பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

ஒருவனுக்கு அகிம்சை கைவந்துவிட்டதென்றால், அவனை அணுகும் கொடிய பகைவனும் தன் பகையை மறந்துபோவான்.
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

* பசித்தவன் ஒருவன் உணவு வேண்டும்பொழுது, மிகுதியாகப் பணமும் பொருளும் பெற்றுள்ளவன், தன் உள்ளத்தைக் கல்லாக்கிக் கொண்டு இரப்பவனுக்கு எதுவும் அளிக்காமல் தான் உண்டால்;  அதில் அவனுக்கு இன்பம் ஏது?
- ரிக் வேதம் 

* ஒருவனுக்கு அகிம்சை கைவந்துவிட்டதென்றால், அவனை அணுகும் கொடிய பகைவனும் தன் பகையை மறந்துபோவான்.
- யோகதரிசனம்

* தீயவனின் சிரிப்பு இனிப்பாக இருக்கலாம்; இனிப்பு மிகையானால் அது நோயை விளைவிக்கும். நல்லவனின் கோபம் கசப்பாக இருக்கலாம்; கசப்பான மருந்துகள் நோயைத் தீர்க்கும்.
- கெளடில்ய அர்த்தசாஸ்திரம்

• எவர், பாவம் செய்யத் தூண்டும் மனநிலையை அடக்கி அதைப் புண்ணிய காரியங்களைச் செய்வதில் ஈடுபடுத்தியும்;  தீய சக்திகளை ஆத்ம வலிமையால் ஒடுக்கியும்; சிறிதும் அச்சமின்றி வாழ்கிறாரோ அவரே ஹிந்து ஆவார்.
- கலிகா புராணம்

• சத்தியத்தைப் புறக்கணிப்பதனாலும்  தீயோர் சேர்க்கையாலும் பொறாமை தோன்றுகிறது. நல்லோர், பெரியோர் இணக்கமும் அவர்களுக்குச் செய்யும் பணிவிடையும் அதை ஒழித்துவிடுகிறது.         

• கருமிகளை எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருப்பதால், நமக்கும் கருமித்தனம் வந்துவிடுகிறது.  தர்ம வழியில் செல்வோரின் தாராளமான போக்கைப் பார்த்துக்கொண்டே இருப்பதால், நமது கஞ்சத்தனம் விலகிவிடுகிறது.
- மகாபாரதம், சாந்திபர்வதம்

• கருநாகப்பாம்பின் விஷத்தைக் காட்டிலும் தீய உலக ஆசை என்பது மிகவும் கொடியது. விஷம் அதை உட்கொள்பவனை மட்டும்தான் கொல்லும். தீய உலக ஆசை என்பதோ அதைக் கண்ணால் பார்க்கிறவனைக்கூட அழித்துவிடும்.
- விவேகசூடாமணி

• பாவம் செய்யும் எண்ணம் மனதில் எழுந்ததுமே, அதை அந்த விநாடியே விலக்கிவிடுங்கள். மனதில் ஒரு தடவை பாவம் புகுந்துவிட்டால், அது அங்கிருந்து எளிதில் வெளியேறாது.

• எப்போதாவது நாம் பாவம் செய்துவிட்டோமானால், உடனே பகவானிடம் அழுது கெஞ்சி அதை மன்னிக்கும்படி பிரார்த்தனை செய்ய வேண்டும். 
- பாகவத ரகஸ்யம்

• ஈசுவர அர்ப்பணமாகச் செய்யப்பட்ட சிறிதும் போலியானதுமான கர்மாவும் வீணாவதில்லை. ஏனெனில் அந்த ஈசுவரன் ஜீவனுடைய ஆத்மாவும் நண்பனும் அல்லவா? ஆகையால் அந்தப் பகவானுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கர்மா வீணாவதே கிடையாது. மேலும், எப்படி மரத்தின் வேரில் விடும் ஜலம் அதனுடைய பெரிதும் சிறிதுமான கிளைகளுக்குப் போய்ச் சேருகிறதோ, அதே மாதிரி பகவான் விஷ்ணுவிற்குச் செய்யும் பூஜை எல்லோருக்கும் நமக்கும் நற்பயனையே விளைவிக்கும்.
-  பாகவதம்

• எவன் அதிகமான வாக்கியங்களால் குறைந்த விஷயத்தை விளக்குகிறானோ அவனே மூடன்.
- நீதி த்விஷஷ்டிகா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com