புன்னைநல்லூர் புனிதவதி!

தஞ்சாவூர் அருகேயுள்ள புன்னைநல்லூரில் புற்றுவடிவில் மாரியம்மன் அருள்பாலித்து வருகிறாள்.  சோழமன்னர்கள் தங்களது வெற்றித் தெய்வமாக காளியை வழிபட்டு வந்தார்கள்.
புன்னைநல்லூர் புனிதவதி!

தஞ்சாவூர் அருகேயுள்ள புன்னைநல்லூரில் புற்றுவடிவில் மாரியம்மன் அருள்பாலித்து வருகிறாள்.  சோழமன்னர்கள் தங்களது வெற்றித் தெய்வமாக காளியை வழிபட்டு வந்தார்கள்.  இவர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டு திசைகளிலும், அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தார்கள்.  இதில், கிழக்கு பக்கம் அமைக்கப்பட்ட சக்தியே "புன்னைநல்லூர் மாரியம்மன்' என சோழசம்பு நூல் கூறுகிறது.

1680-இல் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா திருத்தல யாத்திரை செய்யும் போது, சமயபுரத்தில் தங்கினார்.  அன்றிரவு அம்பிகை அரசரின் கனவில் தோன்றி, ஒரு புன்னைக் காட்டில் புற்றுவடிவில் தான் இருப்பதாகவும், தன்னை வழிபடும்படியும் கூறி மறைந்தாள்.  அரசரும், அவள் குறிப்பிட்ட இடம் வந்து புற்றுவடிவில் இருந்த அம்மனைக் கண்டு, மேற்கூரையும் அமைத்தார்.

அத்துடன் இத்தலத்திற்கு "புன்னைநல்லூர்' எனப் பெயரிட்டு, அந்த கிராமம் முழுவதையும் கோயிலுக்கு தானமாக வழங்கினார்.  மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகள் புற்றுவடிவில் இருந்த அம்மனுக்கு மாரியம்மன் வடிவத்தைக் கொடுத்து ஸ்ரீசக்ரமும் பிரதிஷ்டை செய்தார்.    

பின்பு பல்வேறு காலகட்டங்களில் விரிவு படுத்துதல் நடைபெற்றுள்ளது.   மூலவர் புற்று மண்ணால் ஆனதால், அபிஷேகம் கிடையாது.  அதற்குப் பதிலாக தைலக்காப்பு சாத்தப்படுகிறது.  மூலவர் அருகிலுள்ள விஷ்ணு துர்க்கைக்கும், உற்சவ அம்மனுக்கும் அபிஷேகம் உண்டு.  ஐந்து வருடத்திற்கு ஒருமுறை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அம்பாளுக்கு தைலக்காப்பு செய்யப்படும்.   அப்போது, அம்மனை ஒரு வெண்திரையில் வரைந்து அதில் ஆவாஹனம் செய்து, ஒரு மண்டல காலம் (48 நாட்கள்) பூஜை செய்யப்படுகிறது.  தைலக்காப்பில் இருக்கும் காலத்தில் உஷ்ணத்தால் பாதிக்காமல் இருக்க இளநீர், தயிர் நைவேத்யம் செய்யப்படுகிறது.  அத்துடன் மூலஸ்தானத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள உள்தொட்டி, வெளித்தொட்டி இரண்டிலும் தண்ணீர் நிரப்பி வைக்கப்படுகிறது.  கோடையில் அம்மனின் முகத்திலும், தலையிலும் முத்து முத்தாக வியர்வை தோன்றி மறைவதை இப்போதும் காண முடிவது கலியுக அதிசயம்.  இதனால் இவளை முத்து மாரியம்மன்' என்றும் சொல்வர்.

அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மூலஸ்தானத்தில் உள்ள உள் தொட்டி, வெளிதொட்டிகளில் நீர் நிரப்பி அம்மனை வழிபாடு செய்கின்றனர். கட்டி, பரு உள்ளவர்கள் இங்குள்ள குளத்தில் வெல்லம் வாங்கி போடுகிறார்கள்.

கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், வியாபாரச் செழிப்பு வேண்டுபவர்கள் ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனை வழிபடுகிறார்கள்.  காலை ஆறு மணி முதல் தொடர்ந்து இக்கோயில் திறந்திருக்கும். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில்  இவ்வாண்டு, ஆவணி பெருந்திருவிழா ஆகஸ்ட் 11 இல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.  முக்கியமான திருவிழா நாள்கள்: ஆகஸ்ட் 13 - முத்துப்பந்தல், செப்டம்பர் 10 - திருத்தேர், செப்டம்பர் 17 - தெப்போற்சவம் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு : 04362  267740.
- கடம்பூர் விஜயன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com