காவிரி புஷ்கரம்!

காவிரி புஷ்கரத் திருவிழா, 12-09-2017  முதல்  24-09-2017 முடிய காவிரி நதிக்கரையில் உள்ள புண்ணிய தலங்களில் நடைபெற உள்ளது.
காவிரி புஷ்கரம்!

காவிரி புஷ்கரத் திருவிழா, 12-09-2017  முதல்  24-09-2017 முடிய காவிரி நதிக்கரையில் உள்ள புண்ணிய தலங்களில் நடைபெற உள்ளது.  புஷ்கரம் என்றால் என்ன? எங்கு, எப்பொழுது, எந்த இடத்தில் நடைபெறுகிறது என்ற தகவல்கள்,காவிரியைப் பற்றிய  வரலாறு, அதன் கரையில் அமைந்துள்ள தலங்கள்,  அதன் சிறப்புகள், காவிரி புஷ்கரம் பற்றியும் காண்போம்..

புஷ்கர் ஸ்தலம்:  எட்டு ஸ்வயம் வியக்த சேத்திரங்களில் ஒன்று  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள புஷ்கர ஏரி (புஷ்கர் சரோவர்) பிரம்மாவால் ஏற்படுத்தப் பட்டது. ராமாயணம், மகாபாரதம் முதலிய காவியங்களில் புஷ்கர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை "தீர்த்த  குரு',  "ஆதி குரு' என்பர்.

புஷ்கர  ஏரிக்கருகில் உள்ள கோயிலில் பிரம்மா மூலவராக எழுந்தருளியுள்ளார். எதிரில் வெள்ளியிலாலான ஆமை விக்ரஹமும் சரஸ்வதி கோயில், சாவித்திரி கோயில், விஷ்ணுவராஹர் கோயில், ஆப்தேஸ்வரர்  கோயில், வைகுண்டநாதர் கோயில் முதலிய கோயில்களும்  உள்ளன. இத்தலத்தில் புஷ்கர் மேளா கார்த்திகை மாதம் ஐந்து நாள்கள்  நடைபெற்று பெளர்ணமியில் நிறைவுபெறும். ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி புஷ்கரில் நீராடி வழிபடுவர். அவ்வமயம் நடைபெறும் ஒட்டகச் சந்தை மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

புஷ்கரம்: நதிகளுக்கே உரித்த விழாவாகும். பாரத நாட்டிலுள்ள கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்ரா, துங்கபத்ரா, சிந்து, பிராணஹிதா என்ற 12  நதிகளிலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. அக்கால அளவுக்கு புஷ்கரம் என்று பெயர். நமது பஞ்சாங்கங்களில் இது புஷ்கர காலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.   அவ்வமயம், மக்கள் நதிகளில் நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்தல், இயன்ற  தான தர்மங்கள் செய்தல், அருகிலுள்ள கோயில்களுக்கு சென்று இறைவழிபாடு செய்வர்.

ஒவ்வொரு ஆண்டுக்கும் தொடர்புடைய நதி எது என்பதை குரு (வியாழன், பிரஹஸ்பதி) அந்தக் காலகட்டத்தில், எந்த ராசியில் உள்ளார் என்பதைப் பொறுத்துக் கணக்கிடப்படும். அந்த ராசியில், எவ்வளவு காலம் குரு சஞ்சரிப்பாரோ அந்தக்கால அளவு வரை புஷ்கரம் நடைபெறும். 

அவ்வகையில்,  குருபகவான் மேஷ ராசியைக் கடக்கும்போது கங்கா புஷ்கரம் காசி, ஹரித்வார், ரிஷிகேஷ் மற்றும் கங்கைக் கரையிலுள்ள தீர்த்தங்களில் புஷ்கரம் நடைபெறும்.  குரு பகவான் ரிஷப ராசியைக் கடக்கும்போது நர்மதா புஷ்கரம், மத்தியபிரதேசத்தில் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள ஜோதிர்லிங்கத் தலமான ஓங்காரேஸ்வரர் என்ற இடத்தில் நடைபெறும். குரு பகவான் மிதுன ராசியைக் கடக்கும்போது சரஸ்வதி புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரத்தை குருசேத்திரத்திலும்; கேசவ பிரயாகையிலும்; குஜராத்தில் சோமநாதபுரத்திலும்; அலகாபாத் திரிவேணி சங்கமத்திலும்; ஆந்திரபிரதேசத்தில் காலேஸ்வரம் என்ற இடத்திலும்; மத்திய பிரதேசத்தில் பேடாகட் என்ற இடத்திலும் நடைபெறுவதைக் காணலாம்.

குருபகவான் கடக ராசியைக் கடக்கும்போது யமுனா புஷ்கரம், யமுனோத்ரி, ஹரித்வார், விருந்தாவன், மதுரா, திரிவேணி சங்கமத்திலும்; குரு பகவான் சிம்ம ராசியைக் கடக்கும்போது கோதாவரி புஷ்கரம், நாசிக் மாவட்டத்திலுள்ள திரியம்பகம், ஆந்திராவில்,கோதாவரி நதி தீர்த்தக் கரையிலும் மக்கள் வழிபாடுகள் செய்வர். 

குருபகவான் கன்யா ராசியைக் கடக்கும்போது கிருஷ்ணா புஷ்கரம் துளசி, காசரி, போகவதி, கும்பி, சாவித்ரி, உள்ளிட்ட ஐந்து நதிகளும் சேர்ந்து அழைக்கப்படும் பஞ்ச கங்கா நதி, கிருஷ்ணா நதியோடு சேருமிடமான பிரயாக் சங்கமத்திலும்; ஆந்திர பிரதேசத்தில் விஜயவாடாவிலும் நடைபெறும். குரு பகவான் துலா ராசியைக் கடக்கும்போது காவிரி புஷ்கரம் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.  

குருபகவான் விருச்சிக ராசியைக் கடக்கும்போது பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம், ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான பீமாசங்கரம்,  பண்டரிபுரம் (பீமா நதி சந்திரபாகா நதியென்று அழைக்கப்படுகிறது) தமிழ் நாட்டில் தாமிரபரணி நதிக்கரையிலுள்ள பாணதீர்த்தம், பாபநாசம், திருவிடைமருதூர், சிந்துபூந்துறை முதலிய இடங்களில் வழிபடுவர். குரு பகவான் தனுர் ராசியைக் கடக்கும்போது பிரம்மபுத்திரா புஷ்கரம், அஸ்ஸôம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதிக்கரையிலும்; குரு பகவான் மகர ராசியைக் கடக்கும்போது துங்கபத்ரா புஷ்கரம், இந்த நதிக் கரையிலுள்ள சிருங்கேரி,  மந்திராலயத்திலும்; குரு பகவான்,  கும்ப ராசியைக் கடக்கும்போது சிந்து புஷ்கரம், சிந்து நதி பாயும் ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப் முதலிய இடங்களிலும்; குரு பகவான் மீன ராசியைக் கடக்கும்போது ப்ராணஹிதா புஷ்கரம், தெலங்கானா மாநிலத்தில் அடிலாபாத்தில் காலேஸ்வரம் என பன்னிரண்டு நதிகளிலும் புஷ்கர விழா,  புனித நீராடல் நடைபெறுகின்றது.

காவிரி  புஷ்கரத்தைப் பற்றிய சிறப்புக் கட்டுரையை அடுத்த இதழில் காண்போம்.
- மருத்துவர் கைலாசம் சுப்ரமணியம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com