வேண்டுபவை அருளும் நித்யகல்யாணி!

தசரதருக்கு ராமன் மகனாகப் பிறக்க காரணமாய் இருந்தத் தலம் என்று பெருமை கடையம் என்று அறியப்படும் இத்தலத்திற்கு உண்டு.
வேண்டுபவை அருளும் நித்யகல்யாணி!

தசரதருக்கு ராமன் மகனாகப் பிறக்க காரணமாய் இருந்தத் தலம் என்று பெருமை கடையம் என்று அறியப்படும் இத்தலத்திற்கு உண்டு. ஸ்ரவணன் என்பவன் குளத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு இருக்கும் போது ஏற்பட்ட சப்தத்தில் மான் தண்ணீர் குடிக்கிறது என்று எண்ணி வேட்டைக்குச் சென்ற தசரதர் அம்பு எய்ய, அது ஸ்ரவணன் மீது பாய்ந்து அவன் இறந்து விடுகிறான். இறக்கும் தருணம் அவன் தசரதரிடம் தன் தாய் தந்தையருக்கு குடிக்க தண்ணீர் எடுக்க வந்ததைக் கூறி, அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும்படி கூறிவிட்டு இறக்கிறான். அவன் பெற்றோருக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு தசரதர் அவர்களிடம் உண்மையைக் கூறுகிறார். மகனை இழந்த அவர்கள், ""எங்களைப் போல நீயும் புத்திர சோகம்  அனுபவிப்பாய்'' என சாபம் கொடுத்தனர். 

தனக்கு புத்திர பாக்கியம் இல்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த தசரதருக்கு, புத்திர சோகம் ஏற்படும் என்ற இந்த சாபத்தில் தனக்கு புத்திரன் பிறப்பான் என்று செய்தியும் உள்ளடங்கி இருந்ததால் ஆனந்தப்பட்டார். ராமாயணத்தில் நிகழ்ந்ததாக கருதப்படும் இச்சம்பவம் நிகழ்ந்த தலம்  கடையம் என்று நம்பப்படுகிறது. கோயில் நுழைவாயிலில் உள்ள பெரிய மரக்கதவில் ராமாயணம் சம்பந்தப்பட்ட மரசிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 

பிரம்மா சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் புரிந்தார். அவர் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் பிரம்மா முன் தோன்றி ஒரு வில்வபழத்தைக் கொடுத்து மறைந்தார். பிரம்மா அதை மூன்றாக உடைத்து ஒன்றை வடக்கே கைலாய மலையிலும், இன்னொன்றை பாரதத்தின் நடுவிலுள்ள மேருமலையிலும், மற்றொன்றை தென்பொதிகை சாரலிலுள்ள துவாத சாந்தவனத்திலும் நட்டார். அந்த துவாத சாந்த வனப் பகுதிதான் இன்றைய கடையம். தேவர்கள் நீர் பாய்ச்சி இந்த மரத்தை வளர்த்தனர். இங்குள்ள வில்வ வனத்தில் இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் அவர் "வில்வவனநாதர்' எனப்பட்டார். 

தற்போது கோயிலுக்குள் உள்ள  வில்வமரத்தில் எப்போதாவதுதான் காய் காய்க்கும். இதை எடுத்து உடைத்தால் உள்ளே சதைப்பகுதி சிவலிங்க பாணம் உருவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் சிலருக்கு இந்தக் காய் கிடைத்துள்ளது. அவற்றை அவர்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர்.

சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்களை அழிக்க அன்னை பார்வதி அவதாரம் எடுத்து அவர்களை அழித்தார். அச்சமயம், பார்வதி தேவியின் பொன்மேனி கருமேனியாகிவிட, இவ்விடத்தில் அன்னை கடும் தவம் செய்தார். பிரம்மா அவர் முன் தோன்றி அன்னையின் மேனியை பொன் நிறமாக்கி அன்னைக்கு "நித்யகல்யாணி' என்ற பெயரையும் கொடுத்து அனுக்கிரகம் செய்தார்.

