தீயாக தீபம் தாய்

ஓர் உடலில் ஓர் உயிர்தான் இருக்கும். கர்ப்பிணி பெண்ணின் உடலில் இரு உயிர்கள் உள்ளன. ஓர் உடல் இரு உயிர்களைத் தாங்கி வயிற்றிலுள்ள உயிர்வாடாது வதங்காது
தீயாக தீபம் தாய்

ஓர் உடலில் ஓர் உயிர்தான் இருக்கும். கர்ப்பிணி பெண்ணின் உடலில் இரு உயிர்கள் உள்ளன. ஓர் உடல் இரு உயிர்களைத் தாங்கி வயிற்றிலுள்ள உயிர் வாடாது வதங்காது நிதமும் இதமாய் காத்து புத்தம் புது மலராய் பூவுலகில் பிறக்க அன்னை துறக்கும் சுகங்கள் அளப்பரியன. பிறந்த குழந்தை சிறந்த குழந்தையாக வளர உதிரத்தை மதுரமான அமுதமான பாலாக தந்திடும் பாங்கிற்கு ஈடு இணை இல்லவே இல்லை.

மக்காவில் உள்ள புனித கஃபா ஆலயத்தை ஏழுமுறை சுற்றும் வழிபாட்டிற்குத் தவாப் என்று பெயர். ஒருவர் அவரின் தாயை இடுப்பில் சுமந்து தவாப் சுற்றினார்.
அப்பொழுது அவர் அங்கிருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் என் தாய்க்குரிய கடமையை நான் செய்து விட்டேனா? என்று கேட்டார். உன்னை ஈன்று எடுக்கையில் வலியால் உன் தாய் விட்ட ஒரு மூச்சிற்கு இப்பணி ஈடாகாது என்று இனிய நபி (ஸல்) அவர்கள் இயம்பினார்கள். நூல்- தப்ஸீர் இப்னு கதீர்.

ஒரு நாள் ஓர் இளைஞன் கால் இல்லாத அவரின் தாயைக் கூடையில் வைத்து சுமந்து தவாப் சுற்றுவதை உதுமான் (ரலி) பார்த்தார்கள். மற்றொரு நாள் ஓர் இளைஞன் வயதான அவரின் தாயைத் தோளில் சுமந்து தவாப் சுற்றுவதை அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) பார்த்தார்கள். இவ்விரு நபி தோழர்களும்
இவ்விரு இளைஞர்களும் தாய்க்குச் செய்யும் இக்கடமை அவர்களின் அன்னைகள் அவர்களை வயிற்றில் சுமந்து பெற்றதற்கு ஈடாகாது என்று இயம்பினார். 

தாய்களின் தன்னிகரில்லாத தியாகத்தைத் தரணிக்கு உணர்த்துவதே உலக அன்னையர் நாள்! இவ்வாண்டு, 8.4.2017 உலக அன்னையர் நாள்! கல்வி அறிவும் குடும்ப அனுபவமும் உள்ள தாய் எதிர்காலத்தை எண்ணி திட்டம் இட்டு ஏற்றபடி நடப்பாள். குழந்தைகளைப் போற்றற்குரிய பொற்புடையவளாக வளர்ப்பாள்.

பெண்களின் மூளையும் சிந்திக்கும் தன்மையும் மென்மை ஆனது. அது என்றும் நன்மையை நாடும். அழுக்கற்ற தூய்மையான கண்ணாடி பழுதிலாது பிரதிபலிப்பதைப் போன்றது பெண்களின் சிந்தனை. அச்சிந்தனையின் சிதறாத சீரிய பிரதிபலிப்பே நேரிய குழந்தைகள்.

ஒரு குழந்தைக்கு முதல் ஆசிரியை அன்னையே. அன்னையின் மடியில் கிடக்கையிலே குழந்தையின் மழலை படிப்பு துவங்குகிறது. அப்படி அன்னையின் அருகில் இருந்து அருங்குணங்களைக் கற்றதால் பாத்திமா (ரலி) அவர்கள் அன்னை கதீஜா (ரலி) தந்தை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இன்ப துன்பங்களில் மனம் கோணாது மகிழ்வாய் குடும்பம் நடத்தினார்கள். அவர்களின் மாமியார் பின்தெஅசத் அவர்களைத் தாயைப் போல் கவனித்தார்கள். 

முதல் மனைவி கதீஜா (ரலி) இறந்தபின் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை மணந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் குழந்தை இல்லை. அன்னை ஆயிஷா (ரலி) பல அனாதை குழந்தைகளை வளர்த்ததோடு அக்குழந்தைகளுக்கு ஆசிரியையாகவும் இருந்தார்கள். இக்குழந்தைகளுக்குக் கற்பிப்பதைக் கண்ட பல குழந்தைகள் அவர்களிடம் கல்வி பயின்றனர்.

அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க கூடாது என்று கூறும் அல்லாஹ் தாய் தந்தைக்கு நன்றி செய்ய கட்டளை இடுகிறான் இறைமறை குர்ஆனின் 17-23 ஆவது வசனத்தில். அந்த கட்டளையை 29-8 ஆவது வசனம் தாய் தந்தைக்கு நன்றி செலுத்த நாம் மனிதனுக்கு நல்லுரை நவின்றோம் என்று உறுதிப்படுத்த 31-14 ஆவது வசனம், "நீ எனக்கு நன்றி செலுத்து. உன் தாய்க்கும் தந்தைக்கும் நன்றி செலுத்து'' என்று மீண்டும் நினைவுறுத்துகிறது. 

