விருப்பத்தை நிறைவேற்றும் ஸ்ரீஆதிமூலேஸ்வரர்!

திருச்சி மாநகரத்தின் கிழக்கே அமைந்துள்ள திருத்தலங்களில் திருஞானசம்பந்தமூர்த்தியால் 59 ஆவது தலமாக தேவாரப்பதிகம் பெற்று விளங்குவது திருப்பாற்றுறை என்னும் சிற்றூராகும். 
விருப்பத்தை நிறைவேற்றும் ஸ்ரீஆதிமூலேஸ்வரர்!

திருச்சி மாநகரத்தின் கிழக்கே அமைந்துள்ள திருத்தலங்களில் திருஞானசம்பந்தமூர்த்தியால் 59 ஆவது தலமாக தேவாரப்பதிகம் பெற்று விளங்குவது திருப்பாற்றுறை என்னும் சிற்றூராகும். 
சோழமன்னன் ஒருவன் கொள்ளிட ஆற்றின் தென்கரையில் வரும்போது, காடாக இருந்த இவ்வூரில், புதர் ஒன்றிலிருந்து வெண்மையான பறவை ஒன்று பறந்து சென்றதைப் பார்த்தான். அப்பறவை பார்ப்பதற்கு மிக அழகாகவும், வினோதமாகவும், வசீகரமாகவும் இருந்தது. பறவை வெளிப்பட்ட இடத்தில் அவன் மனம் ஈர்க்கப்பட்டு அதன் அருகில் சென்றான். 
நறுமணம் கமழ்ந்தது. 
காவல்காரர்களை விட்டு அவ்விடத்தைத் தோண்டச் செய்தான். புதையுண்டிருந்த சுவாமியின் சிரசில் மண்வெட்டி பட்டு, அதிலிருந்து பால்பெருகி ஒடுவதைக் கண்ட மன்னவன் மனம் பதைத்து, அச்சிவலிங்க மூர்த்திக்கு அங்கேயே திருக்கோயில் கட்டி வழிபாடுகள் பல சிறப்புறச் செய்தான். 
இவ்வாலயம் முதற்பராந்தகச் சோழனால் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாக இத்திருக்கோயிலின் கல்வெட்டுக்களிலிருந்து தெரியவருகிறது. ஈசனை தனி வில்வம் கொண்டு ஆயிரத்தது எட்டு நாமங்களால் அர்ச்சித்தும் திருஞானசம்பந்தரின் பாடல்களைப் பாடி பூஜிப்பதால் அவரவர் தம் மனோபீஷ்டம் சித்தியடையும் என்பதில் ஐயமில்லை எனவும் கூறப்படுகிறது. 
சூரிய பகவான், தட்சிணாய, உத்தராயணக் காலத்தில் புரட்டாசி 3 ஆம் தேதியும், பங்குனி மாதம் 3 ஆம் தேதியும் சூரிய ஒளிக்கதிர் ஆதிமூலேஸ்வரர் சிரசின் மேல் தம் ஒளிக்கதிர்களை மேலிருந்து கீழாகப் படரவிட்டு வணங்கியுள்ளார். (தற்போது ஒளிக்கதிர் படுவதில்லை) இத்தலத்தில் எழுந்தருளிய மார்க்கண்டேயர் பூஜைக்குப் பால் இல்லாமல் வருந்தியபோது இம்மூர்த்தியின் சிரசில் பால்பெருகி ஒடியது கண்டு மனம் நெகிழ்ந்து இவ்விறைவனை வழிபட்டுச் சென்றுள்ளார்கள். 
ஸ்ரீசண்முக சுவாமிகள் என்ற சித்தர் ஒருவர் இத்தலத்தில் பல ஆண்டுகளாக தங்கி வழிபட்டு இறைவனருளால் பல அன்பர்களுக்கு ஏற்பட்ட நோய்கள், பிள்ளைப்பேறின்மை, இழந்த பொருளை மீண்டும் அடையவும் என பல நன்மைகள் செய்து பரிபாலித்துள்ளார்கள்.
இவ்வாலயத்தின் அம்பாள் சந்நிதியின் மஹா மண்டபத்தின் வடமேற்குத்திசையில் உள்ள சுவரில் எழுந்தருளியுள்ள "அனுக்ஞை விநாயகர்' என்னும் "நர்த்தன விநாயகரை' விசேஷ பூஜைகள் செய்து பிரார்த்தித்து வணங்கியவர்களுக்கு அவரவர் நினைத்த காரியங்கள் நிறைவு பெற்று பேரானந்தமடைகின்றனர் என்பது 
சிறப்பாகும்.
முதற்பராந்தகன் பரகேசரி வர்மனான விக்ரம சோழன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தனவாகும். அதன்படி, இறைவன் "திருப்பால்துறை மகாதேவர்', "திருப்பால்துறை நாயனார்', "திருப்பால்துறை உடையார்' என்றும் வழங்கப்படுகிறார். கல்வெட்டு குறிப்பாளர் ஆதிமூலேஸ்வரர் என்றும் அழைக்கின்றனர். 
நந்தி, பலிபீடங்கள் மதில்சுவருக்கு வெளியே அமைந்துள்ளன. மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் கோயிலுக்கு அழகுபட அமைக்கப் பட்டுள்ளது. 
கோபுரவாயிலில், தென்புறம் காவல் தெய்வம் கருப்பரும், ஸ்ரீவிநாகயரும் வடபுறம் ஸ்ரீபாலதண்டாயுபாணியும் உள்ளனர். கோபுர வாயிலைக் கடந்தவுடன் முன்மண்டபம், தொடர்ந்து மேற்கு பிரகாரத்தில் ஸ்ரீவிநாகயர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத முருகர், ஸ்ரீகஜலெட்சுமி கோயிலும், வடக்கு பிரகாரத்தில் ஸ்ரீசண்டேசர் கோயிலும், கிழக்கே பைரவர், நவக்கிரக மண்டபங்களும் உள்ளன. 
கர்ப்பகிரகக் கோஷ்டத்தின் வெளிப்புறம் தெற்கே பிட்சாடனரும், வீணா தட்சிணாமூர்த்தியும், மேற்கே சங்கரநாராயணரும் வடக்கே பிரம்மா, விஷ்ணு துர்க்கை சிற்பங்களும் அழகுபட காட்சியளிக்கின்றன. 
பொதுவாக, மேற்கே லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர் சிலை தான் இருக்கும். இக்கோயிலில் சங்கரநாராயணர் சிற்பம் இருப்பது சிறப்பான அமைப்பாகும். ஆலய மூலலிங்கம், ஆதிமூலநாதர் என வழங்கப்படுகிறார். அம்பாள் நித்யகல்யாணி என்றும் பாடலில் மேலாம்பிகை, மோகநாயகி என்றும் அழைக்கப்படுகிறார். 
வழித்தடம்: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவானைக்காவல் வழியாக கல்லணை போகும் பேருந்தில் ஏறி பனையபுரம் நிறுத்தத்தில் இறங்கி கோயிலுக்கு நடந்து செல்லவேண்டும். 
தொடர்புக்கு-98431 72233.
- பொ.ஜெயச்சந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com