ஹஜ் கடமை கள தளங்கள்

ஹஜ் இஸ்லாமியர்களின் ஐந்தாவது இறுதி கடமை. உறுதியாக நான்கு கடமைகளை முறையாக நிறைவேற்றிய பின் முதல் இறை இல்லமாம் கஃபா அமைந்துள்ள
ஹஜ் கடமை கள தளங்கள்

ஹஜ் இஸ்லாமியர்களின் ஐந்தாவது இறுதி கடமை. உறுதியாக நான்கு கடமைகளை முறையாக நிறைவேற்றிய பின் முதல் இறை இல்லமாம் கஃபா அமைந்துள்ள மக்கமா நகருக்குச் செல்ல வேண்டும். உடல்நலமும் பொருள் வளமும் உள்ளவர்களுக்கே இக்கடமை. மற்றவர்களுக்கு இக்கடமை கட்டாயம் இல்லை.

மினா: இவ்வாண்டு, துல்ஹஜ் மாதம் 24.8.2017 இல் பிறக்கிறது. துல்ஹஜ் பிறை எட்டில் இஹ்ராம் என்னும் தையல் இல்லாத இரு துண்டுகளில் ஒன்றை இடுப்பில் கட்டிக்கொண்டும் மற்றொன்றை மேலே கழுத்து வரை போர்த்திக் கொண்டும் மக்காவிற்குக் கிழக்கே 7 கி.மீ. தொலைவில் உள்ள மினாவிற்குச் சென்று அன்றிலிருந்து  மறுநாள் காலை வரை அங்கு தங்கி இறை வணக்கத்தில் ஈடுபட வேண்டும். பின் பிறை 10,11,12 ஆகிய நாள்களில் மீண்டும் மினாவில் தங்கி புரியும் கடமைகள்.  பிறை பத்தில் பெரிய சாத்தானுக்கு ஏழு கற்கள் எறிய வேண்டும்.  குர்பானி கொடுக்க வேண்டும். தலைமுடி களைந்து குளித்து இஹ்ராம் உடை மாற்றி சாதாரண உடைக்கு மாறலாம். பிறை 11,12 இல் சாத்தானுக்கு முறைப்படி கல் எறிய வேண்டும். இப்ராஹீம் நபி அவர்களின் மகன் இஸ்மாயில் நபியை இறைவனுக்குப் பலியிடுவதைத் தடுத்து தடை  செய்த  சாத்தானைக் கல்லெறிந்து விரட்டியதைப் போல் முஹம்மது நபி (ஸல்)  அவர்களும் கல் எறிந்து காட்டிய வழியில் நாமும் கல் எறிகிறோம். மக்கள் கூடும் இடங்களைமினா என்றழைப்பது அரபு வழக்கு. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மினாவில் தொழுத இடத்தில் கட்டப்பட்டது கைப் மசூதி. அம் மசூதியில் குறிப்பிட்ட நான்கு நாள்களிலும் பேணி வழிபாடு செய்யும் வாய்ப்பை என் 2002 ஹஜ் பயணத்தில் பெற்றேன். இந்த மசூதி கட்டப்பட்ட இடத்தில் எழுபது நபிமார்கள் ஹஜ் காலங்களில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.  மினாவில் உள்ள ஊளா, உஸ்தா, அகபா ஆகிய இடங்களில்தான் இப்ராஹீம் நபி சாத்தானைக் கல்லால் அடித்தார்கள்.  

அரபா:   பிறை ஒன்பதில் சுபுஹு (வைகறை) தொழுதபின் அரபாவிற்குச் செல்ல வேண்டும். அரபாவில் மாலை மயங்கும் வரை தங்கி ஞாலம் ஆளூம் அல்லாஹ்வோடு சங்கமம் ஆகி யோக நிலையில் தாகித்து தண்ணீர் கேட்பவன் போல தயாளன் அல்லாஹ்வின் அருளை வேண்ட வேண்டும். அறியாமை, ஆணவ இருளிலிருந்து ஒளிபெற இறைஞ்ச வேண்டும். அண்ணல் நபி (ஸல்)  அவர்கள் அரபாவில் தங்கியிருந்த இடம் ஜபலுர் ரஹ்மத். பிரிந்த ஆதம் நபியும் அன்னை ஹவ்வாவும் மீண்டும் சந்தித்த இடமே அரபா. அரபாவில் தான் ஹஜ்ஜின் வழிமுறைகள் இப்ராஹீம் நபிக்கு அறிவிக்கப்பட்டது. அரபா மைதானத்தில் மனமொன்றி ஈடுபடும் வழிபாடு பாவ கறை நீக்கி குறைபோக்கி ஹாஜிகளைப் புனிதம் ஆக்கும். ஹஜ்ஜின் கடமைகளில் முக்கியமானது அரபா வழிபாடு. அரபாவில் உள்ள மசூதி - நமீரா. 

முஜ்தலிபா:    பிறை பத்து இரவு துவங்கியதும் அரபாவிலிருந்து முஜ்தலிபாவிற்குச் செல்ல வேண்டும். சுபுஹு தொழுகை வரை வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதோடு சாத்தானைச் சாட கல்லைப் பொறுக்கி எடுக்க வேண்டும். முஸ்தபாவில் உள்ள மசூதி மஸ் அருல் ஹராம். மாநபி (ஸல்) அவர்கள் தங்கிய இடத்தில் இம்மசூதி கட்டப்பட்டுள்ளது. இம்மசூதியின் பரப்பளவு 5040 சதுரஅடி.

