பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

நாம் ஒரு செயலை உற்சாகத்துடன் தொடங்கிச் செய்யும்போது கவலைக்கு இடம் கொடுத்தால், அது நம்மை மேற்கொண்டு நமது முயற்சிகளைச் செய்யவிடாமல் அழித்துவிடும்.
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

* மனதில் கவலை குடிகொள்ளும்படி எப்பொழுதும் விடக்கூடாது. கவலைப்படுவதால் பல கெடுதல்கள் ஏற்படும். நாகப்பாம்பை ஓர் அறியாத குழந்தைக் கோபமூட்டினால் எப்படி அது அந்தக் குழந்தையைக் கடித்துக்கொல்லுமோ, அப்படியே கவலையும் சீக்கிரத்தில் மனிதனை அழிக்கும்.

* நாம் ஒரு செயலை உற்சாகத்துடன் தொடங்கிச் செய்யும்போது கவலைக்கு இடம் கொடுத்தால், அது நம்மை மேற்கொண்டு நமது முயற்சிகளைச் செய்யவிடாமல் அழித்துவிடும்.

* கவலையால் நமது தேஜஸ் அடங்கினால் எந்தக் காரியம்தான் கைகூடும்?
- ராமாயணத்தில் அங்கதன்

* இறைவனை வணங்கி வழிபட்டாலன்றிப் பொய், பொறாமை முதலிய தீய குணங்களை அகற்ற முடியாது. 
- இராமலிங்க அடிகளார்

* நா தழுதழுக்க உள்ளம் கசிந்து நாணமின்றிச் சில சமயம் மிகுதியாக அழவோ சிரிக்கவோ, உரக்கப் பாடவோ ஆடவோ செய்யும் என் பக்தன் உலகத்தையே தூய்மையாக்குகிறான்.
- ஸ்ரீ கிருஷ்ண பகவான்

* பிறரை நிந்தனை செய்வதன் மூலமாக ஒருவன் தனது மதிப்பைத் தேடக் கூடாது. தன்னுடைய நல்ல குணங்களினாலேயே ஒருவன் மேன்மையைத் தேடிக்கொள்ள வேண்டும்.
- மகாபாரதத்தில் பீஷ்மர் 

* கர்மவசத்தால் ஜீவனுக்கு துக்கம் ஏற்படுவது இயற்கை. ஆனால் அது விலகுவதற்கு மகான்களுடைய அனுக்கிரகமே முக்கிய காரணமாகும். மகான்களுக்கு அத்தகைய சக்தியானது ஸ்ரீ பகவானை இதயத்தில் தியானம் செய்வது, நாமசங்கீர்த்தனம் செய்வது முதலியவற்றால் உண்டாகிறது. 
- பாகவதம்

* நல்ல தேன் நாவிற்கு மட்டும் இனிக்கும். ஆனால் சர்வேஸ்வரன் இணையடி மலரில் பொங்கியெழும் அருள்தேனோ, நினைக்கும் மாத்திரத்தில் மனதில் இனிக்கும். கண்ணுறும் கண்களில் இனிக்கும், உடம்பினுள்ளே உள்ள எலும்புகளும் நெக்குருகும்படி இனிக்கும். ஆகையால், இந்த ஒப்பிலா நறுந்தேனை அருந்த விருப்பம் கொள்ளுங்கள். தினையளவு தேனிருக்கும் பூவில் நாட்டம் மிகக்கொள்ளாதீர்கள். ஈசனின் பாதமலர்களில் சென்று இன்னிசை பாடுங்கள். அங்கு பொங்கித் ததும்பும் ஆனந்த அருட்தேனை அள்ளி அள்ளி அருந்துங்கள். உருவமற்ற அருவத்தால் ஆனந்தமயமாவீர்கள். 
- மாணிக்கவாசகர்

* ரகசியமாக வாய்க்குள் சிரித்துக்கொள்வது, செய்த உதவிக்கு மாத்திரம் நல்லது செய்வது, நாம் ஏதாவது நம்மையறியாமல் கெட்ட காரியம் செய்திருந்தால் அதை மறக்காமல் மனதில் வைத்துக்கொண்டிருப்பது இந்த மூன்றும் கெட்ட நண்பர்களுக்கு உரிய அடையாளங்களாகும்.
- கவி சுந்தரபாண்டியன்

* ஓர் உண்மையான பக்தன் சித்தி அடைவானாகில், அவனுடைய பதினான்கு தலைமுறைகள் சித்தி அடையும். யார் வண்டிச்சக்கரம் போன்று தொடர்ந்து வரும் தன் பிறவிக்கு முடிவு கட்டி இறைவனுடன் ஐக்கியம் அடைகிறானோ, அவனே உண்மையான பக்தன்.
- மும்முடிவரம் பாலயோகி 

* காட்டில் வானளாவி நிற்கும் மூங்கில் தீப்பிடித்து காடு முழுவதும் அழிப்பதைப்போல், ஒருவனிடம் தோன்றும் பேராசை அவனை முழுவதும் அழித்துவிடும்.
- கம்பர் தரும் உவமை

* என்னை கண்டித்துத் திருத்துகிறவர்கள், என்னுடைய பாதுகாவலர்களாக இருக்கட்டும்! என்னை இகழ்கிறவர்கள், என்னுடைய சுற்றத்தாரர்களாக இருக்கட்டும்! 
என்னைச் சுடுசொல்கொண்டு தாக்குகிறவர்கள், என்னுடைய பெற்றோர்களாக இருக்கட்டும்! என்னை கேலியும், ஏளனமும் செய்கிறவர்கள் என்னுடைய உடன்பிறந்தவர்களாக இருக்கட்டும்! ஆனால், என்னைப் பொய்யானப் புகழுரையால் போற்றி முகஸ்துதி செய்கிறவர்கள், என்னைத் தங்கத்தால் செய்த கழுமரத்திற்குக் கொண்டு சென்று ஏற்றுபவர்களாக இருக்கட்டும்! 
- பசவேசர் (வீர சைவம்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com