இத்தலத்து அம்பாள் நித்யகல்யாணி மிகுந்த உக்கிர தேவதையாக கிழக்கு நோக்கிய சந்நிதியில் இருந்தாள். இவளுக்கு பூஜை செய்வதென்றால், சற்றும் விதிமுறைகள் தவறாமல் செய்ய  வேண்டியிருந்தது. இதில் சிறு கோளாறு  ஏற்பட்டாலும் பூஜைக்குச் சென்ற அர்ச்சகர்கள் இறந்து விடுவார்கள். இதனால், கோயில் பக்கமே யாரும் செல்ல அஞ்சினர். 

பிற்காலத்தில், பல யோசனைகளுக்குப் பிறகு தெற்கு நோக்கியிருந்த ஒரு சந்நிதியில் அம்பாள் சிலை வைக்கப்பட்டது. அம்பாளின் சிலையில் இருந்த 16 கலைகளில், 15 கலைகளைப் பிரித்து ஒரு பீடத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டது. இந்த பீடம், "தரணி பீடம்'  என்றழைக்கப்படுகிறது. மீதி உள்ள ஒரு கலையுடன் சாந்ததேவியாக அம்பாளுக்கு பூஜைகள் துவங்கின. 

மகாகவி பாரதியார் கடையத்தில் வசித்த செல்லம்மாளை திருமணம் செய்து கொண்டவர். இவ்வூரில் தன் வாழ்நாளில் சில வருடங்கள் அவர் தங்கியிருந்தார். அப்போது வில்வவனநாதசுவாமி கோயிலுக்கு வந்து வில்வவனநாதர் மற்றும் நித்யகல்யாணி அம்பாள் மீது பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் எழுதிய நவராத்திரி பாடலில்,  "உஜ்ஜெயினீ நித்ய கல்யாணீ ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி!' என்று பாடினார். கோயில் முன்பு உள்ள வட்டப்பாறையில் அமர்ந்து தான் "காணிநிலம் வேண்டும் பராசக்தி! காணி நிலம் வேண்டும்!" என்ற புகழ் பெற்ற பாடலை அவர் பாடினார்.

கோயில் அமைப்பு: ஆலயத்திற்கு ராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயிலுடன் இரண்டு பிரகாரங்களைக் கொண்ட ஆலயம். இவ்வாலயத்தின் வெளிப் பிரகாரத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் படி சந்நிதிகள் ஏதுமில்லை. ஆலயம் புதுப் பொலிவுடன் காணப்படுகிறது. இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் இறைவன் வில்வாரண்யேஸ்வரர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கருவறைக்கு எதிரே பலிபீடம், நந்தி மற்றும் கொடிமரம் உள்ளன. கருவறை சுற்றுப் பிராகாரத்தில் 63 மூவர், விநாயகர், பைரவர், வள்ளி தெய்வானையுடன் முருகர், நவக்கிரக சந்நிதி, நடராஜ சபை ஆகியவை உள்ளன. தெற்குச் சுற்றில் தரணிபீடம் உள்ளது. 

அம்பாள் நித்யகல்யாணி சந்நிதியும் இறைவன் சந்நிதிக்கு அடுத்து கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சாந்த சொரூபியாக விளங்கும் நித்யகல்யாணி புத்திர பாக்கியத்தை கொடுத்து அருளும் தெய்வமாகவும்  பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றி வைக்கும் தெய்வமாகவும் விளங்குகிறாள். இத்தலத்தை சுற்றி உள்ள ஊர்களில் வாழும் பலருக்கு நித்யகல்யாணி குலதெய்வமாக விளங்குவதால் இத்தலம் ஒரு சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. தென்காசி - அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் தென்காசியில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் கடையம் உள்ளது. 
- என். எஸ். நாராயணசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com