அவதாரம்! குறுந்தொடர் 11

எம்பெருமானார் தரிசனம் என்னும் ஸ்ரீ வைணவத்தில் ராமானுஜரைக் காட்டிலும் வயதிலும் ஞானத்திலும் சீலத்திலும் ஒத்து நின்றவர் கூரேசர்
அவதாரம்! குறுந்தொடர் 11

கூரேச விஜயம்! ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு சிறப்பு தரிசனம்

எம்பெருமானார் தரிசனம் என்னும் ஸ்ரீ வைணவத்தில் ராமானுஜரைக் காட்டிலும் வயதிலும் ஞானத்திலும் சீலத்திலும் ஒத்து நின்றவர் கூரேசர் என்னும் கூரத்தாழ்வான் ஆகும். இவர் காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் யதிராஜரின் சீடர்களுள் தலை சிறந்தவர் என்றே மதிக்கப் பெற்றார்.

கூரேசர் செல்வந்தர். அவரது மனைவி ஆண்டாள் ஞானியுமாவாள். கூரேசர் தன் செல்வமனைத்தையும் அறவழியில் செலவிட்டு வந்தார்.

ஒருமுறை மனைவி ஆண்டாளோடு ஸ்ரீரங்கத்திற்குக் காட்டு வழியில் சென்றார். மனைவி ஆண்டாள் மெல்ல அஞ்சி பின்னால் நடந்து வந்தாள். கூரத்தாழ்வான் காரணம் கேட்க  "தாங்கள் விரும்பி அமுது அருந்தும் பொன்வட்டில் கையில் உள்ளதால் பயமாக உள்ளது'' என்றாள்.

"அடுத்த வேளைச்சோறு பற்றி நிச்சயம் இல்லாத வாழ்வில் பொன்வட்டில் எதற்கு?'' என்று  அதனை வாங்கி பக்கத்துப் புதரில் வீசியெறிய ஆண்டாளும் தயக்கம் விலகி விரைந்து ஸ்ரீரங்கம் சேர்ந்தனர். ராமானுஜர் துறவறம் கொண்டது அறிந்து மீண்டும் காஞ்சிபுரம் திரும்பி அவரின் சீடரானார். அனைத்திலும் பூரணத்துவம் பெற்றிருந்த ஆழ்வானைச் சீடனாகப் பெற்றதால் ராமானுஜருக்கு பலம் கூடியது.

கி.பி. 1056 ஆம் ஆண்டில் தாசரதி என்னும் முதலியாண்டான், கூரத்தாழ்வான் உடன்வர, ராமானுஜர் ஸ்ரீரங்கம் சென்று கோயில் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். திருமந்திரோபதேசம் பெறுவதற்காக திருக்கோஷ்டியூர் நம்பியை 18 ஆம் முறை சந்திக்கச் சென்றபோது, "தண்டும் பவித்திரமுமாகத் தாம் ஒருவரே வருவது' என்று உடையவருக்கு உத்திரவிட்டிருந்தார். கூரத்தாழ்வானையும் முதலியாண்டானையும் அழைத்துக் கொண்டு, திருக்கோஷ்டியூர் சென்று நம்பி திருவடிகளில் தண்டனிட்டார்.

"உம்மை ஒருவரை மட்டும் வரச் சொல்ல இவர்களை அழைத்து வருவானேன்?'' என்றார் நம்பி. "தேவரீர் தண்டும் பவித்திரமுமாக வரச் சொன்னீர்கள். முதலியாண்டான் எனக்குத்  த்ரிதண்டம், கூரத்தாழ்வான் என் பவித்திரம்'' எனக் கூறி நலம் தரும் சொல்லை உபதேசமாகப் பெற்றார்.   

ஸ்ரீரங்கத்தில் கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் எம்பெருமானாரை ஒருநாள் வணங்கி  சரமஸ்லோகத்தினை உபதேசிக்கக் கேட்டனர். "திருக்கோஷ்டியூர் நம்பி ஒரு வருடம் உங்களை சீடனாகக் கொண்டபின் உமக்கு உபதேசிக்கப் பணித்துள்ளார்'' என்றார்.

கூரத்தாழ்வான், எம்பெருமானார் திருவடிகளில் விழுந்து "நிலையற்ற இவ்வுடலை ஓராண்டு நிலைக்கும் என்று நம்ப முடியாது. ஓர் ஆண்டு தொண்டு செய்து உணர்வதற்குப்பதில் ஒரு மாத உபவாஸம் இருந்தால் போதும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனக்கு ஒரு மாத உபவாசம் அனுமதித்து கீதாசார்யன் உறுதி செய்து கூறிய இறுதிப் பொருளை உபதேசிக்க வேண்டும்'' என்று கேட்க ஒப்புக் கொண்டார் உடையவர். 

ஆளவந்தார் ஆசைகளில் ஒன்றான வியாஸரின் பிரம்ம சூத்ரத்துக்கு விசிஷ்டாத்வைத பாஷ்யம் (உரை) இயற்றும் பணிக்காக காஷ்மீரத்தில் சாரதா பீடத்தில் இருந்த பிரதியைப் பெறுவதற்கு உடையவர் கூரத்தாழ்வான் மற்றும் சீடர்களுடன் பயணமானார். ராமானுஜர்  ஸ்ரீநகர் அரசனிடம் பேசிய விதத்தில் மகிழ்ந்து போதாயன விருத்தி நூலை அவரிடம் தந்து சன்மானமளித்து அனுப்பி வைத்தான்.

