நதியில் தோன்றிய நவநீதன்!

அது கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி. வடபாரதத்தில் ஏற்பட்ட கலாச்சார மாறுதல்களால் ஜகத்குரு ஸ்ரீ பதரி சங்கராச்சாரியார் ஸ்ரீஸ்ரீசத்ய தீர்த்த மஹா ஸ்வாமிகள் தெற்கு நோக்கி எழுந்தருள்கிறார்கள்.
நதியில் தோன்றிய நவநீதன்!

அது கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி. வடபாரதத்தில் ஏற்பட்ட கலாச்சார மாறுதல்களால் ஜகத்குரு ஸ்ரீ பதரி சங்கராச்சாரியார் ஸ்ரீஸ்ரீசத்ய தீர்த்த மஹா ஸ்வாமிகள் தெற்கு நோக்கி எழுந்தருள்கிறார்கள். தூங்கா நதிதீரம்.. ஸ்ரீ சகடமஹரிஷி என்னும் தபோசீலர் இருந்து தவமியற்றிய திருத்தலம். 

பிரம்மாண்ட புராணத்தில் தர்மருக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இத்தலத்தின் பெருமையையும், இங்கு யாகம் செய்தால் கோடி மடங்கு பலன் என்பதனையும் அருளிச் செய்த வரலாற்றுப் பெருமை நிறைந்த தலம். இங்கு மிக அழகாக ஓடுகின்ற தூங்கா நதியில் ஸ்ரீ சுவாமிகள் இறங்கி தீர்த்தம் ஆடுகின்றார்கள்.

நதியில் மூழ்கி எழும்பொழுது ஒரு கோபால விக்ரஹம் கையில் கிடைத்தது. அந்த திவ்ய விக்ரஹத்தினை அத்தலத்திலேயே பிரதிஷ்டை செய்து ஜகத்குரு ஸ்ரீபதரி சங்கராச்சார்ய ஸ்ரீ திக்ஷத்ர சகடபுர ஸ்ரீ வித்யா பீடத்தினை அங்கு நிறுவுகின்றார்கள். 

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய அத்வைத நெறியினைப் பரவச் செய்திட குரு பரம்பரையைத் தொடரச் செய்து அருளினார்கள். விஜய நகரப் பேரரசர்கள் இப்பீடத்தின் மஹான்களை வணங்கி மான்யங்கள் வழங்கியதற்கான வரலாற்றுச் செப்பேடுகள் இன்றும் உள்ளன.

அதுவே நாம் இன்று காணும் கர்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள அபூர்வ முக்தி திக்ஷத்ரம் ஸ்ரீ சகடபுரம் ஆகும். இங்கு, நதியில் கிடைத்த ஸ்ரீ சந்தான வேணுகோபால கிருஷ்ணரே பிரதான தெய்வமாக மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் வலக்கரத்தில் வெண்ணெயும், இடக்கரத்தில் புல்லாங்குழலும் தாங்கிய பாலகனாக குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணனை நினைவுபடுத்தும் விதமாக தலையில் மயிற்பீலியுடன் புன்சிரிப்புடன் காட்சி தந்து அருளுகின்றார்.

ஸ்ரீ கிருஷ்ண சந்நிதிக்கு வலப்புறம் ஸ்ரீ லஷ்மிநரசிம்மர் சந்நிதியும், இடப்புறம் ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருச்சந்நிதியும் அருள் பெருக்குகின்றன. அக்ஷய திருதியை முன்னிட்டு பத்து நாட்கள் பிரம்மோத்ஸவமும், அக்ஷய திருதியை புனித நாளில் பிரம்ம ரதோத்ஸவமும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. 

அஷ்டமித் திருநாளில் இங்கு வந்து, பகவான் ஸ்ரீ ஸந்தான வேணுகோபாலருக்கு வெண்ணெய் நிவேதனம் செய்து வழிபடும் தம்பதியர்க்கு  குழந்தைச் செல்வம் கட்டாயம் கிடைக்கின்றது என்பது வரலாற்று உண்மை.

இத்திருக்கோயிலை தற்போதைய முப்பத்து மூன்றாவது பீடாதிபதி ஸ்ரீ வித்யாவிநவ ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள் தனது தபோ பலத்தால் புனருத்தாரணம் செய்து அருளியிருக்கின்றார்கள்.

