மன அமைதி தரும் இடையாத்தூர் தான்தோன்றீஸ்வரர்!

இடையாத்தூர் என்ற கிராமம் தமிழர் வாழ்வியல் கூறும் அகநானூறு, புறநானூறில் "இடையாறு'’ என்று குறிப்பிடப்படுகிறது.
மன அமைதி தரும் இடையாத்தூர் தான்தோன்றீஸ்வரர்!

இடையாத்தூர் என்ற கிராமம் தமிழர் வாழ்வியல் கூறும் அகநானூறு, புறநானூறில் "இடையாறு'’ என்று குறிப்பிடப்படுகிறது. இக்கிராமத்தில் சைவ, வைணவ திருக்கோயில்களுடன் அய்யனார் கோயிலும் உள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளின்படி இத்திருக்கோயில் முதலாம் பராந்தகன் காலத்திற்கு முந்தையது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாலயத்தின் முன்புள்ள மண்டபம் விஜயநகர கட்டடக்கலை பாணியில் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் படைத் தலைவர்கள் இறைவனை வணங்கும் கோலத்தில் பல சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயிலில் ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விட்டதால் பின்னர், கிரானைட் கல் கொண்டு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள மூலவர் சுயம்புவாக தோன்றியவர் ஆவார். இதனால் இக்கோயில் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் என்று அழைக்கப்படுகிறது. அம்மன் உலக மக்கள் அனைவரையும் ரட்சிப்பவள் என்ற பொருளில் அகிலாண்டேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள்.

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 21 ஆவது ஆட்சிக் காலத்திய கல்வெட்டு ஒன்றில், மறவர்கள் மற்றும் மதுராந்தகபுரத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்குச் செலுத்த வேண்டிய வரியை வசூலிப்பவர்களின் கடுமையான நடவடிக்கைகளுக்குப் பிறகு தங்களது நிலத்தை 8000 பொற்காசுகளுக்கு கோயிலுக்கு விற்பனை செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது. மரவாமதுரை என்ற இடத்தில் பாணர்களை போரில் வெற்றி கண்டதற்காக திருக்கொடுங்குன்ற முடையான் நாடாள்வான், பூர்ணபோகாரி சாமந்தன் ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டது குறித்தும் குறிப்புகள் காணப்படுகின்றன. இன்னொரு கல்வெட்டில் ஒரு பூந்தோட்டத்தை விளை நிலமாக்கி அதை கோயிலுக்கு கொடுத்ததற்காக பாணர் தலைவனை பாராட்டி ஒரு புகழ் மாலையும் காணப்படுகிறது.

இடையாத்தூர் நெல் விளைச்சலுக்கு பேர் போனது என்றும் இங்கு கரும்பு பயிரிடப்பட்டு இருந்தது என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவ்வாலயத்திற்கு வந்து வழிபட்டு ஒரு மணிநேரம் உட்கார்ந்து சென்றால் மனது அமைதி பெறும் என்பது
ஐதீகம்.

வழித்தடம்: புதுக்கோட்டையில் இருந்து சடையம்பட்டி வழியாக இடையாத்தூர் சென்றடையலாம்.
தொடர்புக்கு-94433 02806.
- பொ.ஜெயச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com