நேர்மையானவர்களை கைவிடாத இறைவன்!

கிறிஸ்துவர்கள் கொண்டாடும் திருவிழாக்களில் ஈஸ்டர் பெருவிழா முக்கியமான ஒன்றாகும்.
நேர்மையானவர்களை கைவிடாத இறைவன்!

கிறிஸ்துவர்கள் கொண்டாடும் திருவிழாக்களில் ஈஸ்டர் பெருவிழா முக்கியமான ஒன்றாகும். ஈஸ்டருக்கு முந்தைய நாற்பது நாள்களை "தவக்காலம்' என்று கிறிஸ்துவர்கள் அழைக்கிறார்கள். விபூதி புதனோடு தொடங்கும் இந்நாள்கள் தவத்திலும் செபத்திலும் செலவழிக்கப்படுகிறது.

ஈஸ்டர் அல்லது உயிர்ப்புப் பெருவிழாவிற்கு முந்தைய வாரம்தான் புனிதவாரமாகும். புனிதவாரத்தின் வியாழன் "பெரிய வியாழன்' என்றும் வெள்ளிக்கிழமை "பெரிய வெள்ளி' என்றும் அழைக்கப்படுகிறது. அந்த வாரத்தின் இறுதி நாளான ஞாயிறன்றுதான் "ஈஸ்டர் பெருவிழா' கொண்டாடப்படுகிறது. 

பெரிய வெள்ளி இயேசு சிலுவையில் உயிர் துறந்த நாளாகும். மனிதரின் துயர் போக்க இறைவனே துன்புற்று சிலுவையில் உயிர்விட்டார். சிலுவைச் சாவுக்கு அன்றைய ஆளும் வர்க்கத்தினரால் தீர்வையிடப்பட்ட பின்னர் இயேசு சிலுவையை சுமந்து கொண்டு கல்வாரி எனப்படும் மலைக்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கு சிலுவையில் அறையப்பட்டு மரணத்துக்கு உட்படுத்தப்பட்டார். 

இயேசுவின் பாடுகளின் பதினான்கு நிலைகள் ஒவ்வொரு தவக்கால வெள்ளிக் கிழமையிலும் ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டின்போது தியானிக்கப்படுகின்றன. இது சிலுவைப்பாதை எனப்படும். புனித வெள்ளியன்று நடைபெறும் சிலுவைப் பாதைக்குப் பின் கோயிலில் மூன்று நாள்களுக்கு எந்தவொரு வழிபாடும் நடைபெறாது. அன்று நடைபெறும் சிலுவைப்பாதைக்குப்பின் இரவு பன்னிரண்டு மணி வரை ஆலயம் திறந்து வைக்கப்பட்டிருக்கும். மக்கள் குழுவினராகவோ, தனித்தனியாகவோ வந்து இயேசுவின் பாடுகளை நினைத்து தியானம் செய்வதில் ஈடுபடுவர். அதன்பிறகு கிறிஸ்து மூன்றுநாள் கல்லறையில்  வைக்கப்பட்டிருப்பதை நினைவுகூரும் விதமாக ஆலயத்தில் எந்தவொரு வழிபாடும் நடைபெறாது. 

கல்லறையில் வைக்கப்பட்ட இயேசு மூன்றாம்நாள் மாட்சிமையுடன் உயிர்பெற்று எழுந்தார். இந்த நிகழ்வுதான் ஈஸ்டர் எனப்படும் உயிர்ப்புப் பெருவிழா.

சனிக்கிழமை இரவு பன்னிரண்டு மணியளவில் ஆலயத்தில் மிகுந்த விமரிசையோடு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தீயசக்திகளை எதிர்த்து ஒளியாம் இறைவன் உயிர்த்தெழுந்தார் என்பதை நினைவூட்டும் விதமாக நெருப்பு, தண்ணீர் ஆகியவை மந்திரிக்கப் படுகின்றன. சூதும் வாதும் வெற்றி பெறுவது போன்று தோன்றினாலும் இறுதியில் ஒளிப்பிழம்பான இறைவனுக்குத்தான் இறுதி வெற்றி. 

நல்லோர்கள் படும் துன்பமும் வேதனையும் ஒருபோதும் வீண் போவதில்லை. நல்லோர் மேலும் தீயோர் மேலும் ஒருங்கே மழையை பொழிவிக்கும். இறைவன் நேர்மையாளர்களை என்றுமே கைவிடுவதில்லை என்பதே ஈஸ்டர் பெருநாள் நமக்கு உணர்த்தும் உண்மை.
- பிலோமினா சத்தியநாதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com