மணக்கோலத்தில் அருளும் மங்கள சனீஸ்வரர்!

மணக்கோலத்தில் அருளும் மங்கள சனீஸ்வரர்!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து 25 கி. மீ. தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது விளாங்குளம் கிராமம். இவ்வூரில் அமைந்துள்ள

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து 25 கி. மீ. தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது விளாங்குளம் கிராமம். இவ்வூரில் அமைந்துள்ள அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில் சனிபகவான் தனி சந்நிதியில் தம் தேவியரோடு ஆதிபிருஹத் சனீஸ்வரர் எனும் மங்களசனீஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். வரும், 19-12-17 அன்று சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்க இருப்பதை முன்னிட்டு சனிப்பெயர்ச்சி விழா இவ்வாலயத்தில் சிறப்புற நடைபெறுகின்றது. 
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியெங்கும் மகாபிரளயம் உண்டாகும். பூமியில் உள்ள உயிரினங்கள் மறைந்து மீண்டும் தோன்றும். அப்படி ஒரு பிரளய கால முடிவில் பூமியில் மீண்டும் உயிரினங்கள் தோன்றவும், மனித குலம் தழைக்கவும் ஒரு வைகாசி மாத திருதியை நன்னாளில் பூவுலகில் விளங்கும் கிராமத்தில் இறைவன் அட்சயபுரீஸ்வரராக தோன்றினார். அவருக்கு துணையாக இறைவி அபிவிருத்தி நாயகியாக வந்தமர்ந்தார். அது முதல் கொண்டு இத்தலம், அனைத்தையும், பெருக்கும் அபிவிருத்தி செய்யும் தலமாகவும், அட்சய திரிதியை தலமாகவும் விளங்கி வருகிறது.
நவக்கிரகங்களில் சனிபகவான் பெயரைக் கேட்டாலே அனைவரும் அச்சப்படுவார்கள். ஆனால் சனிபகவான் ஒரு நீதிமான். தவறு செய்பவர்களுக்குத் தண்டனை அளிப்பதில் நீதி நெறி தவறாதவர். சூரியன் - சாயாதேவி தம்பதியருக்கு மகனாக சனிபகவான் தோன்றினார். பிள்ளைகள் வளர்ந்து வரும்போது யமனுக்கும் சனிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு ஒரு கட்டத்தில் யமன் சனிபகவானின் ஒரு காலைத் துண்டித்துவிட்டார். அதனால் வருத்தமடைந்த சனி பகவான், தன் கால் ஊனம் நீங்க வேண்டி மனித உருவில் பூமியெங்கும் சுற்றித்திரிந்தார்,
அப்படி திரிந்த போது விளாமரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் நுழைந்தார். அங்கிருந்த விளாமரத்தின் வேர் தடுக்கி கீழே பள்ளத்தில் விழுந்தார். அந்நாள் ஒரு பொன்னாள். சித்திரைத் திங்கள் பூசம் நட்சத்திரம். வளர்பிறை திருதியை திதியுடன் கூடிய சனிக்கிழமை சனிபகவான் விழுந்த இடத்தில் பல யுகங்களாக மறைந்திருந்த பூசஞானிவாவி என்ற தீர்த்தம் பீரிட்டுக் கிளம்பியது. அட்சயபுரீஸ்வரர் அருளால் சனி பகவானின் ஊனம் நீங்கி, சனிபகவானை தீர்த்தம் மேலே எழுப்பிக்கொண்டு வந்தது. அட்சயபுரீஸ்வரர் அருளால் தன் ஊனம் நீங்கிவிட்டதை உணர்ந்து சனிபகவான் அவரை வழிபட்டார். சிவபெருமான் அவருக்கு திருமண வரம் வழங்கி மந்தா, ஜேஷ்டா தேவியரை திருமணம் செய்து கொள்ள அருள் வழங்கினார். அது முதல் கொண்டு இத்தலத்தில் தம் இரு மனைவியருடன் திருமணக்கோலத்தில் அமர்ந்து சனிபகவான் அருள் வழங்கி வருகிறார். 
விளாமரங்கள் அதிகம் இருந்ததால் அவ்வூர் விளாங்குளம் எனப் பெயர் பெற்றது. பிரளயம் முடிந்து மனித இனங்கள் தோன்றுவதற்கு முன் பூவுலகில் பகவான் முதன் முதல் அமர்ந்த தலம் இது. பிருஹத் என்றால் பெரிய என்று பொருள். எனவே, ஆதியில் தோன்றிய பெரிய சனீஸ்வரர் என்று பொருள்படும்படி ஆதிபிருஹத் சனீஸ்வரர் (மங்கள சனீஸ்வரர்) என்று இவர் அழைக்கப்படுகிறார்.
சனிபகவான் கால் ஊனம் நீங்கவும் திருமணம் நடைபெறவும் இறைவன் அருளியதால் இத்தலத்தில் தம் தேவியரான மந்தா, ஜேஷ்டாவுடன் மணக் கோலத்தில் எழுந்தருளியுள்ளார். சனி பகவான் பரிகார நாயகராக, சனி தோஷம் தீர்த்து சங்கடங்கள் போக்குபவராக தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
27 நட்சத்திரங்களில் பூச நட்சத்திரத்திற்கு உரிய தலமாக இது விளங்குகிறது. பூச மருங்கர் எனும் சித்தர்பிரான் வழிபட்ட தலம் இது. மேலும் சனிப்பரணிசித்தர் என்பவர் முன் யுகத்தில் இத்தலத்தில் தோன்றி பிரபஞ்சத்தில் அனைத்து பித்ரு, சாபங்களும் நீங்க அருள்புரிந்த தலம். இன்றளவும் சனிப்பரணி சித்தரும், பூச மருங்க சித்தரும் ஸ்தூல சூக்கும வடிவில் இத்தலத்தில் வழிபடுவதாக தல வரலாறு சொல்கிறது. 
எனவே, பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், சனிக்கிழமையில் பிறந்தவர்களும் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது வந்து வழிபட வேண்டிய தலம் இது. அருள்மிகு ஆதி பிருஹத் சனீஸ்வரனின் நட்சத்திரம் பூசம். எனவே, இங்கு வந்து வழிபடுவதால் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாலயத்தில் 19-12-2017 அன்று சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிப்பதை முன்னிட்டு சனிப்பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. காலை முதல் மாலை வரை சனிபகவானுக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து, 24.12.2017 அன்று லட்சார்ச்சனையும் 30.12.2017 மற்றும் 31.12.2017 தேதிகளில் பரிகார ஹோமங்கள் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு : 94437 53808 / 089404 06877.
- பி.எஸ். கவியரசு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com