வழியில் மாயாவாதப் பண்டிதர்கள் சிலர் அந்நூலைக் களவாடிச் சென்றுவிட்டனர்.  வருந்தினார் ராமானுஜர். ஆழ்வான், "கவலைவேண்டாம், நீங்கள் களைத்து உறங்கும் போதெல்லாம் அந்நூலை எடுத்து அடியேன் படித்து அதில் உள்ளதனைத்தும் மனதில் வைத்திருக்கிறேன்'' என்றார். ராமானுஜர் மகிழ்ந்து பாராட்டி ஸ்ரீரங்கம் திரும்பியதும் ஸ்ரீபாஷ்யம் எழுதத் தொடங்கினார். "நான் சொல்ல நீர் எழுதும். கருத்து சரியில்லையெனில் நீர் எழுத வேண்டாம்'' என்று உரை சொல்லிக் கொண்டிருக்க, ஆழ்வான் பட்டோலை ஏற்படுத்திக் கொண்டு வந்தார். எம்பெருமானார் பாஷ்யம் நல்லபடியாக எழுதப்பட்டு நிறைவேறி முடிந்தது.

சீடர் கூரத்தாழ்வான் எளிய வாழ்வை விரும்பியவர். அந்தணருக்கு உரிய உஞ்சவிருத்தி  செய்தே பசியாறியவர். ஒருநாள் பகல் முழுதும் அடைமழை.

ஆழ்வானால் வெளிச்செல்ல முடியவில்லை. அவரும் ஆண்டாளும் பட்டினி. வீட்டில் இருந்த ஒரு பழத்தை அமுது செய்வித்து பகவத் பிரசாதமாக உண்டனர்.

இரவு அரங்கன் கோயிலில் அரவணை மணி கேட்டதும் ஆண்டாள், ஆழ்வான் மீதிருந்த பற்றால் "அரங்கா, உன் பக்தர் இங்கு பட்டினி கிடக்கிறார். நீர் அங்கே அமுது செய்கிறீர்!'' என்றெண்ணினான்.

ஆண்டாள் குறையுணர்ந்த அரங்கன், கோயிலில் உத்தமநம்பி என்பவரை அழைத்து, "ஆழ்வான் பட்டினிதீர உடனே பிரசாதம் அனுப்பிவையும்'' என்று கூற, அரவணைப்பிரசாதம் தாங்கிச்  சென்றனர் கோயிலார்.

கூரேசரும் பெரிய நம்பியும் சோழமன்னனின் ஆணையால் தங்கள் கண்களை இழந்திருந்தனர். சிறிது காலம் சென்றது. ஆழ்வான் உடல்நலம் தேறி, அரங்கனை தரிசனம் செய்ய கோயிலுக்குச் சென்றார். அங்கு, ராமானுஜரைச் சேர்ந்தோர் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்பது அரசகட்டளை. ஆனாலும் ஆழ்வானின் நற்பண்புக்காக அனுமதித்தான் காவலாளி. ஆழ்வானோ, "ராமானுஜ உறவை அறுத்து எனக்கு அரங்கன் சேவை தேவையில்லை'' என்று சொல்லித் திரும்பிவிட்டார். கண்ணிழந்த ஆழ்வான் திருமாலிருஞ்சோலை சென்று தங்கி பின்னர் ஸ்ரீரங்கம் எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் திரும்பிய எம்பெருமானார் ஆழ்வானிடம் "என்பாவம் உம்மை நலிவித்தது'' என்றார். "எம்பெருமானார் திருவடி சம்பந்தம் பெற்றவர்களுக்கும் பாபத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேவரீர் அளித்துள்ள ஞானக்கண்கள் எனக்கிருக்க ஊனக்கண்ணால் பயனில்லை போகட்டும்'' என்றார் ஆழ்வான்.

உடையவர் தன் ஆராதனைப் பெருமாள் முன்போய் நின்று, "இழந்த கண்ணைத் தருமாறு கேளும்'' என்றார். ஆழ்வான் அப்போது "வரதராஜஸ்தவம்' என்னும் அற்புதமான ஸ்தோத்திரத்தை செய்ய, காஞ்சிப்பேரருளாளன் துதி கேட்டு மகிழ்ந்து "வேண்டும் வரம் என்ன?'' என்றான். அந்நேரம் உடையவர் சிறிதும் கவனியாமலிருக்க, "அர்ச்சகர் வாயிலாக நான் பெற்ற பேறு அமைச்சன் நாலூரானும் பெறவேணும்'' என்றார் ஆழ்வான். அதிசயித்தார் உடையவர்.

எம்பெருமானார் தரிசனத்திற்காக காஷாயம் கட்டிய கூரத்தாழ்வானும் வெள்ளுடை அணிந்த ராமானுரும் உருமாறிச் சென்ற நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் உற்சவத்தில் 6 ஆம் நாள் கூரேச விஜயம் என்ற சிறப்பு நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இவ்வாண்டு 27-04-2017 அன்று மாலை நடைபெற உள்ளது.

நல்ல குருவின் தொடர்பால் சீடன் உயர்வான். ஆனால் ஆழ்வான் போன்ற உத்தம சீடர்களால் ஆசார்யர்களும் உயர்வு பெறுகின்றார் என்பதை ஆழ்வான் வரலாறு சொல்லுகிறது.   "கூரேச விஜயம்' மனிதர் உய்ய தரிசனத்துக்காகத் தன் தரிசனத்தை (கண்ணை) இழந்த ஆழ்வானை குருவோடு தரிசனம் செய்வது "அருள் நல்கும் திருநாள்' ஆகும்.
- இரா. இரகுநாதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com