சிவனருள் செம்பியன் மாதேவி!

தில்லைக் கூத்தன்பால் எல்லையில்லா பக்தி பூண்டவர் ராஜகேசரி என்னும் கண்டராதித்த சோழர். இவர், பரகேசரி முதற் பராந்தக சோழரின் திருமகன்.
சிவனருள் செம்பியன் மாதேவி!

தில்லைக் கூத்தன்பால் எல்லையில்லா பக்தி பூண்டவர் ராஜகேசரி என்னும் கண்டராதித்த சோழர். இவர், பரகேசரி முதற் பராந்தக சோழரின் திருமகன்.

சைவத்திருமுறையில் திருவிசைப்பாவில் உள்ள "கோயிற்பதிகம்' இவர் பாடியதாகும். தில்லைப் பெருமானிடம் இவருக்குள்ள ஆராத காதலையும் அம்பலத்தாடி  தன் அடிமலரைக் கூட வேண்டும் என்னும் தீராத ஏக்கத்தையும் அப்பதிகம் எடுத்துரைக்கும். 

கண்டராதித்த தேவர் என்று கல்வெட்டுகள் இவரைக் குறிக்கின்றன. இவரது பட்டதரிசி செம்பியன் மாதேவியார். சேர மன்னர்களுள் ஒரு கிளையினரான மழவர் குடியில் பிறந்தவர். தம் கணவரைப்போல எல்லையற்ற சிவபக்தி உடையவர். தமது கணவர் மறைவுக்குப்பிறகு தாமும் உடன்கட்டை ஏறாமல் ஏறக்குறைய 90 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தவர். தம் வாழ்நாள் எல்லாம் சிவனடி மறவாச் சிந்தையராய், தெய்வத் திருப்பணி செய்தவர். சோழர் வரலாற்று ஏட்டிலே தனிப்புகழுடன் திகழ்ந்தவர். மூன்று தலைமுறை சோழ இளவரசர்களை நன்கு வளர்த்தவர். மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு சிவபக்தியை ஊட்டி தஞ்சை பெருங்கோயில் உருவாகக் காரணமாக இருந்தவர். சிவப்பணிக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்தமையால் இவர், "மாதேவடிகள்' என்று பாராட்டப் பெற்றிருக்கிறார். இவரது மகன் பரகேசரி உத்தமசோழர். 

அம்மாதேவியார் காலத்தில் சோழப்பேரரசில் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து அரசாண்ட மன்னர்கள், முதற்பராந்தகச் சோழர், முதற்கண்டராதித்தர், அரிஞ்சயர், சுந்தரசோழர், உத்தமசோழர், முதலாம் ராஜராஜ சோழர் ஆகியோர் ஆவர். அப்பெருவேந்தர்கள் இவ்வரசியார் புரிந்த அறச் செயல்களுக்கு வளம் உவந்து துணை நின்றமை குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் பாடல் பெற்ற தலங்களில் விளங்கிய பத்து செங்கற் கோயில்களைக் கருங்கற் கோயிலாகக் கட்டிய மாபெரும் சிவப்பணி செய்தவர் இம்மாதேவியார். அவை, திருநல்லம் (கோனேரி ராஜபுரம்) திருமுதுகுன்றம், திருவாரூர் அறநெறி, திருமணஞ்சேரி, தென்குரங்காடு துறை, திருக்கோடிக்கா, திருத்துரித்தி (குத்தாலம்) திருவக்கரை, திருச்சேலூர், ஆனாங்கூர் ஆகியவையாகும். கோனேரி ராஜபுரம் கோயிலைத் தமது கணவர், கண்டராதித்த சோழர் பெயரால் அமைத்து அதில் அவ்வரசர் சிவலிங்க வழிபாடு செய்வதாகத் திருவுருவம் ஒன்று வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர்- நாகப்பட்டினம் வழியில் கீழ்வேளூர் அருகில் தேவூர் என்ற திருத்தலத்திற்கு 6 கி.மீ. தொலைவில் "செம்பியன் மாதேவி' என்ற இவரது பெயரில் ஓர் ஊர் அமைந்திருப்பது பெருமைக்குரியதாகும். இங்குள்ள "ஸ்ரீ கயிலாயம்' திருக்கோயில் சுமார் எட்டாயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. செம்பியன் மாதேவியார் கற்றளியாகக் கட்டிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயிலுக்கு எதிரில் "சதுர்வேத புஷ்கரணி' என்னும் மிகப்பெரிய திருக்குளம் உள்ளது. முதற்பிரகார வாயிலில் மூன்று நிலைக் கோபுரம் அமைந்துள்ளது. மூலவர் கயிலாயநாதர், பெரிய லிங்கத் திருமேனியுடையவர். அவருக்கு வலது புறம் சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது. கோஷ்டத்தில் அற்புதமான சிற்பங்கள் அமைந்து அழகு சேர்க்கின்றன. மேலும் சண்டேசர், சூரியன், வயிரவர், காசிவிஸ்வநாதர், நடராஜர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. 

இரண்டாம் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய திருவாயிலினுள் தனியாக அம்பிகையின் திருக்கோயில் பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. அம்பிகை பெரிய நாயகி (பிரஹன் நாயகி) என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சுப்பிரமணியருக்கு ஒரு சிற்றாலயமும் நந்திதேவருக்கு மண்டபமும் உள்ளது. 

செம்பியன் மாதேவியாரின் பிறந்தநாளான சித்திரை மாதம் கேட்டை நட்சத்திர நாளில் திருக்கயிலாயமுடையாருக்கு ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடுகள் செய்யப் பெற்றிருந்ததை உத்தமசோழன் காலத்து கல்வெட்டு குறிப்பிடுகிறது. மாதேவியாரின் ஏழு மருமகள்கள் தம் மாமியாரின் பிறந்தநாள் விழாவைச் சிறப்பாக நடத்தியுள்ளனர் என்பதும் தெரியவருகிறது. முதலாம் ராஜேந்திர சோழன் இவ்வம்மையாரது விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்துள்ளான். 

செம்பியன் மாதேவி கயிலாயநாதர் திருக்கோயில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்றதையடுத்து, 7.5.2017 அன்று மஹாகும்பாபிஷேகம் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
தொடர்புக்கு: 99408 35789.
- வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com