ்வார்கள் சரிதம் இதிகாசம் இறைவனுடைய லீலைகள் ஆகிய ஒவ்வொரு நிகழ்வையும் ஒவ்வொரு தொடரில் சொன்னதைக் கேட்டு அதிசயித்தார். அங்கிருந்து அருகிலேயே உள்ள நவதிருப்பதி எம்பெருமான்களையும் மங்களாசாசனம் செய்து எதிர்த்து வந்த மதவாதிகளுடன் தர்க்கம் செய்து வென்று மலைநாட்டு திருப்பதிகளின் தலைமைத் தலமாய்த் திகழும் திருவனந்தபுரம் சென்றார்.

அனந்தன் கோயிலை ஸ்ரீவைணவ முறைப்படி திருத்தியமைப்பது என்று எண்ணமிட்டு அன்றிரவு அங்கு உறங்கினார். காலையில் கண் விழித்துப் பார்த்தபோது திருக்குறுங்குடி அருகில் திருவட்டப் பாறையில் தாம் கிடப்பதை உணர்ந்தார். நாம் ஒன்று நினைக்க அவன் ஒன்று நினைக்கிறான் என்று கருதி, அருகில் ஓடிய அருவியில் நீராடி வட்டப்பாறையில் அமர்ந்து திருமண்காப்பு அணிந்தார். அப்போது ஒருவர் அங்கு வந்து உடையவரை தண்டனிட்டு, அடியேனுக்கும் திருமண் சாதித்தருள வேண்டும் என்று வேண்டினார். எம்பெருமானாரும் அவ்வாறே அவருக்குத் திருமண் இட்டுவிட்டார். குறுங்குடி நம்பியை தரிசனம் செய்ய கோயிலுக்குச் சென்றபோது, காலை தம் கையால் இட்ட அதே திருமண்காப்புடன் நம்பி சேவை சாதிப்பதைக் கண்டு மகிழ்வடைந்தார். நம்பியும் சீடனாகித் தரையில் நின்று, உடையவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்று, ஸ்ரீ வைஷ்ணவ நம்பி என்னும் புதிய தாசப் பெயரையும் பெற்றார் குறுங்குடி நம்பி.

பின் உடையவர் வலமாகவே திருவண்பரிசாரம், திருவாட்டாறு, திருவனந்தபுரம் சென்று வணங்கி அங்கும் ராமானுஜ மடத்தை நிறுவி, மற்றுமுள்ள மலைநாட்டு திருப்பதிகளையும் வணங்கி,  வடநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார்.

வடமதுரை, துவாரகைக்குச் சென்று துவாரகநாதனை வாழ்த்தி பத்ரிகாச்ரமம் சேர்ந்தார்.  திருமங்கையாழ்வார் பாசுரங்களால் வாழ்த்தி, இமயத்தில் கொடிநாட்டித் திரும்பினார்.

பின்னர் நைமிசாரண்யம், கோகுலம், கோவர்த்தனம், பிருந்தாவனம், திருக்கண்டம் கடிநகர்  முதலான திவ்யதேசங்களையும் தரிசித்து, ஸ்ரீ வைணவத்தை நிலைநாட்டி காஷ்மீரம் சேர்ந்தார். ஸ்ரீநகரில் சாரதா பீடம் என்னும் மண்டபம் அடைந்தார்.

அங்கு அப்போது சரஸ்வதி தேவி தானே வாசலைத் திறந்து கொண்டு எதிரே புறப்பட்டு வந்து, உடையவரைப் பார்த்து ஒரு சுருதி வாக்கியத்துக்குப் பொருள் கேட்க, அற்புதமான உரை நல்கினார் உடையவர். சரஸ்வதி தேவி மகிழ்ந்து உடையவரின் ஸ்ரீபாஷ்யச் சுவடியை தன் தலைமேல் வைத்துக் கொண்டாடினாள். அவருக்கு ஸ்ரீ பாஷ்யகாரர் என்று திருநாமம் கொடுத்தாள். காஷ்மீர் அரசனும் பண்டிதர்களும் ராமானுஜரின் அடிபணிந்து ஸ்ரீவைஷ்ணவராயினர்.

வியாசரின் பிரம்மசூத்திரத்துக்கு சங்கர பாஷ்யம், மத்வ பாஷ்யம், நீலகண்ட பாஷ்யம் போன்ற பல உரை நூல்கள் ஏற்கெனவே உண்டு. சூத்ரமியற்றிய வியாசரின் கருத்தை, போதாயன ரிஷியின் வழியில் சிந்தித்துப் பொருந்திய பொருளை உள்ளது உள்ளபடி விளக்கியதால் இதற்கு "ஸ்ரீபாஷ்யம்' என்றே சரஸ்வதி பெயரிட்டழைத்தாள்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
- இரா.இரகுநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com