பிரம்மாண்டமான ராஜகோபுரம், முக்தி மண்டபம், கீர்த்தி மண்டபத்தினைக் கடந்து உள்ளே சென்றால் அருமையான கருங்கல்லால் நிர்மாணிக்கப்பெற்ற மூன்று சந்நிதிகளில் நடுநாயகமாக ஸ்ரீ ஸந்தான வேணுகோபால கிருஷ்ணர் அருள் பாலிக்கின்றார். கிழக்கு நோக்கி ஸ்ரீ மடமும், தொடர்ந்து பூர்வ ஆசார்யார்களின் அதிஷ்டானமும், அழகான தூங்காநதியும் அருமையாக மனதிற்கு இனிமையான ரம்யமான சூழலைத் தந்து ஆனந்தத்தைத் தருகின்றன. 

கர்நாடக தேசத்தின் மிகக் குளிர்ப் பகுதியான  "ஆகும்பே' க்கு - மிக அருகில் இருப்பதால் எந்நேரமும் குளிர்ச்சியாகவே இருக்கும். ஸ்ரீ சகடபுர மஹா ஸ்வாமிகள் என பக்தர்களால் அன்புடன் அழைக்கப்பெறும் ஸ்ரீ ஆசார்ய மஹா ஸ்வாமிகள் சாதுர்மாஸ்ய விரதத்தை மும்பை செம்பூர் சங்கராலயத்தில் தற்போது மேற்கொண்டுள்ளார்கள்.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நன்நாளில் இரவு பன்னிரண்டு மணிக்கு பகவான் ஸ்ரீ சந்தான வேணுகோபால கிருஷ்ணருக்கு ஸ்ரீ ஆசார்ய மஹாஸ்வாமிகளின் திருக்கரங்களால் சிறப்பு பூஜைகள் நிகழ்த்தப் பெறும். 

மண்டபம் முழுவதும் அருமையான பலகார இனிப்பு வகைகள், வெண்ணெய், தயிர் நிரம்பி வழிய பகவான் பிறந்த நேரத்தில் நடைபெறும் தீபாராதனையைக் காண கண்கோடி வேண்டும். பூஜையின் நிறைவில் தமிழ் மருந்துச்சாமான்கள் கொண்ட அபூர்வ மருந்துக் கஷாயத்தை ஸ்ரீ சுவாமிகள் திருக்கரங்களால் சுடச்சுட பக்தர்களுக்கு வழங்கியருள்வது பூஜையின் சிறப்பாகும்.

ஸ்ரீ மடத்தின் கிளையான சென்னை கிழக்குத் தாம்பரம்  ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயிலிலும் இந்த கிருஷ்ண ஜெயந்தி பூஜை இரவில் நடைபெற்று கஷாய தீர்த்தப் பிரசாதத்தை பட்டர்கள் வழங்குவார்கள்.

அவதார புருஷராக விளங்கும் ஸ்ரீ சகடபுர ஆசார்ய மஹா ஸ்வாமிகள் ஒரே நிலையில் இருந்து பத்து மணி நேரத்திற்கும் மேலாக ஸ்ரீ சக்ரார்ச்சனை செய்வார்கள். ஐயாயிரம் முறைக்கு மேலாக இந்த பூஜையினைச் செய்து "ஸ்ரீ வித்யா சாதக முகுடமணி' என்ற கீர்த்தியினைப் பெற்று அருள்பவர்கள்.

வருகின்ற ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தித் திருநாளில் (ஆகஸ்ட்  14) கர்நாடக மாநிலம் ஸ்ரீ திக்ஷத்ர சகடபுரத்திலும், மும்பையிலும், சென்னை கிழக்குத் தாம்பரத்திலுள்ள ஸ்ரீ மடத்திலும் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் அவரவர் சூழலுக்கேற்பக் கலந்து கொண்டு ஸ்ரீ சந்தான வேணுகோபால கிருஷ்ணரின் திருவருளையும், ஸ்ரீ ஆசார்ய மஹாஸ்வாமிகளின் குருவருளையும் ஒருங்கே பெறும்பேற்றினைப் பெறுவோம்.
தொடர்புக்கு: சென்னை:  044 - 22397900, மும்பை: 022 - 25250491,  திக்ஷத்ரம் சகடபுரம்: 08265 - 244005.
- இலக்கியமேகம் ந. ஸ்ரீனிவாஸன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com