கஃபா:   பிளை 12 இல் மக்கா சென்று தவாபேஜியாரா செய்ய வேண்டும். மக்காவிலுள்ள கஃபாவை ஏழுமுறை சுற்றுவது தவாப். ஹஜ்ஜில் சுற்றுவது தவாபே ஜியாரா. நிலநடு கோட்டில் தெற்கே 21-25-19 பாகை சாய்வாகவும் கிழக்கே 39-49-42 பாகை உயரத்திலும் உள்ளது மக்கா. அணு வெடிப்பிற்குப் பின் முதன்முதல் உருவான நில தலம். மக்காவிற்குப் பதினொரு சிறப்பு பெயர்களைப் பகிர்கிறது அகமிய அருள் தரும் குர்ஆன். மக்காவில் உள்ள கஃபா ஆதம் நபி படைக்கப்படுவதற்கு முன்னரே பூமியில் கட்டப்பட்டு வானவர்களால் தவாப் சுற்றப்படுகிறது. ஆதம் நபி வானவர் ஜிப்ரயீல் பிற வானவர்களின் உதவியுடன் சிவப்பு மரகத கல்லினால் கட்டப்பட்ட கஃபா பின் வானுக்கு உயர்த்தப்பட்டது.

ஷீது நபி கல்லாலும் களிமண்ணாலும் கட்டிய கஃபா நூஹ் நபி காலத்தில் ஏற்பட்ட வெள்ள பிரளயம் வரை இருந்தது. மீண்டும் அதே இடத்தில் அடையாளம் கண்டு இப்ராஹீம் நபியும் இஸ்மாயில் நபியும் கட்டியதைக் குர்ஆனின் 2-127 ஆவது வசனம். " இப்ராஹீமும் இஸ்மாயிலும் அவ்வீட்டின் அடித்தளங்களை உயர்த்திய பொழுது'' என்று கூறுகிறது. பின்னர் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) ஹஜ்ஜாஜ் பின் யூசுப், மஹ்தீ பின் அபூஜஃபர் அல்மன்சூர் முதலியோரைத் தொடர்ந்து இன்றைய சவூதி அரசர்களும் கஃபாவைப் புதுப்பித்தும் பராமரித்தும் பாதுகாக்கின்றனர். தவாப் முடிந்து கஃபாவின் முன்னுள்ள மகாமே இப்ராஹீமுக்கு எதிரில் இரு  ரக் அத்துகள் நபில் தொழவேண்டும். மகாமே இப்ராஹீம் என்பது இப்ராஹீம் நபி நின்று கஃபாவை கட்டும்பொழுது அவர்களின் கால்பாதம் பதிந்த கல்.

ஜம் ஜம், ஸபா, மர்வா மலைகள்:   வயிறு நிறைய நீர் குடிக்க வேண்டும். ஜம் ஜம் தாகம் தீர்க்கும் உணவாகும்; இறப்பு நீங்கலாக இவ்வுலகில் நிலவும் எல்லா நோய்களுக்கும் ஏற்ற மருந்து. அதன்பின் ஸபா, மர்வா, மலைகளுக்கு இடையே ஏழுமுறை இங்கும் அங்கும் செல்ல வேண்டும். இச்சுற்று ஸயீ எனப்படும். ஸயீ  ஸபாவில் துவங்கி மர்வாவில் முடியும். இறைவன் இட்ட கட்டளைப்படி இப்ராஹீம் நபி அவர்களின் மனைவி ஹாஜராவையும் அவர்களின் மகன் கைக் குழந்தை இஸ்மாயில் நபியையும் தன்னந்தனியே விட்டு சென்றார்கள்.  கையிலிருந்து உணவு தீர்ந்தது. பச்சிளங் குழந்தை பசியாலும் தாகத்தாலும் அழ, அன்னை ஹாஜரா நீர் தேடி ஸபா, மர்வா மலைகளுக்கு இடையே ஓடினார்கள். இவ்வரலாற்றின் பின்னணியில் நிறைவேற்றப்படுவதே ஸயீ கடமை. மகனின் காலடியில் நீர் பீறிட்டு ஓடுவதைக் கண்டு சிறு தடுப்பு கட்டி ஜம் ஜம் (நில் நில்)  என்று சொல்லி நிறுத்திய நீர் ஊற்றே அன்றிலிருந்து இன்றுவரை வற்றாது ஊறி வரையாது வழங்கும் பொற்புடைய ஜம் ஜம். ஸயீ ஓட்டத்துடன் ஜந்தாம் கடமை ஹஜ் அல்லாஹ்வின் அருளால் நிறைவேறும். 

ஹஜ்ஜில் உலகின் பல நாடுகளிலுமிருந்து வரும் பல லட்சம் இஸ்லாமியர்கள் இன மொழி, நிற வேறுபாடு இன்றி சகோதர நேயமுடன் நேசமாய் பழகுகின்றனர். அதே உலக சகோதரத்துவத்தை வாழ்வில் கடைப்பிடித்து உலக அமைதியை உருவாக்குவோம். 
- மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com