வெற்றித்தாய்!

ஊரிலும் மக்களிடமும் விசாரித்த வகையில் சிறிய தகவலாக திருவலிதாயத்திற்கு எதிரில் உள்ள அடர்ந்த வனப்பகுதி  சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு பாடிவீடாக இருந்தது
வெற்றித்தாய்!

ஊரிலும் மக்களிடமும் விசாரித்த வகையில் சிறிய தகவலாக திருவலிதாயத்திற்கு எதிரில் உள்ள அடர்ந்த வனப்பகுதி  சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு பாடிவீடாக இருந்தது எனவும் பாடிவீட்டில் படைவீரர்கள் வெற்றிவேண்டி அமைத்து வழிபட்ட வெற்றி தெய்வம் இன்றளவும் குறிப்பிட்ட நாள்களில்  பூஜை முதலியவை செய்யப்பட்டு வழிபடப்படுகின்றது எனவும் தகவலறிந்தான் வீர அரியராயன். அந்தப் போர் குறித்த தகவல்களை மெல்ல மெல்லத் திரட்டினான். 

காஞ்சியிலிருந்து ஆண்டு வந்த தொண்டைமான், பெரும்படையுடன் திக்விஜயம் மேற்கொண்டான். புழல்கோட்டையிலிருந்து கொண்டு, ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள்  எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத்தூண்களும் கொண்ட கோட்டை அமைத்துக் கொண்டு  பைரவ உபாசனை செய்து வந்தனர். உபாசனையால் பெற்ற பலன் கொண்டு நல்லாருக்கும் அல்லாருக்கும் தொல்லை மேல் தொல்லையளித்து வந்தனர்.  

இவர்களை எச்சரிக்கவே  தொண்டைமான் படையுடன்  வந்தான்! வரும் வழியில் தன் படைகளை முன்பே அனுப்பி ஓர் அடர்ந்த வனத்தில் தங்க வைத்து இருந்தான். "சோழம்பேடு' என்னும் பகுதியில் அவன்  தங்கினான். படைவீரர்கள் தங்கி இருக்கும்   இடத்தில்  தங்கள் அரசனுக்கும் தங்களுக்கும் வெற்றி கிட்ட வேண்டும் என்பதற்காக மகா சக்தியை நிறுவி வழிபட்டு வந்தனர். 

போர் செய்வதற்குச் சேனைகளைக்கொண்டு வரத்திரும்பிய தொண்டைமான் யானையின் காலில் முல்லைக்கொடிகள் சிக்கிக்  கொள்ள, மன்னன் தன் உடைவாளால் கொடிகளை  வெட்டினான். உள்ளிருந்த சிவலிங்கத்திலிருந்து ரத்தம்  வெளிப்பட்டது. மன்னன் தன் சிரத்தைக் கொய்துகொள்ள முனைந்தபோது இறைவன் தோன்றி தடுத்து,  "தான் வெளிப்பட வேண்டிய காலமாதலாலும் தனக்கு திருக்கோயில் அமைய வேண்டிய காலமாதலாலும் இவை நடந்தன.  திருநந்திதேவர் துணையுடன் சென்று வாகைசூடிவா' என்றார். இறுதியில்  தொண்டைமான் வென்றான். படைவீட்டில் தங்கியிருந்த மக்கள் அங்கு நிறுவப்பட்டிருந்த மகா சக்தியை வணங்கிக் கொண்டாடினர்.  

தொண்டைமான் இறைஅருளால் ஓணன்,காந்தன் என்னும் அசுரர்களை வென்றான். ஓணகாந்தர்கள் கோட்டையிலிருந்த எருக்கந்தூண்களை திருமுல்லைவாயில் அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் சந்நிதியின் முன்புறம் நிறுவினான். வெங்கலக் கதவையும் பவழத்தூண்களையும் திருவொற்றியூர்கோயிலில்  கொண்டு நிறுவினான். இவ்வசுரர்களே, பின்னர் தங்கள் பாவம் நீங்குவதற்காக  காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள். அத்திருக்கோயிலே காஞ்சியில் உள்ள "ஓணகாந்தன்தளி' எனப்படுகிறது. 

இந்த வரலாறு விஜய நகர மன்னன் வீர அரியராயனுக்குச் சொல்லப்பட்டது. மன்னனும் மகிழ்ச்சியுடன்  பாடி வீட்டிலிருந்த அம்மன் ஆதலால்  "பாடி' என ஊருக்குப் பெயரும்;  படைகளுக்கு அருள்புரிந்து வெற்றியைத்தரும் அம்மனாக இருந்தபடியால் "படைவீட்டம்மன்'  என்னும் பெயரிட்டு போற்றினான். தற்போது பாடிபடவட்டம்மன் கோயில் என வழங்கப்படுகிறது.  

அளவிலா அற்புதங்கள் நிகழ்ந்து  அம்மனின் சக்தி வெளிப்படுத்தும் திருக்கோயில் இதுவாகும். 2001- ஆம் ஆண்டு திருக்கோயில் கும்பாபிஷேகம் முடிந்து சில மாதங்களில் இரவு திடீரென சாலையில் இருக்கும் கோயிலுக்குள் நுழைந்து திருட முயன்றனர். இரவுக் காவலர் போராட  காவலரைக் கொன்று உண்டியலைத் திருடிச்சென்றனர். புலன்விசாரணை துவங்கியவுடனே திருடர்கள் தானேவந்து அகப்பட்டுக்கொள்ள வைத்தவள் பாடி படவட்டம்மன்.

வருடத்திற்கு ஒருமுறை ஆடி மாதம்  5-ஆம் வாரம் ஞாயிற்றுக்கிழமையில் புஷ்ப அலங்காரம்,  வாணவேடிக்கை,  நையாண்டிமேளம்,  ராஜமேளம், கரகாட்டம், சிறப்பு மேளவாத்தியம் நாதசுரத்துடன் அம்மன் திருவீதி உலா நடைபெறும். இவ்வாண்டு ஆகஸ்ட் 15, அன்று பிரார்த்தனையும் 18 - ஆம் தேதி காப்புக்கட்டலும். 19 - ஆம் தேதி சக்திகரகம் ஊரெல்லாம் சுற்றிவருவதும்  20 - ஆம் தேதி 1008 பால்குடம் எடுத்தல், 12.00 மணிக்குக் கூழ்வார்த்தலும். பிற்பகல் 2.00 மணிக்கு அபிஷேகம் இரவு 9.00 மணிக்கு திருவீதி புறப்பாடும் நடைபெறுகின்றது.   

சென்னை, பாடியில் லூகாஸ் - டி.வி.எஸ். நிறுவனத்திற்கு அருகில் சென்னை - திருவள்ளூர்  நெடுஞ்சாலையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.   
தொடர்புக்கு: 72995 05767.
- ஆர். அனுராதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com