மார்கழி வழிபாடு!

தனுர் மாதம் என்று போற்றப்படும் மார்கழி மாதம் தேவர்களின் விடியற்காலை நேரம். இந்த மாதத்தில் "யார் ஒருவர் பிரம்ம முகூர்த்தத்தில் அதிகாலை 4.30 மணியளவில் எழுந்து, காலைக் கடன்களை
மார்கழி வழிபாடு!

தனுர் மாதம் என்று போற்றப்படும் மார்கழி மாதம் தேவர்களின் விடியற்காலை நேரம். இந்த மாதத்தில் "யார் ஒருவர் பிரம்ம முகூர்த்தத்தில் அதிகாலை 4.30 மணியளவில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து விட்டு, நீராடிய பின், பக்தியுடன் பகவான் ஸ்ரீமந்நாராயணனை வழிபடுகிறார்களோ அவர்கள், ஆயிரம் ஆண்டுகள் பகவானை வழிபாடு செய்த பலன்களை தனுர்மாத ஒருநாள் வழிபாட்டில் பெறுகிறார்கள். அந்த மாதம் முழுவதும் வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் கணக்கில் அடங்காது. மேலும் பல யாகங்கள் செய்வதை விடவும் அனைத்து புண்ணிய நதிகளிலும் தீர்த்தங்களில் நீராடுவதை விடவும் அதிகமான புண்ணிய பலன்களை மார்கழி மாதத்தில் பகவானை மேற்கொள்ளும் வழிபாட்டின் மூலம் பெற முடியும்' என்று புராணங்கள் கூறுகின்றன.
மகத்தான மார்கழியில் சிவ-பார்வதியின் அருளைப் பெறுவதற்காக திருவெம்பாவையையும் பகவான் கிருஷ்ணரின் அருள் பெறுவதற்கு திருப்பாவையையும் அதிகாலையில் ஓதுகின்றவர்கள் விரைவில் இறை அருளைப் பெறுவர் என்கின்றன வேத நூல்கள். 
கன்னியர்கள் தாங்கள் விரும்பும் மணாளனைப் பெறுவதற்கும் திருமணமானதும் தம் கணவனுடன் அன்போடு குடும்பம் நடத்தவும் தம்மை விட்டு பிரியாமல் இருக்கவும் அம்பிகையை வழிபட்டு "காத்தியாயினி நோன்பு மேற்கொள்வதும் மார்கழி வழிபாட்டின் மூலம் பெறமுடியும் என்கின்றன ஆன்மிக நூல்கள்.
பாரதப்போர் நடந்தது மார்கழி மாதத்தில்தான் என்கிறது புராணம். இந்த குருúக்ஷத்திரப் போர்க்களத்தில்தான் அர்ச்சுனன் தன் உறவினர்களான கௌரவர்கள் மீது கடுமையான அஸ்திரங்களை எய்வதற்கு மனம் வரவில்லை என்று போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணரிடம் கூறவே, அர்ச்சுனனுக்கு சாரதியாக இருந்த பகவான் கிருஷ்ணர் உபதேசம் செய்து அவன் மனக்குழப்பத்தைத் தெளிவுபடுத்தினார். அதுவே, பகவத் கீதை என்று போற்றப்படுகிறது. 
சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை. மார்கழி திருவாதிரைத் திருநாளில் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனமும் விசேஷமாக நடைபெறும். திருவாதிரை அன்று ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு திருவாதிரைக் களியை ஏழு காய்கறிக் கூட்டுடன் நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள். அவ்வாறு செய்தால் ஏழு பிறவிகளிலும் இன்பமான வாழ்வு அமையும் என்பது இப்பண்டிகையின் கருத்து. 
மார்கழி மாதம் தட்சிணாயன புண்ணிய காலத்தின் இறுதி மாதமாகும். இம்மாதத்தில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்று கூடுவதாக ஐதீகம்! இந்நாளில் தில்லை நடராஜப்பெருமான் தேரில் வீதி உலா வருவது கண்கொள்ளா காட்சியாக அமையும். 
மஹாவிஷ்ணுவுக்கு உரிய திதி ஏகாதசி! மார்கழியில் வரும் வளர்பிறை ஏகாதசியான வைகுண்ட ஏகாதசியில் விரதம் மேற்கொண்டு பெருமாளையும் ஸ்ரீதேவி, பூதேவியை தரிசிப்பதால் மோட்சம் கிட்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் போன்ற வைணவத் திருக்கோயில்களில் "சொர்க்கவாசல்' திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அன்று பெருமாளுடன் சொர்க்கவாசலைக் கடந்தால் பாபங்கள் அழிந்து புனிதம் சேர்வதுடன் சொர்க்கத்தில் ஓரிடம் கிடைக்கும் என்கின்றன ஆன்மிக நூல்கள். 
""கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா'' இது ஸ்ரீ ஆண்டாள் இயற்றிய திருப்பாவையின் 27 ஆவது பாசுரம். இதைப் பாடியதும் கோதையாகிய ஆண்டாளுக்கு கோவிந்தன் திருமண பாக்கியம் அருளியதாக் கூறப்படுகிறது. இருந்தாலும் சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஸ்ரீ ஆண்டாள், முப்பது பாசுரங்களையும் பாடி முடித்தாள். 
கூடாரவல்லி அன்று பெருமாள் கோயில்களில் குறிப்பாக ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் " முழங்கை வழியே நெய் ஒழுகுமாறு' சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள். இன்று பெருமாளைத் தரிசித்து பிரசாதம் பெற்றால் கன்னியர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் நல்ல கணவன் கிட்டுவார் என்பது ஐதீகம். மார்கழியில் கடைசி நாள், போகிப் பண்டிகை. இந்நாளில் வடநாட்டில் மழைக்கடவுளான இந்திரனை வழிபடுவர். அதேசமயம் பகவான் கிருஷ்ணனையும் வழிபட்டு பேறு பெறுவார்கள்.
- டி.ஆர். பரிமளரங்கன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com