இவ்வசனங்களில் அன்னை முன்னிறுத்தப்படுகிறாள். தூர்ஸினா மலைக்குச் சென்று இறைவனிடம் வேதம் பெற்று மூசா நபி திரும்புவதற்குள் அவரின் சகோதரர் ஹாரூன் நபியின் நல்லுரையை மீறி ஸôமிரி என்பவன் இறைவனுக்கு இணைவைக்க மக்களை மாற்றி விட்டதால் ஆற்றொணாது கண்டித்த மூசா நபியை அமைதிப்படுத்த சகோதரர் ஹாரூன் நபி "என் தாயின் புதல்வரே!' என்று தாயை முன்னிறுத்தி அழைத்து விளக்கம் அளித்ததை விளம்புகிறது விழுமிய குர்ஆனின் 20-94 ஆவது வசனம்.

அன்னையர் உடல் நலனில் அக்கறை கொண்டு ஆவன செய்வதோடு அவர்களின் உள்ளம் மகிழ பணித்து பணிவிடை செய்ய வேண்டும். "ஏவா மக்கள் மூவா மருந்து' என்பது போல பெற்றோர் ஒரு வேலையை சொல்லி செய்யாமல் அவர்களின் குறிப்பறிந்து அவர்கள் சொல்லுமுன்னரே செய்வது பெற்றோருக்குப் பெரும் மகிழ்வைத் தரும். பெற்றோர் வெறுப்பதைப் பிள்ளைகள் தவிர்க்க வேண்டும். பெற்றோரின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தி இருக்கிறது. பெற்றோரின் கோபம் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக்கும். எத்துணை பணிவிடை எப்படி செய்யினும் அன்னை வயிற்றில் சுமந்து பெற்றதற்கும் அந்த அன்னை வருந்தி பொருந்தி வளர்த்ததற்கும் ஈடாகாது.

அபுஹுரைரா (ரலி) அவர்களின் தாய்க்குச் சலாம் உரைத்து அத்தாயின் பதில் சலாம் பெற்ற பின்னரே வெளியில் புறப்படுவார்கள் என்ற செய்தி "அதபுல் முப்ரது' என்னும் நூலில் உள்ளது. ஜாஹிமா (ரலி) போரில் கலந்து கொள்ள வந்தபொழுது அவரிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ""உங்களுக்குத் தாய் உண்டா?'' என்று கேட்டார்கள். உண்டென்று பதில் சொன்னதும் உத்தம நபி (ஸல்) அவர்கள் தோள் கொடுத்து வாளெடுத்து போரிட வந்த தோழரிடம் தாயின்
பணிவிடையில் ஈடுபடுமாறும் அத்தாயின் இரு பாதங்களின் கீழ் சொர்க்கம் உள்ளது என்றும் உரைத்தார்கள். நூல் -அஹ்மது, நஸஈ.

ஹவாசின் குலத்தைச் சேர்ந்த கைதிகள் காருண்ய நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அக் கைதிகளில் இருந்த ஒரு பெண் பாலுட்டுவதற்காக அவளின் குழந்தையை தேடினாள்; குழந்தை கிடைக்கும்வரை காணும் குழந்தைகளைத் தூக்கி மறைவிற்குச் சென்று பாலூட்டினாள்; அவளின் குழந்தை கிடைத்த உடன்
தூக்கி அணைத்து பாலூட்டினாள். அதுதான் தாய் பாசம். அதனாலேயே தாய் தியாக தீபம்.

மகான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் சிறு வயதில் ஜீலானிலிருந்து பாக்தாதிற்குக் கல்வி கற்க செல்லும்பொழுது அவரின் தாய் சட்டையின் வலப்பக்கத்தில் நாற்பது பொற்காசுகளை வைத்து தைத்து அனுப்பினார். மகான் ஒரு வணிக குழுவுடன் சேர்ந்து பாக்தாதிற்குச் சென்றார்கள். ஒரு கொள்ளைக் கூட்டம் வணிக குழுவை வழிமறித்து பொருள்களைக் கொள்ளையிட்டனர். ஒதுங்கி ஓரமாய் நின்ற சிறுவனைப் பார்த்து கொள்ளை கூட்ட தலைவன் உன்னிடம் என்ன இருக்கிறது என்று ஏளனமாய் கேட்டான். சட்டையின் வலப்பக்கத்தில் நாற்பது காசுகள் வைத்து தைக்கப்பட்டிருப்பதைச் சிறுவன் செப்பினான். ஒப்புக்கொள்ள மறுத்து ஓங்கிய கோபம் கொப்பளிக்க சிறுவனின் சட்டையை சோதித்த தலைவன் சிறுவன் சொன்னபடி நாற்பது பொற்காசுகள் இருப்பதைக் கண்டு வியந்து இல்லை என்று இயம்பி பொற்காசுகளைக் காப்பாற்றி கொள்ளாமல் சிறுவன் உண்மையை உரைத்த காரணத்தைக் கேட்டான். என் அன்னை எந்நிலையிலும் பொய் பேசாது உண்மையை உரைக்குமாறு அறிவுறுத்தினாள். தாய் சொல்லைத் தட்டாது உண்மையை உரைத்ததாக சிறுவன் செப்பினான். தாய் சொல்லைத் தட்டாத சிறுவனின் செம்மையை செவியேற்ற கொள்ளையர் தலைவன் வணிக குழுவிடம் கொள்ளையிட்ட பொருள்களைத் திருப்பி கொடுத்து விட்டு திருந்தி வாழ்வதாக உறுதி கூறிச் சென்றான். 

அன்னையால் பெற்ற நன்மைகளை எண்ணி அன்னைக்கு முன்னுரிமை கொடுத்து முதல் நன்றியைச் செலுத்தி நல்லன செய்வதோடு அடுத்து அவ்வாறே தந்தைக்கும் தக்க முறையில் மிக்கப் பணிந்து எக்கணமும் ஏற்பன செய்வோம். ஏக இறைவன் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com