காசினி போற்றும் கார்த்திகை விளக்கு!

கார்த்திகையின் போது வீடுகளிலும் தெருக்களிலும் விளக்குகளை ஏற்றுவதோடு உயரமான மலை முகடுகளிலும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாவாகக் கொண்டாடுவது
காசினி போற்றும் கார்த்திகை விளக்கு!

கார்த்திகையின் போது வீடுகளிலும் தெருக்களிலும் விளக்குகளை ஏற்றுவதோடு உயரமான மலை முகடுகளிலும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாவாகக் கொண்டாடுவது தமிழ்நாட்டின் தொன்றுதொட்ட வழக்கமாக உள்ளது.
தெருக்களிலும் வீடுகளிலும் விளக்குகளை ஏற்றுவதோடு மலைமுகடுகளில் விளக்குகளை ஏற்றுவானேன்? என்பது சிந்தனைக்குரியதன்றோ! அதிலும் ஏனைய எந்த மாதங்களிலும் இல்லாமல் கார்த்திகையில் மட்டும் அப்படி ஒரு சிறப்பு வருவானேன்? எனச் சிந்திப்பதும் தேவையாகிறது.
நாட்டில் தொடர்மழை அமைந்தால் நாடு வெள்ளக்காடாய் மாறிவிடும். ஆதலால் கனமழையை பெய்விக்கும் மேகங்களின் மழைக்கூறுகளை மாற்றியமைக்கும் விதமாகவே மேகம் வந்து தவழும் மலை முகடுகளில் பெரிய அகண்ட விளக்குகள் ஏற்றப்பட்டனவோ என எண்ண வேண்டியுள்ளது.
மலைமுகடுகளில் ஏற்றப்பட்ட விளக்கின் குறிப்பு சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அதன் சாயலாக ஒட்டுமொத்த தமிழகத்தின் விளக்கு வழிபாட்டின் மகுடமாகத் திகழ்வது திருவண்ணாமலையின் கார்த்திகைத் தீபமாகும்.
திருவண்ணாமலையில் விளக்கு ஏற்றப்படுவதன் சிறப்பைக் கற்பனைக் களஞ்சியம் நல்லாற்றூர் சிவப்பிரகாசர் பலவகையாகச் சோணாசைல மாலை என்னும் நூலில் பாடியுள்ளார். உலக விளக்குகளெல்லாம் புறஇருளை மட்டுமே நீக்க, இக்கார்த்திகை விளக்கு ஞானமாகிய அக இருளையும் நீக்கும் என்கிறார்.
கடலில் செல்லும் கப்பலுக்கு இரவில் கரையேற வழிகாட்டியாகக் கலங்கரை விளக்கு உள்ளது போன்று இக்கார்த்திகை விளக்கானது ஆன்மாக்கள் முக்தி என்னும் கரை சேரத் தவமாய் படகில் பயணிக்கும்போது கார்த்திகை விளக்கைச் சுமந்ததாகத் திருவண்ணாமலை உயர்ந்து காணப்படுகிறதாம்.
இந்தக் கார்த்திகை விளக்கானது குடத்துள் இட்ட விளக்குபோல் இல்லாமல் உலகியலார் கூறுகின்ற குன்றிட்ட விளக்குபோல் எனக் கூறுவதற்குப் பொருத்தமான மலை உச்சியில் ஏற்றப்படுகிறதாம்.
மேலும் செழுமையான செந்தாமரை மலர் மலை உச்சியில் பூத்துள்ளது போலக் கார்த்திகை விளக்கானது சோணாசைல மலையுச்சியில் ஒளிர்கிறதாகச் சிவப்பிரகாசர் போற்றிப் பாடுகிறார்.
சிவபெருமான் தன் முடியில் பிறைச்சந்திரனைச் சூடியதால் அவரைக் குறைமதியன் எனக் கூறுவதுண்டு. இத்தொடர் பிறையை உணர்த்துவதோடு சிவனைக் குறைந்த மதியுடையவன் (அறிவுடையவன்) எனக் கூறுவது போலவும் உள்ளது. இந்த இரட்டுற மொழிதலான பழியைப் போக்கிக் கொள்ளுமாறு சிவபெருமானின் வடிவிலான மலை, கார்த்திகைத் தீபத்தின் நாளில் முழு நிலவைச் சூடிக்கொண்டு காட்சியளிக்கிறதாம் என்கிறார் சிவப்பிரகாசர்,
ஆங்குறை மதியே தாங்கி என்றுலகம்
அறைகுறை அற, நிறை மதியும்
தாங்கிய முடியோ டோங்கிய சோணசைலனே!
இதில், கார்த்திகைத் தீயநாள் என வெளிப்படையாகக் கூறவில்லையாயினும் நிறைமதியம் தாங்கிய முடியோடு ஓங்கிய மலை என்றதால் வேறு எந்த மாதத்திலும் இல்லாமல் கார்த்திகை மாதத்தில் மட்டுமே இங்ஙனம் அமைவதால் கார்த்திகைத் தீபக்குறிப்பு உணரப்பட்டது எனலாம்.
இந்தக் கார்த்திகைத் தீப நாளை நக்கீரர் அகநானூற்றில் (141) "" மதி நிறைந்து அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள் விழா'' என்றார். இதில், அறுமீன் நாள் என்றது கார்த்திகை நட்சத்திர நாளைக் குறிப்பதாகும். அன்றுதான் நிறைநிலா அமையும்.
மேலும் "களவழி நாற்பது' என்ற நூலில் பொய்கையார், "" கார்த்திகைச்சாற்றில் கழி விளக்கு போன்றவே'' என்று போர்க்களத்தில் குருதியாற்றில் மிதக்கும் பிணக்குவியலின் ஓட்டத்தை வரிசையான கார்த்திகை விளக்காக உள்ளதாய்க் கூறினார். இப்படியாக, காசினி போற்றும் கார்த்திகை விளக்கு உள்ளதாக இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
- தெ. முருகசாமி



 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com