தேடிவரும் இறைவன்! 

"கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறியவில்லை'' (லுக்கா 19:44) ஆம், நம் வாழ்விலும் இந்த இறைவாக்கின் யதார்த்தத்தை அநேக நேரங்களில் நாம் உணர்ந்து கொள்வதில்லை.
தேடிவரும் இறைவன்! 

"கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறியவில்லை'' (லுக்கா 19:44) ஆம், நம் வாழ்விலும் இந்த இறைவாக்கின் யதார்த்தத்தை அநேக நேரங்களில் நாம் உணர்ந்து கொள்வதில்லை. எப்போது இறைவன் நம்மைத் தேடிவந்தார்? எப்போது நாம் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்தோம்? என்ற கேள்விகள் எழுவது இயல்பு. 
நம்மைப் பயனுள்ள, பண்புள்ள மனிதர்களாக வளர்க்க பெற்றோர், ஆசிரியர், உறவினர், குருக்கள் என பலரையும் அனுப்புகிறார் கடவுள். அவர்கள் கடவுளின் சார்பாக நமக்கு ஆலோசனைகளை, நற்போதனைகளை நற்பழக்க வழக்கங்களை கற்பிக்க பாடுபடுகின்றனர். ஆனால் பெரும்பாலான சமயங்களில் இவை ஏற்கப்படுவதில்லை. 
சிலர் பெரியோரது அறிவுரை கேட்டு மீண்டும் நல்வாழ்க்கைப் பாதையில் பயணிக்கத் தொடங்குகின்றனர். ஒரு சிலர் அப்போதும் உணராமல் ஒரு தவற்றை மறைக்க மேலும் சிலவற்றை நாடி தங்கள் முடிவைத் தாங்களே தேடிக்கொள்கின்றனர்.
இறைவன் தம்மைத் தேடிவந்தபோது அவரை ஏற்றுக்கொண்டு மனம் மாறிய சக்கேயு என்பவரைப் பற்றி லுக்கா நற்செய்தியில் வாசிக்கிறோம். சக்கேயு எரிக்கோ நகரைச் சேர்ந்த தலைமை சுங்க அதிகாரி. உரோமை அதிகாரிகளுக்கு யூதர்களிடமிருந்து பணம் வசூலித்துக் கொடுத்து அதன்மூலம் பெரும் செல்வந்தராய் வாழ்ந்து வந்தார். யூதர்களால் பாவி என்று எண்ணப்பட்டு வந்த போதிலும் மனம் மாற சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்த சமயத்தில்தான் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவர் வீட்டருகே வந்த கொண்டிருந்தபோது இயேசுவைச் சந்திக்கச் சென்றார். மரத்தின் மேல் அமர்ந்து கொண்டு இயேசுவைக் காண முயன்று கொண்டிருந்தபோது இயேசு அவரை நோக்கி "சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும், இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்றார்.
சக்கேயு இறங்கி வந்து மகிழ்ச்சியோடு இயேசுவை வரவேற்று தமது வீட்டிற்குக் கூட்டிச் சென்றார். இதைக்கண்ட யாவரும், "பாவியிடம் தங்கப் போயிருக்கிறாரே' என்று முணுமுணுத்தனர். சக்கேயு எழுந்து நின்று, "ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன்; எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்' என்று அவரிடம் கூறினார். இயேசு அவனை நோக்கி, "இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்' என்றார். (லுக்கா 19:1-10)
பாதை மாறி தவறான வழியில் சென்று கொண்டிருக்கும் எவரும் இறைவன் பல வழிகளில் நம்மைத் தேடிவரும் போது மனம் மாறி, தடம் புரண்ட வாழ்வைச் செம்மைப்படுத்த முயல வேண்டும். ஆண்டவரே, மனம் போனபடி செயல்படும் போக்கினை மாற்றிவிடும், தேடிவரும் உம்மை வரவேற்று 
வாழ்வில் நலமும் மகிழ்வும் பெற வழிகாட்டும்!
- பிலோமினா சத்தியநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com